Thursday, November 27, 2014

Value for Money and Value for Life...??!!

கதையல்ல நிஜம் - 11
- டாக்டர் பாலசாண்டில்யன் 

ராஜனுக்கு வயது 75 இருக்கும். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து வந்தார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று விழுப்புணர்வுக்கூட்டங்கள் நடத்தி வாழ்வியல் மதிப்புகள் பற்றிய போதனைகளை சொல்லிவிட்டு வருவார். தினமுமே மனைவி செல்லத்திற்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்வார். வங்கிக் கணக்குகளைப் பராமரிப்பார். வீட்டிற்குச் சாமான்கள் வாங்கிப் போடுவார். உறவினர்கள் வீட்டிற்கு சில சமயம் சென்று வருவார். 

ஒரே பையன் வெளியூரில் வேலை. அவ்வப்போது வெளிநாடும் சென்று விடுவான். 

ஒரு சமயம் தனது பையன் ஊரிலிருந்து வந்திருந்த சமயம் வெகுநேரம் காலை பேசிக் கொண்டு இருந்து விட்டு தாமதமாக குளிக்கச் சென்றார். வெளியில் வரும் போது யாரோ தள்ளியது போல உணர்ந்து இடுப்பில் துண்டுடனே கட்டிலில் அமர்ந்து கொண்டார். சில நிமிடங்களில் கண்கள் சொருகும் நிலை கண்டு மனைவி செல்லமும் மகன் மகேஷும் அவரை அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்து கொண்டு சென்றனர். 

ராஜனை உள்ளே ஒரு படுக்கை வண்டியில் போட்டு தள்ளிக் கொண்டு விரைந்தனர். செல்லம் அழுத வண்ணம் நின்று கொண்டிருந்தாள். மகேஷ் தனது மாமாவிற்கு போன் செய்து விட்டு, அப்பா அட்மிஷன் செய்திட அங்கே கொடுத்த பேப்பரில் எழுதிக் கொடுத்து விட்டு பத்தாயிரம் பணமும் செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டான்.

மகேஷின் மாமா ஒரு சமூக ஆர்வலர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் என்பதால் நேரே சென்று தனது உறவினரின் பெயர் சொல்லி அவர் எங்கே என்று வினவினான். தனது அடையாள அட்டையைக் காண்பித்து விட்டு உள்ளே நுழைந்து விட்ட போது சில நர்சுகள், மற்றும் இரண்டு டாக்டர்கள் ராஜனை நெஞ்சில் குத்திக்கொண்டு இருந்தனர். ஒரு ஊசியும் போட தயாராக இருந்தனர். மகேஷ் அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு நடப்பது என்ன என்ற விபரம் கேட்ட போது புரிந்து கொண்டான் ராஜன் அங்கே கொண்டு வரும் போதே இறந்து விட்டார் என்று. 

அடுத்த அரை மணி நேரத்தில் ராஜன் பொட்டலம் கட்டப்பட்டு சடலமாக ஒப்படைக்கப்பட்டு வண்டியில் ஏற்றப்பட்டார். ஏற்கனவே கட்டிய பணத்தில் மீதி என்று மூன்றாயிரம் ரூபாயும் கொடுக்கப்பட்டது.

மகேஷின் மாமா அங்கே உரிய நேரத்தில் வரவில்லை என்றால் ராஜன் அந்த மருத்துவமனையில் குறைந்த பட்சம் ஒரு நான்கு நாட்கள் இருந்திருப்பார். தவிர இரண்டு மூன்று லட்சம் பணமும் செலவு ஆகி இருக்கும்.  இதனை அங்கே ராஜனை வண்டியில் ஏற்றும் போது ஒரு ஊழியர் சொன்னார்....!

No comments:

Post a Comment