எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்
- கட்டுரை
- பாலசாண்டில்யன், மனநல ஆலோசகர்
"செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என், காவாக்கால் என்"
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாக
கோபம் கொள்ளாதவன். பலிக்காத இடத்தில் கோபத்தை தடுத்தால் என்ன,
தடுக்காமல் விட்டால் தான் என்ன? அதாவது ஒரு செயலுக்கு எதிர்வினை
வரும் இடத்தில் கோபத்தை அடக்கினால், அது பயனுள்ள செயல்.
மாறாக, கோபம் பயனளிக்காத இடத்தில் கோபத்தைக்
கட்டுப்படுத்தினாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை.
வளமையை உடைய வலியவன், தன் சினத்தை வெளிப்படுத் தாது அடக்கிக்
காக்கிற பொழுது, அவன் சிறந்த காவல் வீரன் ஆகிறான். வலிமையின்றி
இளைத்தவன் பிறர் மேல் கோபத்தைக் காட்டவில்லை என்று பேசினால் அது
கேவலமான விளக்கமாகும்.
கோபம் கொள்வது தவறு கிடையாது. கோபம், வருத்தம், கவலை போன்ற
எந்தவொரு உணர்வையும் கட்டுப்படுத்தினால் (சப்ரெசென் எனும் அடக்குதல்)
அது மனதுக்கும் உடலுக்கும் நல்லதல்ல என்று பல மனநல நிபுணர்கள்
கூறுவார்கள்.
'ரௌத்திரம் பழகு' என்கிறான் பாரதி. ஆக, கோபம் கொள்ள வேண்டிய
இடத்தில் நிச்சயம் நாம் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்.
கோப மேலாண்மை என்பது ஆரோக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான
முறையில் கோபத்தைக் கட்டுப்படுத்தவும் வெளிப்படுத்தவும்
பயன்படுத்தப்படும் நுட்பங்கள் மற்றும் உத்திகளைக் குறிக்கிறது. இது
கோபத்தை முழுவதுமாக அடக்குவது பற்றியது அல்ல, மாறாக
எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க அதன் தீவிரத்தையும்
வெளிப்பாட்டையும் நிர்வகிக்கக் கற்றுக்கொள்வது.
கோப மேலாண்மை என்பது தூண்டுதல்களை அங்கீகரிப்பது, சமாளிக்கும்
வழிமுறைகளை உருவாக்குவது மற்றும் தேவைகளை திறம்பட தெரிவிக்கக்
கற்றுக்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கியது.
கோபத்தை நிர்வகிக்க, தூண்டுதல்களை அடையாளம் காண்பது, ரிலாக்சேஷன்
எனப்படும் தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்வது மற்றும் ஆரோக்கியமான
சமாளிக்கும் வழிமுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள். இதில்
கோபத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரிப்பது,
தேவைப்படும்போது கால அவகாசம் எடுப்பது மற்றும் உணர்வுகளை
வெளிப்படுத்த ஆக்கபூர்வமான வழிகளைக் கண்டறிவது ஆகியவை அடங்கும்.
கோப மேலாண்மையின் 3 விதிகள் - அங்கீகரித்தல், பிரதிபலித்தல் மற்றும்
பதிலளித்தல் (Recognize, Reflect and Respond)- கோபப் பிரச்சினைகள் மற்றும்
அறிகுறிகளை வழிநடத்துவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குகின்றன. இந்த
மூன்று அத்தியாவசிய படிகளைப் புரிந்துகொண்டு செயல்படுத்துவதன் மூலம்,
தனிநபர்கள் தங்கள் கோபத்தின் மீது சிறந்த கட்டுப்பாட்டைப் பெறலாம் மற்றும்
அதை நிர்வகிப்பதற்கான ஆரோக்கியமான வழிகளை உருவாக்கலாம்.
கோபத்தை திறம்பட நிர்வகிக்க கோபத்தின் மூல காரணங்களைப்
புரிந்துகொள்வது முக்கியம். கோபத்திற்கு நான்கு முக்கிய தூண்டுதல்கள்
உள்ளன: கடந்த கால அனுபவங்கள், துரோகம், மனநலப் பிரச்சினைகள் மற்றும்
அவமானம் அல்லது துக்கம் போன்ற உணர்ச்சிகள். தவிர, இயல்பாகவே
சிலருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வரலாம். அதற்கு காரணம்
தேவையில்லை.
