Saturday, November 22, 2014

My recent poems

அனைவரையும் விரும்புகிறேன்
சிலரோடு இருக்க
சிலரோடு சிரிக்க
சிலரைத் தவிர்க்க
சிலரோடு ஜெயிக்க
சிலரோடு பயணிக்க
சிலரோடு பகிர
சிலரை ரசிக்க
சிலரை சகிக்க
விரும்புகிறேன்....
- பாலசாண்டில்யன்

அறிவாளிகளாக
அறிவிலிகளாக
அழகானவர்களாக
அழகு குறைந்தவர்களாக
அன்பானவர்களாக
அன்பற்றவர்களாக
அக்கறையுள்ளவர்களாக
அக்கறையற்றவர்களாக
அளிப்பவர்களாக
அள்ளுபவர்களாக
அகிலத்தில் மனிதர்கள்
அவர்களில் நாம் எப்பக்கம்?!
-
பாலசாண்டில்யன்

பிரிவுகள் என்பது யாராலும்
ஆற்ற முடியாத காயம்...எனினும்
நினைவுகள் என்பது யாராலும்
திருட முடியாத மாயம்....எனவே
பத்திரப்படுத்துவோம் அவற்றை.
பார்த்தது சரியில்லை எனும்போது
பார்வையும் நோக்கும் சரியில்லையென
தேற்றிக் கொண்டால்
பாதகம் நமக்கு தான்....!!
பரிட்சைகள் என்பது
காதலி போலத்தான்
கடினமான கேள்விகள்
நீளமான விளக்கங்கள்
திருப்தி இல்லா திருத்தம்
வினா எதுவானாலும்
விடை சரியென்றாலும்
விளைவு வெற்றி அல்ல
வீண் தோல்வி தான்
வாடிய முகம்
மீண்டும் முயற்சி
-
பாலசாண்டில்யன்
சிலர் சொல்லில் வைப்பார் முள்ளை.
சிலர் சொல்லில் வைப்பார் கள்ளை.
சிலர் சொல்லில் இன்பம் கொள்ளை
சிலர் சொல்லில் இன்றும் பிள்ளை
இல்லை என்பது தான் இருக்கிறது
என்றால்
இருக்கிறது என்பது எல்லாம் ஏன்
இல்லை என்றானது...
கனவுடன் சிலர்
கவிதையுடன் சிலர்
கற்பனையில் சிலர்
கலக்கத்தில் சிலர்
கலகத்தில் சிலர்
கவுந்தடித்து சிலர்
காதலுடன் சிலர்
காட்சி தரும் சிலர்
கவலையில் சிலர்
கண்மறைவில் சிலர் - அனைத்தும்
கலந்தவர்களின் உலகம்..!!
-
பாலசாண்டில்யன்
கடலுக்குள் உப்பு மட்டுமா?
இல்லை....!
மீன் முத்து இன்னும் உண்டு. 
அது போலத்தான்...
நமக்குள் தப்பு மட்டுமா?
யார் சொன்னது?!
அளப்பரிய ஆற்றல் அறிவு
ஆண்டவன் தந்தது-
உணர்வோம் உவகையோடு...!
-
பாலசாண்டில்யன்
ஈட்டுவது
சேமிப்பது
பெறுவது
மட்டும்
வருமானமல்ல
வீண் குறைப்பு
கூட
உபரி தான்...
நிறைய உழைப்போம்
நிறைய ஈட்டுவோம்
தேவையானதை நுகர்வோம்
வீணடிப்பு துரோகம்...
உணர்வோம்
மூடிய கைத்துண்டுக்குள்
முடிந்து போகும் பேரம்
மாறி இடம் பெயர்வது 
கால்நடைகள் !
தேடிய வலைவீச்சுக்குள்
முடிந்து போகும் வரன்
மாறி குடி பெயர்ந்திட
கல்யாணங்கள்.....!!
இரு வேறு சந்தைகள்...!!
இடம் மாறும் விந்தைகள்!!
-
பாலசாண்டில்யன்
கண்ணில் படுவது நேசம்
கலங்கி நிற்கும் சுவாசம்
யார் அறிவார்?!
முகர்ந்து அறிவது வாசம்
கசங்கி மடிந்தன வாசமலர்கள்
யார் அறிவார்?!
கண்ணில் படுவது வெற்றி
கலைந்து போன உறக்கம்
யார் அறிவார்?!
-
பாலசாண்டில்யன்
மழையில் வந்த மகளிடம்
அடி நனைந்தாயா 
இந்தா துண்டு என்றேன் 
அவளோ....என்
அடினியம் செடி
நனைகிறது பார் 
உள்ளே கொண்டு வா என்றாள்
-
பாலசாண்டில்யன்
அமைதியான குளத்தில் 
சிறியதோர் கல்
விழுந்தாலும்
வட்டங்கள் தோன்றும்...
அமைதியான மனமும்
அப்படியே...!
கலங்காதிருப்பது நம் கடன்...திறன்
-
பாலசாண்டில்யன்


No comments:

Post a Comment