உலகத் தண்ணீர் தினம் இன்று
தண்ணீர்
மழை எனும் போது
மண் முழுவதும் நீர் என்றாலும்
தாகமடங்க நீர் வேண்டும்
கடலில் பலநாள் பயணம்
கப்பலில் போகிறவர் அறிவார்
கரிக்கும் நீர் கவைக்காகாதென்று
தவித்த வாய்க்குத் தண்ணீர்
கொடுத்தால் புண்ணியம்
நீர் என்று சொன்னால்
நெருப்பிலும் வேகும்
நெருப்பென்று சொன்னால்
நீரிலும் அணையுமென
கண்ணதாசன் எழுதியது
நீரில் அழியுமா?
நானும் நீரும்
நானிலத்தில் இருக்க
நீர் வேண்டும்...
குறைவும் குறையே
மிகையும் குறையே
வெற்றிகளை கல்லில் செதுக்க
தோல்விகளை நீரில் எழுத வேண்டும்
ஆழியில் ஆற்றில் குளத்தில்
நீர் வற்றினால்
கொக்கெல்லாம் மீனைப் போல்
சந்தை வரும்...
நாமெல்லாம் நாவரண்டு சாவோம்
உடல் நாறித் தான் போவோம்
ஒவ்வொரு சொட்டு நீரும்
உயிரை விட மதிப்பு நீளம்
பார்த்துப் பார்த்து
செலவு செய்வோம்
பாரெங்கும் சேமித்திடுவோம்
உடலில் நீர் குறைந்தால்
நோய் மிகும்
உலகில் நீர் குறைந்தால்
போர் வரும்
இருப்பதைக் கட்டிக் காப்போம்
அணை கட்டிக் காப்போம்
கடல் நோக்கி ஓடும்
நதிகளைக் கடவுளென
போற்றி வணங்குவோம்
ஏரிகளுக்கு ஏற்றம் தருவோம்
குளங்களை கும்பிடுவோம்
கிணறுகளைப் போற்றுவோம்
மழை மாரியை
பொழியென்று வேண்டுவோம்
மண்ணில் நீரை
வரமென்று கொண்டாடுவோம்
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment