Tuesday, November 18, 2014

Cousins in love

கதையல்ல நிஜம் - 2
- டாகடர் பாலசாண்டில்யன் 

கதையல்ல நிஜம் - 2
- டாகடர் பாலசாண்டில்யன்
குமார் மற்றும் கோபு இருவரும் அத்தை பையன் மாமா பையன் உறவு முறை. ஒரே நாளில் ஒரே முற்றத்தில் பிறந்தவர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். சிறு வயதில் ஒரே மாதிரி உடை அணிந்து கொண்டு திரிந்து ஒருவருக்கொருவர் அன்புப் பாசப் பிணைப்போடு நாளும் இருந்தவர்கள்.
குமார் இன்ஜினியரிங் டிப்ளமா படித்து மத்திய அரசு வேலையில் சேர்ந்தான். கோபுவின் பெற்றோர் ரொம்ப சாதாரணமானவர்கள். பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்ட கோபுவிற்கு ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளர் வேலை கிடைத்தது.
சாதாரண வேலை என்பதால் சாதாரண வாழ்க்கை, அவனுக்கேற்ற மனைவி என்று சாதாரண நிலையிலேயே வாழ்ந்து வந்தான் கோபு. ஆனாலும் குமார் கோபு இருவரும் அடிக்கடி சந்திப்பார்கள். கோபு குமார் வீட்டிற்கு வாரம் ஒரு முறையாவது வருவான். குமார் எப்போதும் கோபுவிற்கு ஏதாவது உதவி செய்வது வழக்கம். அது சட்டை, பேன்ட், கடிகாரம், பணம் என்று ஏதாவது இருக்கும்.
கோபுவின் பிள்ளையின் படிப்பிற்கு குமார் உதவி செய்தான். குமாரின் மனைவியும் குமாரின் மகன் கண்ணனும் ஒரு போதும் குமார் கோபுவிற்கு உதவி செய்வதை தடை செய்தது கிடையாது. கோபுவின் மகள் திருமணத்திற்கும் குமார் நிறைய பணம் கொடுத்து உதவினான். கடனாகத்தான். அந்தக் கடனை திருப்பித் தர முடியாத கோபு குமார் வீட்டிற்கு வருவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டான்.
அது பற்றி குமார் ஒரு போதும் கவலைப்படவில்லை.
குமார் ஒரு சமயம் நோய்வாய்ப்பட்டான். அந்த விஷயம் கேள்விப்பட்டு அவனைப் பார்க்க வந்தான் கோபு. தான் பெற்றுக் கொண்ட கடனை திரும்பத் தர முடியாது போனது குறித்து கண்ணீர் மல்க மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டு மன்னிப்பு கேட்டான். குமார் கோபுவின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொன்னான்.
அடுத்த மாதம் குமார் இறந்தே போனான். துக்கத்திற்கு வந்த கோபு குமாரின் மகன் கண்ணனைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொன்னான். உன் தந்தை போல யார் உண்டு என்றான் கோபு.
உள்ளே ஓடிப் போன கண்ணன் கைகளில் ஒரு ஸ்படிக மணி மாலையோடு வந்தான். "இது குமார் அணிந்த ஒன்று தானே" என்று கேட்டான் கோபு. "ஆமாம், இனி இதனை அணிய சரியான நபர் நீங்கள் தான்" சொல்லும் போதே அழுது விட்டான் கண்ணன். "நீங்கள் எப்போது வந்தாலும் உங்களுக்கு ஏதாவது கொடுப்பார் அப்பா. இனி தருவதற்கு அவர் இல்லை. ஆனால் நான் இருக்கிறேன்" என்று சொல்லி கோபுவின் கால்கள் தொட்டு வணங்கினான் கண்ணன்.
அந்த ஸ்படிக மாலை அணிந்து கொண்டு நின்ற கோபுவின் மனதில்
கண்ணன் குமாராகத் தான் தென்பட்டான்.

No comments:

Post a Comment