Saturday, November 22, 2014

Bullying Power Office - to stay away.

கதையல்ல நிஜம் - 6 
- டாக்டர் பாலசாண்டில்யன் 

மூர்த்தி சென்னையில் உள்ள மிகப் பெரிய ஐ டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். பிஸ்சா, பக்கோடா, கோல்ட் காபி, போண்டா என்று சாப்பிட்டுக் கொண்டே வேலை பார்த்து வந்ததால் கொஞ்சம் தொப்பை அதிகம்.

கல்யாணப்படலம் வந்த போது திருவாரூர் நந்தினி மனைவியானாள். கொஞ்ச நாள் வேலை பார்த்து வந்த நந்தினி, மூர்த்தி மற்றும் அவன் பெற்றோர் சொன்னதைக் கேட்டு வேலையை விட்டாள். சாதாரண வேலை, சுமார் சம்பளம் தான் என்பதால் உடனே ஒப்புக்கொண்டாள். மூர்த்தி-நந்தினி தனிக்குடித்தனம் வைக்கப்பட்டனர். மூர்த்தி ஒரு பிளாட் வாங்க முடிவு செய்தான். பல புதிய வேலைகளுக்கு மனு போட்டான். பெங்களூரில் நல்ல வேலை கிடைத்தது.

சென்னையில் வாங்கிய பிளாட்டை க்ரஹபிரவேசம் முடித்த கையோடு வாடகைக்கு விட்டு விட்டு பெங்களூருக்கு குடி பெயர்ந்தான் மூர்த்தி. மூர்த்தி-நந்தினி இருவருக்கும் பெங்களூர் புதுசு. மூர்த்தியை நைட் ஷிப்டில் போட்டார்கள். இங்கு தான் சிக்கல் தொடங்கியது.

மூர்த்திக்கு குறைந்தபட்சம் ஒன்பது மணி நேரம் தூங்க வேண்டும். நைட் ஷிபிட் முடித்து வீடு வந்து சேர விடியற்காலை ஐந்தரை மணியாகி விடும். பால்காரனைப் போல் வந்து மணி அடிப்பதும் பாதி தூக்கத்தில் நந்தினி கதவைத் திறப்பதும் வழக்கமானது.

ஆபீசிலிருந்து வந்ததும் மூர்த்திக்குப் பசிக்கும். ப்ரேக் பாஸ்ட், காபி கட்டாயம் வேண்டும். சாப்பிட்ட பிறகு கறுப்புத் துணி பர்தா போட்ட கும்மிருட்டு அறையில் போய் படுத்துத் தூங்கத் தொங்குவான். மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்குத் தான் எழுந்திருப்பான். எழுந்ததும் பேப்பர், டிவி, பக்கத்தில் உள்ள காய்கறி கடைக்குச் செல்லுதல் போன்ற வழக்கமான அலுவல் முடிந்தால் மீண்டும் நைட் ஷிபிட் ஆபீசுக்கு கிளம்ப வேண்டியது தான். 

நந்தினி குளித்தாளா? சாப்பிட்டாளா ? இவன் தூங்கும் போது அவளுக்கு எப்படிப் பொழுது போகிறது ? என்ற கவலையெல்லாம் மூர்த்திக்கு வந்தது இல்லை. இந்த வாழ்க்கை நந்தினிக்கு அலுப்பும் வேதனையும் ஆனது. ஒரு நாள் மூர்த்தி ஆபீஸ் முடித்து வீட்டிற்குள் நுழையும் போது பற்றிக் கொண்டது. நந்தினியின் விஸ்வரூபத்தை அன்று தான் மூர்த்தி பார்த்தான். பயந்தே போனான். மூச்சு வாங்க சண்டை போட்டு முடித்து விட்டு கையில் பெட்டியுடன் நந்தினி புறப்பட்டு விட்டாள். நிஜமாகவே திருவாரூர் போய் விட்டாள். மூர்த்தி நொடிந்து போனான். எத்தனை போன் செய்தும் நந்தினி பேசுவதாயில்லை.

மூர்த்தி வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தான். நந்தினிக்குத் தகவல் சொன்னான். நந்தினி இறங்கி வருவதாக இல்லை. இரண்டு மாத கடும் முயற்சிக்குப் பிறகு மூர்த்திக்கு மஸ்கட்டில் நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது. திருவாரூர் போய் கிட்டத்தட்ட நந்தினி காலிலேயே விழுந்து கெஞ்சினான் மூர்த்தி. பெரியவர்கள் தலையீட்டோடு நந்தினி மஸ்கட் வர சம்மதித்தாள். 

நல்ல வேளை. நல்ல வேலை. மூர்த்திக்கு மஸ்கட்டில் ஐந்து நாள் வேலை, இரண்டு நாள் விடுமுறை, மேலும் காலை சென்றால் மாலை வீடு வந்து விடுவான்.

பிழைத்தது ஒரு தாம்பத்தியம்...!

No comments:

Post a Comment