Monday, November 4, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 4

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி :

4. "செயலில் இறங்கு"

நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி"  என்று பாடினான் பாரதி. 

பேச்சை நிறுத்து, பணியைத் தொடங்கு  என்பர் பெரியோர். குறைவாகப் பேசு, அதிகம் வேலை செய் என்று சில காலம் முன்பு இந்திரா காந்தி அவர்கள் சொன்னது மிகவும் பிரபலம்.

 'குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு' என்று ஒரு பழமொழி உண்டு. நான் ஒன்றும் புதிதாக சொல்லி விடவில்லை. இருப்பினும் நிதானமாக இருப்பவர்கள் தான் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்று நிச்சயம் நினைப்பார்கள்.  மற்றபடி சொன்னபடி ஒருவர் செய்யவில்லை என்றால் ஏன் இப்படி 'அரசியல்வாதி கொடுத்த வாக்குறுதி போல நடந்து கொள்கிறாய்" என்று கேட்பர்.எனவே சொல் வேறு செயல் வேறு என்று இல்லாமல் வார்த்தையே வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டுவோருக்கு என்றுமே மதிப்பு அதிகம் தான்.

கடலில் அலைகள் ஓய்வதெப்போது ? நாம் அதில் மூழ்கிக் குளிப்பது எப்போது என்பர் சிலர். அது போல நதியில் கால் நனைக்க நினைத்து தயங்கித் தயங்கி சிலர் காலை முன்வைத்து ஆழம் பார்ப்பர். ஒரு போதும் அவர்கள் நதியில் இறங்கமாட்டார்கள்.

அது போல  செயலில் இறங்க வேண்டும் என்றால் அதற்கு சரியான யோசனை, திட்டமிடல், மனஉறுதி, நேர மேலாண்மை, சாதிக்க வேண்டும் என்ற வேட்கை, சுய ஊக்கம், தன்னார்வம், தோல்வி கண்டு துவளாமை, தொடர் மற்றும் விடா முயற்சி, விமர்சனங்களுக்கு அஞ்சாமை என்று பற்பல பண்புகளை, செயல் சார்ந்த திறன்களை வளர்த்துக் கொண்டால் நிச்சயம் செய்யும் செயல் சரியாக முடியும். அது பிறருக்கு நன்மை பயக்கும். மற்றவருக்கு உந்துதலாக இருக்கும். பெயர் புகழ் செல்வம் பெற்றுத் தரும்.

வெற்றுச்சிந்தனை, திட்டமிடாத யோசனைகள், தவறான செயல்பாடுகள் நிச்சயம் பயன் தராது.செயலில் இறங்குங்கள். அதற்கு முன்பு 'எண்ணித் துணிக' என்பது போல முன்கூட்டியே யோசித்து அந்த செயலின் பின்விளைவுகள், நன்மை, தீமைகள், லாப நஷ்டங்கள் இவை பற்றி ஆய்ந்தறிந்து பிறகு தொடங்குங்கள். அப்படி செய்யும் எந்த செயலும் சாதனையில் தான் முடியும். இது திண்ணம். 

No comments:

Post a Comment