Saturday, November 22, 2014

To live without Re'marks'...

கதையல்ல நிஜம் - 5
- டாக்டர் பாலசாண்டில்யன்
எப்போதும் நான்கு மணிக்கே வீடு திரும்பும் யாமினியை இன்னும் காணவில்லை. 'ப்ரெண்ட் வீட்டிற்குப் போயிருப்பாளோ?' துடிதுடித்துப் போனாள் காயத்ரி.
மணி ஆறு ஆயிற்று. யாமினி இன்னும் வந்தபாடில்லை. காயத்ரி ராமனுக்குப் போன் செய்தாள். "ஏங்க யாமினி இன்னும் வீட்டுக்கு வரவில்லை. எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை"
எதிர்ப்புறத்திலிருந்து ராமன் நிதானமாக, "வருவாள், ஏன் பதறுகிறாய் ? சும்மா போன் செய்து என்னைத் தொந்தரவு செய்யாதே" என்றான்.
மணி 8 ஆயிற்று. வீடு வந்து சேர்ந்த ராமனும் குழம்பித் தான் போனான்.
யாமினியின் வகுப்பு தோழர்களுக்கு தோழிகளுக்கு எல்லாம் ஒவ்வொருவராய் போன் செய்தான் ராமன். உஷா, சந்திரா என்ற இன்னும் இரண்டு பெண்கள் வீடு வந்து சேரவில்லை என்று தெரியவந்தது.
ராமனுக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது.
திடீரென்று கோபாலிடம் (யாமினியின் வகுப்புத் தோழன் ) இருந்து போன் வந்தது. "சார் நான் கோபால் பேசறேன் ..யாமினி, உஷா மற்றும் சந்திரா மூவரும் ரயிலில் ஏறி வெளியூர் போகத் திட்டம் போட்டுள்ளனர். வண்டி சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து பத்து மணிக்குப் புறப்படுகிறது."
போனை அவசரமாக வைத்து விட்டு ராமனும் காயத்ரியும் ஆட்டோ பிடித்து சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் விரைந்தனர்.
சரியாக 9.35 இருக்கும். ராமன் ஒவ்வொரு பெட்டியாகத் தேடிக் கொண்டே ஓடினான். காயத்ரி இன்னொரு புறம் ஓடினாள். போலீஸ்காரர் ஒருவர் முன்பு மூன்று பள்ளி மாணவிகள் யூனிபார்முடன் நின்று கொண்டிருந்தனர். மூவரில் ஒருவர் யாமினி. பின்னால் இருந்தே அடையாளம் தெரிந்தது ராமனுக்கு.
முன்னால் வந்து யாமினியைப் பார்த்து அங்கேயே மயக்கம் அடைந்தான்.
காயத்ரியும் அங்கு வந்து சேர்ந்தாள். யாமினியை கன்னம் கன்னமாக அறைந்தாள்.
கூனிக் குறுகிப் போன ராமனும் காயத்ரியும் மறுநாள் பள்ளி பிரின்சிபால் முன்பு செய்வதறியாது கைகளைப் பிசைந்தபடி நின்றார்கள்.
'படி படி ...இந்த மார்க் பத்தாது' என்று கத்திய பெற்றோர் பலர் கதியும் இது தானோ ..?!

No comments:

Post a Comment