Monday, November 24, 2014

Systems seldom work

கதையல்ல நிஜம் - 8
- டாக்டர் பாலசாண்டில்யன் 

விழாக்கால தள்ளுபடி என்றால் இது தானோ ? உஸ்மான் ரோட்டில் ஒருவரை ஒருவர் முட்டி மோதித் தள்ளிக் கொண்டிருந்தனர். ஒரு பிரபல ஜவுளிக் கடையில் நுழையும் போது ராமுவைத் தடுத்தது அங்கு நின்றிருந்த செக்யூரிட்டி. பல மொழிகள் பேசும் மக்கள் உள்ளே போன வண்ணம் வெளியே வந்த வண்ணம் இருந்தனர்.

கையில் இருக்கும் பையை அந்த செக்யூரிட்டியிடம்  கொடுத்து டோகன் வாங்க வேண்டும். ராமுவிற்கு அந்தப் பையை கொடுக்க தயக்கம். "கொடுங்க சார், எல்லோரும் கொடுக்கிறாங்க, உங்களுக்கென்ன ? உள்ளே இதை கொண்டு போகக் கூடாது!" அரை மனதோடு அந்தப் பையை கொடுத்து விட்டு நூற்றுப் பதினொன்று என்ற நம்பர் போட்ட சிவப்பு பிளாஸ்டிக் வில்லையை வாங்கி பத்திரமாக வைத்துக் கொண்டு உள்ளே போனார் ராமு. 

உள்ளே குழந்தைகள் பகுதிக்குப் போனால் சென்னையின் பாதி மக்கள் இங்கு தான் உள்ளனரோ என்ற பிரமை ஏற்பட்டது. ஏசி வேலை செய்யற மாதிரி தெரியலை. நிறைய பேர் கையை வளைத்து நுழைத்து துணிகளை எடுத்தனர். மூச்சு விட முடியாத சில குழந்தைகள் பொறுமையில்லா குழந்தைகள் கத்திப் பிலாக்கணம் வைத்தனர். இந்த அமர்க்களத்தில் சட்டை பாக்கெட்டை அவ்வப்போது தொட்டுப் பார்த்துக் கொண்டார் ராமு ...அந்த பிளாஸ்டிக் டோக்கன் பத்திரமா இருக்கிறதா என்று. அது வெறும் டோக்கன் கிடையாதே...!

ஒரு சட்டையும் ஒரு சுடிதாரும் வாங்கிவிட்டு பணம் கட்டி துணி வாங்கும் கியுவில் நின்றார் ராமு. ஒரு வழியாக ராமுவின் பை கிடைத்தது. 

பிறகு கேட்டை நோக்கி நடைபோட்ட ராமுவிற்கு பகீர் என்றது. டோக்கனைக் காணோம். செக்யூரிட்டியிடம் நிலமையை விளக்கி தனது நம்பர் நூற்றுப் பதினொன்று, மஞ்சள் பை என்ற விவரம் சொன்னார். ராமுவின் பை போலவே வெங்கடாசலபதி படம் போட்ட மஞ்சள் பை நான்கு இருந்தது. பச்சை டோக்கனில் அதே நம்பர் கொண்ட மஞ்சள் பை ஒன்றைக் காட்டி "இதுவா" என்ற செக்யூரிட்டி. "காஷ் கவுன்டரில் ஜோஷ்வா சாரிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள் பிறகு தருகிறேன்" என்றார். ஜோஷ்வாவிடம் கெஞ்சிக் கூத்தாடி மஞ்சள் பை ஒரு வழியாக கிடைத்தது. 

அவசரமாக ஆட்டோ பிடித்து மாம்பலம் என்றார் ராமு. ஆட்டோ புறப்பட்டதும் மெதுவாய் மஞ்சள் பைக்குள் கையை விட்டுத் துழாவிப் பார்த்தார். அவர் மகளுக்கு ஆசையாக வாங்கிய நெக்லஸ் பெட்டி இருக்கிறதா என்று. ராமுவின் கைகள் சில்லிட்டுப் போயிற்று. அந்தப் பைக்குள் ஒரு துண்டு, வெற்றிலைப் பொட்டலம், ஒரு நீள இரும்பு சாவி, சின்ன சில்லரைப் பர்ஸ். 

நூற்றுப் பதினொன்று என்ற டோக்கன் நம்பர் நெஞ்சை அழுத்தியது. பையைத் திருப்பிய போது வெங்கடாஜலபதி சிரித்துக் கொண்டு இருப்பது போல் பட்டது ராமுவிற்கு. வீட்டிற்கு முகத்தை தொங்கப் போட்டவாறு நுழைந்த ராமு ரொம்ப நேரம் பேசவே இல்லை...!

No comments:

Post a Comment