Thursday, November 20, 2014

Being Grateful brings more power in life

கதையல்ல நிஜம் - 4
- டாக்டர் பாலசாண்டில்யன்

கல்யாணி பன்னிரண்டு வயதுச் சிறுமி. அவள் தந்தை வாசுதேவன் குடிபழக்கத்திற்கு அடிமையாகிப் போனவன். தினமும் குடித்து விட்டு வருவதும், மனைவியை மற்றும் மகளை அடிப்பதும் அவனுக்கு வாடிக்கையானது. வாசுவின் மனைவி மரகதத்திற்கு தனது கணவனை எப்படி திருத்திக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை. 

வாசுவின் இந்தப் பழக்கம் அவனை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தது. மரகதம் விட்டுக் கொடுக்காமல் வீட்டையும் பார்த்துக் கொண்டு கணவனையும் பார்த்துக் கொண்டாள். மூன்று மாதப் போராட்டம் சோக முடிவாகிப் போனது. வாசுவின் இறுதிப் பயணம் மரகதத்தை சற்று உலுக்கத் தான் செய்தது. கல்யாணியை வளர்த்து ஆளாக்குவது பெரிய சவால் ஆனது.

இந்த நிலையில் குடும்ப நண்பர் பட்டாபி வலிய முன்வந்து கல்யாணியை தனக்குத் தெரிந்த ஒரு ஆஸ்ரமத்தில் சேர்த்து விடுவதாகப் பரிந்துரைத்தார். அது அந்தக் குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவும் என்றும் சொன்னார். கல்யாணி மறுநாளே ஆஸ்ரமத்தில் சேர்க்கப்பட்டாள். அங்கே படிப்பு, தியானம், பஜனை, கைவேலை என்று பல்வேறு விஷயங்கள் அவளுக்கு கற்றுத் தரப்பட்டது.

கல்யாணிக்கு ஏனோ படிப்பில் நாட்டம் இல்லை. தினமும் அப்பா வந்து அவளையும் அவள் அம்மாவையும் அடிப்பது போலவே கண்முன் காட்சி வந்து அவளைத் தொந்தரவு செய்தது. அவள் மனநிலையைச் சரியாக்க ஆஸ்ரிம குருஜி அவளை பாட்டு வகுப்பில் சேர்க்கச் செய்தார். கல்யாணியின் மனநிலையில் மாற்றம் தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவள் இசையில் முன்னேறினாள். அருகில் சில நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தாள். பட்டாபியும் மரகதமும் அவ்வப்போது அவளை சென்று பார்த்து உற்சாகம் அளித்தனர். 

ஆஸ்ரமதிற்கு அடிக்கடி வந்து போகும் ஒரு பணக்காரர் மூலம் கல்யாணிக்கு வெளிநாடு புறப்படும் யோகம் அடித்தது. அவள் இப்போது 19 வயது யுவதியாக இருந்தாள் என்பதால் அந்த பணக்காரர் அவளுக்கு அமெரிக்காவிலேயே ஒரு சங்கீதப் பள்ளி வைத்துத் தருவதாக சொன்னார்.

தலைகால் புரியாத கல்யாணி அவள் அம்மாவிடம் யாரோ மூன்றாம் மனுஷியிடம் சொல்வது போல் சொன்னாள். மரகதத்தின் அழுத்தம் காரணமாக கல்யாணி பட்டாபி வீட்டிற்கு போனாள். அவரிடம் அவள் சொன்ன விஷயமும் சொன்ன விதமும் பட்டாபியை மனம் அதிரச் செய்தது. "அங்கிள், இனி நான் உங்களுக்கும் அம்மாவுக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. வெளிநாடு போகிறேன். என்றாவது திரும்பி வந்தால் பார்க்கலாம்" 

எதையும் எதிர்பார்த்து உதவவில்லை என்றாலும் நன்றி கெட்ட தனது நண்பரின் மகளை நினைத்து பட்டாபி மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளானார். மரகதத்திடம் ஏதும் சொல்லவில்லை...தனக்குள் நினைத்துப் புலம்பினார்....! எங்கு சென்றாலும் நன்றாய் இரு என்று அவரை அறியாமல் தனது பிரார்த்தனையில் சொன்னார்.

No comments:

Post a Comment