சிலர் கோபம் வந்தது போல நடிப்பார்கள். குறிப்பாக ஆசிரியர்கள், காவல்துறை
அதிகாரிகள் இவர்கள் கோபமாக இருப்பது போல பாசாங்கு செய்வார்கள்.
அவர்கள் மிகவும் கனிவாக அன்பாக இருப்பின், அவர்களால் தமது பணியை
செவ்வனே செய்ய முடியாது.
ஆனால் இந்த ஆசிரியர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் வீட்டிலும் அப்படியான
கோபத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் மரபணுக்களில் அது புகுந்து
விடுகிறது. ஆனால் பெரும்பாலும் அங்கு அந்த கோபம் செல்லுபடி ஆகாது.
அவர்களைத் தான் நாம் 'வீட்டில் எலி வெளியில் புலி' என்கிறோம்.
அவர்கள் வீட்டில் கோபம் வந்தால் எல்லா விளக்கு மின்விசிறி போன்றவற்றின்
ஸ்விட்ச்களை ஆக்ரோஷத்துடன் போடுவார்கள். தண்ணீர் குழாய்களை திறந்து
விடுவார்கள். பணியாளர்கள் மீது எரிந்து விழுவார்கள். சில நேரங்களில்
வீட்டில் இருக்கும் நாயை ஓங்கி அடித்து குறைக்க விடுவார்கள். கதவை ஓங்கி
அடித்து சாத்துவார்கள். அதனால் எந்தவொரு பயனும் இல்லை என்று
அவர்களுக்கு நன்றாகத் தெரியும். உள்ளிருந்து ஒரு குரல் கேட்கும் "என்ன
அங்கு சத்தம்" என்று. பின்னர் விவரிக்க முடியாத நிசப்தம் அங்கே நிலவும்.
பொதுவாக ஒரு விஷயத்தை பலர் சொல்லக் கேட்டிருப்போம். திருமணத்திற்கு
முன்பு எல்லா ஆண்களும் சிங்கங்கள் தான். திருமணத்திற்கு
பிறகும் அப்படியே. வித்தியாசம் என்னவென்றால் அந்த சிங்கத்தின் மீது
துர்கை அம்மன் அமர்ந்து இருப்பாள். இதனை விளக்கினால் வாசிக்கும்
பெண்கள் என் மீது கோபம் கொள்ளுவார்கள். பெண் கோபம் பொல்லாதது
அல்லவா ?
கோபம் வரும் பொழுது சூழலை சமாளிக்க நமக்கு சில குணாதிசயங்கள்
தேவை. உளவியலாளர் பீட்டர் கிளாஃப், மன உறுதியின் நான்கு முக்கிய
பண்புகளை விவரிக்கிறார், நம்பிக்கை, சவால், கட்டுப்பாடு மற்றும்
அர்ப்பணிப்பு தான் அவை.
உண்மையிலேயே கோபத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால் தியானம்,
சுவாசப் பயிற்சிகள் மற்றும் சுய பிரதிபலிப்பு போன்ற நினைவாற்றல்
நுட்பங்கள் மூலம், உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளைப் பற்றிய
ஆழமான புரிதலைப் பெற வேண்டும். மேலும் சூழ்நிலைகளுக்கு
அமைதியாகவும் தெளிவாகவும் எவ்வாறு பதிலளிப்பது என்பதைக்
கற்றுக்கொள்ள வேண்டும்.
Anger எனும் கோபம் Danger - D ஓரெழுத்து தான் குறைவு என்பர். அதாவது.
கோபத்தினால் நம்மில் நிறைய பேர் செய்யக்கூடாததை செய்து பிறகு
வருந்துவோம், குற்ற உணர்வுக்கு ஆளாவோம், மன்னிப்பு கேட்போம்,
உறவுகளை இழப்போம். தண்டனை பெறுவோம். ஆக, கோபம்
காட்டினாலும் தவறு. கோபத்தைக் காட்டாவிட்டால் நமக்கு இழப்பு. எனவே
தான் கூடுமானவரை கோபத்தை அடக்க வேண்டும். அதே சமயம் நமது
கோபம் எடுபடாத இடத்தில் அதனை அடக்கி ஆண்டும் எந்தவித
பயனுமில்லை.
எல்லா உணர்ச்சிகளும் ஒரு நோக்கத்திற்கு உதவுகின்றன, மேலும் கோபம்
ஊக்கமளிக்கும் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும். உங்கள் கோபத்தை
அமைதியாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்துவது இந்த வகையான
வலுவான உணர்ச்சியை நிர்வகிக்க ஆரோக்கியமான வழியாகும்.
கோபத்தை அடக்குவது அல்லது அதைப் புறக்கணிப்பது ஆரோக்கிய
விளைவுகளை ஏற்படுத்தும். கோபம் உங்கள் தனிப்பட்ட மற்றும்
தொழில்முறை உறவுகளை கடத்த வேண்டியதில்லை.
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்ற பாடல் வரி நமக்கு
மிகவும் பரிச்சயமான பாடல் வரி. கோபம் வரும் பொழுது நமது
வார்த்தைகள், நடத்தை, பாவனை எல்லாமே தவறாக இருக்கும். சில
நேரங்களில் கோபப்படுவார் இவர் என்று எதிர்பார்க்கப்படும் பொழுது நாம்
அதனை மௌனத்தின் மூலம் வெளிக்காட்டினால் அதற்கு பெரியதொரு
மதிப்பு கிடைக்கிறது. 'அவர் நாண நன்னயம் செய்து விடல்' என்பது போல
மன்னிப்பு என்பது நிச்சயம் தேவகுணம் தான்.
சில சமயம் ஒரு பார்வை, நமது முகபாவம், அங்க அசைவு, இதர சங்கேத
நடவடிக்கை நாம் கோபமாக இருப்பதை பிறர் புரிந்து கொண்டு நாம்
நினைத்த வண்ணம் அவர்கள் நடந்து கொள்ளுவார்கள்.
பெண்கள் கோபப்பட்டால் அதனை சமையல் அறையில் அல்லது டங்
என்று காபி பாத்திரம் வைப்பதில், படுக்கை அறையில் காட்டுவார்கள்.
தந்தைமார்கள் பாக்கெட் மணியில் கைவைப்பார்கள். ஆசிரியர்கள்
மதிப்பெண் மூலம். மேலதிகாரி சம்பள உயர்வு தராமல் இருப்பது அல்லது
கடினமான பணி தருவதன் மூலம் வெளிப்படுத்துவார்கள்.
கிரிக்கெட் வீரர் தனது கோபத்தை பேட் மூலம் காட்டுவார். ரஹ்மான்
போன்ற இசை நிபுணர்கள் நல்ல இசை தருவதன் மூலம்
வெளிப்படுத்துவார்கள்.
ஒரு கத்தியால் பழத்தை அறுக்கலாம். ஒருவர் கழுத்தையும் அறுக்கலாம்.
ஒரு தீக்குச்சி மூலம் விளக்கு ஏற்றலாம். ஒரு காடையே கொளுத்தலாம்.
நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே இங்கே நமது ஆளுமையை
வெளிப்படுத்தும். அப்படித்தான் கோபம் என்பதும். எங்கே யாரிடத்தில்
எப்போது எப்படி எதற்காக ஏன் வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான்
ஒருவர் தனியாகத் தெரிகிறார். அவருக்கு மதிப்பு ஏற்புடுகிறது.
நகைச்சுவை நக்கல் நையாண்டி மூலம் கோபத்தை
வெளிப்படுத்துபவர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பர் என்று நம்மால்
காண முடியும்.
பிறரை காயப்படுத்தாமல் நாமும் மன சங்கடம் அடையாமல் ஒரு
செயலை செய்வதோ, பிறரை செய்ய வைப்பதோ நிச்சயம் ஒரு
தனித்திறன் தான். நம்மை கோபப்படும் செயல்கள் அன்றாடம் நிச்சயம்
நடக்கும். இருப்பினும் நாம் எப்படி புத்திசாலித்தனமாக சூழலை
மனிதர்களை கையாள்கிறோம் என்பது அவரவர் தனித்திறன். அப்படியான
திறனை வளப்படுத்துவோம். வாழ்வை மேம்படுத்துவோம்.
No comments:
Post a Comment