Wednesday, March 9, 2016

One line stories - Balasandilyan

ஒரு வரிக் கதைகள் :
டாக்டர் பாலசாண்டில்யன் 
1. வேட்டி சேலை ஐநூறு பணம் வாங்க கூட்டம். இயன்ற மட்டும் கையை நீட்டிய போது அரை அடி குறைஞ்சுது. இடுப்புக் குழந்தையை போட்டு ஏறி வாங்கினாள்.
2. டிரைவர் மாரிக்கு மார்வலி. கத்த முடியல. வண்டியை நிறுத்தவும் முடியல. எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்த கோவிந்தன் மாரிக்கு கொடுக்கல. ஆனாலும் போயிட்டான்.
3. வண்டி நிறைய வெங்காயம். விக்கலை செந்திலுக்கு. அவன் கத்தினது சரியில்லை. கொஞ்சம் தக்காளி சேத்த பிறகு கத்தாமல் வித்துப் போனது.
4. ரொம்ப பசி. வீட்டில் எங்கு தேடியும் ஒன்றும் கெடைக்கலை. டிவி வைத்தான் சுந்தர். சமைத்துப் பார் நிகிழ்ச்சி. பார்த்துக் கொண்டே தூங்கிப் போனான்.
5. செமி பைனல் நிகழ்வில் அன்று டெடிகேஷன் ரவுண்டு. அம்மா பற்றி பாடினான். அவனுக்கு மட்டுமே தெரியும் அவள் ஐ சி யு வில் இருப்பது. சுருதி விலகவில்லை. ஜட்ஜ் சொன்னார் சுருதி மாதா.
6. மொட்டை மண்டையுடன் ஆபிசில் சுரேஷ். யாருக்கு என்ன எல்லோரும் கேட்டனர். இன்றோடு முடிகிறது என் அடிமை வாழ்வு என்றான் புது முதலாளி.
7. வழி முழுக்க பலரிடம் சண்டை போட்டார் நான் வந்த ஆட்டோக் காரர். சாப்பிட்டீங்களா எனக் கேட்டேன். புன்னகை முகத்தில் கோபம் குறைந்தது.
8. வீட்டில் விசேஷம். தேய்த்து முடியவில்லை முருகம்மாவிற்கு அந்தப் பாத்திரங்களை. கிளம்பும் போது பழையது கொடுத்தார்கள் ஒரு பாத்திரத்தில்.
9. மூணு வேளையும் டீ குடித்தே வயிறு நிரப்பும் ராமு சொன்னான், நல்ல வேளை சக்கரை சரியா இருக்கா என்று அப்பப்போ ருசி பார்க்கிறேன் இந்த வேலையில். இதற்கு முன்பு முடி வெட்டுற வேலை.
10. பத்து வருசமா கூடை நிறைய பூ விக்கும் சரஸ்வதி ஒரு நாள் கூட தலையில பூ வெச்சதில்லை. பூ வித்த காசைக் குடிச்சே போய் சேந்தான் அவள் கணவன்.
11. வீலுக்கு காத்து பிடிச்சு நாளைக்கு நூறு ரூபாய் சில்லறை வாங்கிற பாண்டி முதலாளிக்கு ஐம்பது கொடுத்தான் சம்பளமாய்.


ஒரு வரிக் கதை : 
1.புறப்பட்டது பஸ். பயணிகள் யாரும் இல்லை. உற்று நோக்கினேன். ஓட்டுனரும் இல்லை.
2. ஒரே சத்தம். மேடையில் ஒரு சிலர் அழுதவாறு. எங்கு பார்த்தாலும் பூக்கள். திருமணத்தில் இருவர் மாட்டிக் கொண்டனர்.

3. உணமையச் சொல். மிரட்டும் சத்தம். யார் அந்த வடையை தின்றது? அது எலி பிடிக்க விசம் தடவி வைத்திருந்தேன்...!
4. இடம் தேடி குறுக்கும் நெடுக்கும் அலைந்தது அம்பியை போல. பிரசவ வேதனையில் பூனை.
5. இரவு வரை அவன் தான் காத்தான். இரவுக்குப் பிறகு இவன் தான் காத்தான். காலையில் காணோம். கடவுள் சிலை ஒன்றும் காவல் காப்பவனும்.
6. ஒரே சீவு. வெட்டிச் சாய்த்தான் . முப்பது என்றான். வேறு வழியின்றி கொடுத்தான் இளநீரை வாங்கிக் கொண்டு.
7.பெரிய உருளையை சரி பாதியாக வெட்டினான். ஐம்பது கிராம் கல்லுக்கு பதில் தராசில் வைத்து அளந்து போட்டான் மிளகாய்.
8.வா வா என்று வரவேற்றார் தலைவர். சீட்டு தானே வா உள்ளே. உள்ளே போனவன் சொன்னான் உறுப்பினர் அட்டை இந்தா பிடி என்று.
9.மிகவும் பிடித்த கேசரி செய்து 'அவன்' முன்பு வைத்து பிரார்த்தனை செய்தாள். கண் திறந்த போது கேசரி இல்லை. அன்றோடு நிறுத்தினாள் நைவேத்யைம்.
- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment