Monday, March 21, 2016

மொழியா திறமையா எது பிரதானம் ?

மொழியா திறமையா எது பிரதானம் ?
- டாக்டர் பாலசாண்டில்யன் 

பாடல் ஆசிரியர் தமிழர் தான் அதனால் அது தமிழ் பாட்டு. இருப்பினும் வெகு ஆண்டுகளாக பாடி நம்மை மகிழ்வித்து வருவது யார் யார் ? பாலமுரளி எஸ் பி பி, டி எம் எஸ், ஏ எம் ராஜா, பி பி ஸ்ரீநிவாஸ், யேசுதாஸ், ஜானகி, மனோ, உன்னிமேனன், உன்னிக்ருஷ்ணன், ஜெயச்சந்திரன், ஸ்வர்ணலதா, சித்ரா, சுஜாதா,  இவர்கள் தவிர ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ் போன்ற பாலக்காட்டுத் தமிழர்கள் கூட நம்மை நல்ல பாடல்கள் மூலம் மகிழ்வித்து உள்ளார்கள். இவர்கள் யாருமே தமிழர்கள் அல்லர். 


அது மட்டுமா? சாதனா சர்கம், அல்கா யாக்னிக், லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, சோனு நிகம், கைலாஷ் கேர், அபிஜித் முகர்ஜி, அனுராதா படுவல் போன்ற மேலும் பல வட நாட்டவர் நமது தமிழ் மொழிப் படங்களில் பாடி நம்மை சந்தோஷப் படுத்தி உள்ளனர். 

தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டு பாடியவர்கள் எம் எஸ் அம்மா, எம் எல் வீ அம்மா, பாகவதர், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், டி ஆர் மகாலிங்கம், சிதம்பரம் ஜெயராமன், பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, போன்ற வெகு சிலரே.

நமக்கு மொழி வேறு சங்கீதம் வேறு என்ற எண்ணம் இருப்பதால்  வரும் பிரச்சனை தான் இது. யார் பாடினாலும் அவர்கள் பாடியது தமிழ் மொழியில் தான் என்று ஏன் நாம் பார்க்கக் கூடாது. 

அது தவிர இப்போதைய பாட்டுப் போட்டிகளில் தமிழர்கள் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது என்றால் போட்டி நடக்கும் முன்பே வேற்று மொழிக் காரர்களை போட்டியில் சேர்க்காமல் இருந்து விட்டால் இந்த பிரச்சனை போட்டி நிறைவு பெற்று பரிசு தரும் நாள் அன்று நெஞ்சை நெருடாது. அதை விட்டு விட்டு ஆஹா உங்கள் மொழி வேறு என்றாலும் என்னமாக பாடுகிறீர்கள் என்று போட்டி நடக்கும் தினங்களில் பாராட்டு கொடுப்பதும், அதே போட்டியாளர்கள் வெற்றி பெறும் தினம் பெரும் அமளி துமளி ஆகிறது சமூக வலைத்தளங்கள். ஏன் இந்த இரட்டை மனநிலை நமக்கு?

இசை, நடனம், நாடகம் இந்த மூன்று வடிவங்களுக்கு நாம் மனிதரைப் பாராது அவர்கள் தரும் ஆன்ம லயம் தனை பார்க்க வேண்டும். 

எமி ஜாக்சன் நடித்தால் ஏற்கிறோம், அமிதாப் பச்சனை பிரபுவின் பெரியப்பாவாக பார்க்கிறோம். ஆனால் வேற்று மொழிக் காரர் நமது மொழியில் பாடி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெறக் கூடாது. இது என்ன ஞாயம். 

வடநாட்டு எம் பி ஒருவர் திருவள்ளுவத்தை பரப்பினால் மகிழ்கிறோம். நமது தமிழ் நாட்டு மனிதர் ஒருவர் சிங்கப்பூர் அதிபர் என்றாலும், அமெரிக்காவில் நீதிபதி என்றாலும், வெளி நாட்டு நிறுவனத்திற்கு தலைவர் என்றால் அவர்கள் அந்த நாட்டில் அதனை எப்படிப் பார்ப்பர், நினைத்துப் பார்க்கிறோமா ?

சென்னை சூப்பர் கிங்ஸில் அஷ்வின் தவிர யார் சென்னைக் காரர் இந்த எட்டு ஆண்டுகளில்? தோனி நமது ஊர்க் காரர் என்று ஏற்றுக் கொண்டு அவரைக் கொண்டாடுகிறோம். அது மட்டும் சரியா?

பக்கத்தில் உள்ள துபாய் போனால் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு எது பேசினாலும் அவர்களை மதராசி அல்லது சவுத் இந்தியன் என்கிறார்கள். அவர்கள் அங்கு ஒன்றாக இருக்கிறது கண்ணில் நிச்சயம் பட்டிருக்கும். ஒரு வேற்று நாட்டவரோடு பழகும் போது நாம் வடநாட்டு மனிதரோடு இணைந்து இந்தியர் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்வோம்.

பிராந்தியத்தில் மட்டும் பக்கத்து ஊர்க் காரர் நம் ஊருக்கு வரக்கூடாது. நமது ஊரில் இன்று பாலம் மற்றும் வீடு கட்டுபவர்கள் யாரும் தமிழர் இல்லை. உணவு பரிமாறும் ஹோட்டல்களில் அதிகம் தமிழர் இல்லை. ஹோசூர் போன்ற ஊர்களில் பல நிறுவனங்களில் பணி புரிபவர்கள் எல்லாம் பல மாநிலத்தவர். கல்விக் கூடங்களில் படிக்கும் மாணவர்கள் நாட்டின் பிற மாநிலத்தவர் தான். 

ஏன் இந்த பேதம். சில நேரம் உங்கள் உயிரைக் காப்பவர் கூட வேற்று மொழி பேசும் ஒரு டாக்டர் ஆக இருக்கலாம். பெரும்பாலும் நர்ஸ்கள் எல்லோருமே மலையாளம் பேசுபவர்கள் தானே.

நாம் எல்லாம் ஓரினம். உழைப்பவர் நம் பெயர் என்று பார்த்தால் ஒன்று புரியும் இனம் பார்க்க வேண்டாம் நல்ல மனம் பார்ப்போம் என்று. சங்கீதத்திற்கும் இது நிச்சயம் பொருந்தும். ஒரு ஸ்பூர்த்தி, பரத், நிகில், பார்வதி, சியாத், அரவிந்த் இவர்களையும் நமது வீட்டுப் பிள்ளைகளாக ஏன் பார்க்கக் கூடாது ? பாடும் போது அப்படித் தான் பார்த்தோம். வெற்றி பெறும் போது தான் நமக்கு கோபம் வருகிறது. மனம் சற்று விரியட்டும். இசையை, கலையை, நடனத்தை, நடிப்பை ரசிப்போம். அவர்கள் ரிஷி மூலம், நதி மூலம் பார்க்க வேண்டாம். நமது தேசத் தந்தை ஒரு தமிழர் இல்லை. நமக்கு அருஞ்சேவை ஆற்றிய அன்னை தெரசா இந்தியரே இல்லை நினைவில் கொள்வோம். 

அதே சமயம் ஒரு அப்துல் கலாம் உலகையே வியக்க வைத்த ஒரு தமிழர், உங்கள் இல்லங்களில் திறமைசாலிகளை உருவாக்குங்கள். இல்லையேல் திறமை எங்கிருந்து வந்தாலும் அவர்களை உமதாக்குங்கள். மாறுவோம்.மாற்றுவோம். 

1 comment:

  1. இன்று சினிமா மற்றும் தொலைக்காட்சியில் பார்ப்பவையனைத்தும் வீட்டிற்குள் வந்துவிட்டது. இதுபோன்ற விஷயங்களுக்கு இவ்வளாவு முக்கியத்துவம் தேவைதானா?

    ReplyDelete