Wednesday, March 30, 2016

Top little stories by Balasandilyan

2 நிமிடக் கதை: 
காற்றுக்குப் பெயர் வைத்தார். மழைக்குப் பெயர் வைத்தார். பள்ளி கல்லூரி மாணவருக்குத் தெய்வம் ஆனார். எளிய அரசு ஊழியர் 36 ஆண்டுகள் பணி. வானமே இவரது எல்லையும் தொல்லையும். பணியில் அர்ப்பணித்து வேலை பார்த்ததால் வருணனும் வாயுவும் இவருக்கு நீங்கா அருள் புரிந்து வந்தனர். வீட்டு வரவேற்பறையில் இவரது அதிகாலை அறிவிப்புகள் பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. காற்றும் மழையும் ஓய்வு பெறுமா இனி எனும் கேள்வி மனதில் எழும்ப இவர் கிளம்புகிறார் விடைபெற்று. எளிமை தான் இவர் பலம். இவர் இருப்பது மாம்பலம். ஒரு மருத்துவ மனையில் சமூக சேவை செய்யப் புறப்படுகிறது இந்தத் தென்றல் என்று ஒரு மனநிலை அறிக்கை தெரிவிக்கிறது.

2 நிமிடக்கதை :
அவன் தெரிந்தோ தெரியாமலோ ஒன்று சொல்ல நினைத்து அதை சொல்ல மறந்து தன் நோக்கத்தில் முழுகி தன் பயணத்தைத் தொடர்ந்தான். அந்தப் போட்டியில் பல படிகள் ஏறி சில படிகள் சறுக்கி கடைசியாக சிகரத்தை தொட்டு நின்றான் வெற்றியாளனாக. 
மறுநாளே அவன் மகிழ்ச்சி தவிடு பொடியானது. களிப்பும் சுளிப்பும் விடாமல் தொடர்கிறது எனும் போது செய்வதறியா சிறு பிள்ளை ஆனான். ஒரு வெற்றியாளன் பெற்ற வெற்றியை கொண்டாடக் கூட முடியவில்லை என்பது யார் செய்த பாவமோ... சுற்றி இருப்பவர்களும் தலை சுற்றித் தான் போனார்களோ...! மூடி மறைக்கவே தனி நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். பரிசாகப் பெற்ற புது வீட்டில் விளக்குத் திரி ஏற்றாமல் விளக்கம் அளித்து திரிகிறான் அந்தோ..!!

இரு நிமிடக் கதை:
மிகத் திறமை வாய்ந்த ஒரு காட்டுக் கட்டெறும்பை வேற்று ஊரின் ராஜா பார்த்து வியந்து போனான். தன்னோடு கூட்டிப் போனான். அதனை பிற சிற்றெரும்பு, செவ்வெறும்பு, பிள்ளையார் எறும்பு இவற்றுடன் மோதி ஜெயிக்கச் சொல்லி ஊக்குவித்தான். காட்டுக் கட்டெறும்பு தலைவன் ஆனது. தன்னோடு மேலும் 14 வித சிறு ஜந்துக்களை சேர்த்துக் கொண்டது. எதிரில் யானை வந்தாலும் காதில் புகுந்து சாகடிக்கும் திறமை பெற்றது அந்தக் காட்டுக் கட்டெறும்பு. இடையில் பல சின்னச் சண்டைகள், மகா மற்றும் மெகா யுத்தங்கள் என்று எது வந்தாலும் காட்டுக் கட்டெறும்பு தான் ஏறும்பரசன் ஆனான்.
பல சமயம் எல்லோரும் வியக்கும் வண்ணம் காட்டுக் கட்டெறும்பு செய்த சாகசங்கள் பிறரால் செய்ய முடியா ஒன்றாக இருந்தது. அந்த 14 பேரில் ஒன்று மலர்களை மொய்க்கும் பொன் வண்டு. மக்கள் பார்வை சற்று மாறத் தொடங்கியது. ஊரின் ராஜா மட்டுமின்றி கூட இருப்பவரும் எப்படியாவது இந்த காட்டுக் கட்டெறும்பை கழட்டி விட வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து பொன்வண்டை போற்றித் துதி பாடினர்.
ஆனால் காட்டுக் கட்டெறும்பு பொன்வண்டோடு நட்பு வைத்துக் கொண்டு மேலும் வியப்பில் ஆழ்த்த ஆரம்பித்தது. அப்படியும் காட்டுக் கட்டெறும்பை காலி பண்ண எண்ணி நீ வேலையை விட்டுப் போ என்றனர் ராஜாவும் அவர் கூஜாக்களும். ஒரு இறுதிப் போர் அதனில் தனது திறமையைக் காட்ட எண்ணிய காட்டுக் கட்டெறும்பு, தைரியமாக அவர்களைப் பார்த்து "போங்கடா வென்று" என்று சொல்லி விட்டு தான் யார் என்று காட்டியது இறுதிப் போரில் வென்று....
அந்தப் போர் வெற்றிக் கொண்டாட்டத்தில் உரக்கச் சொன்னது, நீ என்ன என்னைப் போகச் சொல்வது, நானே போகிறேன், முடிந்தால் என்னைப் போல் ஒருவனைக் கண்டுபிடி என்று....!! This is about Dhoni as you guessed right.


40 விநாடிக் கதை :
பெருத்தான், இளைத்தான். நடித்தான். இயக்குனர் சொன்னதெல்லாம் கேட்டான். படம் முடிய இரண்டு வருடம் ஆனது. இடையில் வந்த வாய்ப்புகள் எல்லாம் இழந்தான். படம் வந்தது. படங்களுக்கு விருது பட்டியலும் வந்தது. இவன் பெயர் நிச்சயம் இருக்கும் என்று எல்லோரும் சொன்னார்கள். ஏன் இவன் பெயர் இல்லை என்ற விசாரணை இவன் மனதிற்குள். சற்று உடம்பு தேறியவன் மீண்டும் இளைத்தான்...அடுத்த படத்திற்காக அல்ல.


30 வினாடிக் கதை :
ஷரத் பிடித்த விஷயத்தில் இறங்கி பிரபலமானான். பிரபலமான அவனை மகிழ்விக்க ஒருத்தி வந்தாள். அடிக்கடி அவளுடன் தென்பட்டான். அதனால் மெனக்கெட்ட விஷயங்களில் மனங்கெட்டான். ஏனோ வந்தவள் திடீரென விலகினாள். தன் இலக்கிலிருந்து விலகியவன் மீண்டும் வெற்றி மேல் வெற்றி பெற நேச நாயகன் ஷரத் தேச நாயகன் ஆனான்.


அக்பர் சபையில் தான்சேன் அடிக்கடி பாடி அரசரை மகிழ்வித்தார். அந்தப் பாடல்களில் மயங்கிப் போவார் அரசர்.
ஒரு நாள் அரசர் தான்சேன் அவர்களை அழைத்து சொன்னார், " நீங்களே இப்படி அருமையாகப் பாடுகிறீர்கள் என்றால் உங்கள் குரு எவ்வளவு அற்புதமாகப் பாடுவார், நான் அவர் பாடுவதைக் கேட்க ஆவலாக உள்ளேன்" என்றார்.
தான்சேன் சொன்னார், "அரசே, எனது குரு வெளியில் வருவதில்லை. ஒரு பர்னாசரமத்தில் இருக்கிறார். அவர் பாடுவதை யாரும் கேட்க முடியாது"

இருவரும் மாறு வேடம் அணிந்து அந்த இடத்திற்கு சென்று குருவின் பாட்டைக் கேட்கும் முடிவெடுத்து அங்கு சென்றனர். அன்று பௌர்ணமி தினம், குரு மிக அருமையாகப் பாடிக் கொண்டு இருந்தார். அரசரும் தான்சேனும் மறைந்து இருந்து இசையை ரசித்து விட்டு அரண்மனை திரும்பினர்.
அடுத்த நாள் அரசர் தான்சேனிடம் நேற்று நான் கேட்ட பாடலை மீண்டும் கேட்க வேண்டும் போல உள்ளது. எங்கே பாடுங்கள் என்றார். மறுப்பு சொல்லாமல் பாடிக் காட்டினார் தான்சேன்.
அரசர் சொன்னார், " நீங்கள் நன்றாகத் தான் பாடுகிறீர்கள், இருப்பினும் உங்கள் குரு பாடியது போல் இல்லை"
தான்சேன் பதிலுக்குச் சொன்னார், "நான் அரசருக்குப் பாடினேன். எனது குருவோ இறைவனுக்குப் பாடினார். அது தான் வித்தியாசம்."
- இலக்கியப்பீடம் சிறுகதை பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் சிவசங்கரி பேசக் கேட்டு மகிழ்ந்தவர் டாக்டர் பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment