Wednesday, November 6, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 7

7. வசதி வட்டம் படுகுழி தான் 
உள்ளங்கையில் உலகம் எனும் நிலையில் வாழ்க்கை மாறி இருக்கிறது. ஒரு கைபேசி என்பது பேச, பாட்டு கேட்க, போட்டோ எடுக்க, மெயில் பார்க்க மற்றும் அனுப்ப, சமூக வலைத்தளங்களில் நுழைந்து வெளிவர, திரைப்படங்கள் பார்க்க, தொலைதூரம் இருப்பவரோடு கூட வீடியோ மூலம் பேச என்று மாறி இருப்பது எல்லாமே ஒன்றும் புதிதாக நான் சொல்லி விடவில்லை.
தவிர, வங்கிக்கே போகாமல் பணப்பரிவர்தனைகள், பரிமாற்றங்கள் செய்வது, கைபேசி மூலமே டிவியை போடுவது அணைப்பது, பயணச் சீட்டுகள் பெறுவது, திரைப்படங்களுக்கு சீட்டு எடுப்பது, உட்கார்ந்திருக்கும் இடத்திற்கே உணவு வரவழைப்பது, மளிகை ஜவுளி முதல் மருந்து நகை என்று எதுவுமே பொத்தான் அழுத்தினாலே வந்து விடும் என்ற அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது நிச்சயம் வரம் தான், சாபம் அல்ல. 
இருப்பினும் உட்கார்ந்த இடத்திலேயே அலுவலகத்தில், வீட்டில், பொது இடங்களில் என்று எல்லாவற்றையும் சாதித்துக் கொள்ள வைக்கும் இந்த தொழில்நுட்பம் அனைவரையும் சோம்பேறி ஆக்கி விட்டது என்பதில் என்ன சந்தேகம் அல்லது மாற்றுக்கருத்து இருந்து விட முடியும். 
எத்தனை தூரம் நடந்தோம், எத்தனை கலோரி எரித்தோம் என்று காட்டும் கருவிகள் கைபேசியில் வந்து விட்டது நன்மையே. ஆனால் நாம் எழுந்து நடக்கிறோமா என்றால் இல்லை என்பதே உண்மை. 'சிட்டிங் டிசீஸ்' என்ற அமர்வு நோய் மற்றும் 'காட்ஜெட் டிசீஸ்' எனும் கருவி நோய் போன்ற புதிய நோய் வந்து நரம்பு வலி, மணிக்கட்டு, கழுத்து, மற்றும் கைவலி குழந்தை முதல் முதியோர் வரை வரத் தொடங்கி விட்டது. மேலும் அப்படி சற்றும் நகராமல் இருக்கும் நகர வாழ்க்கையில் சிறியவர்களுக்கு கூட ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மற்றும் இதய நோய் எல்லாமே வந்து விட்டது.
போதாக்குறைக்கு ஐடி ஊழியர்கள் 'பிளெக்ஸி டைமிங்' என்று சொல்லி 'ஒர்க் பிரம் ஹோம்' எனும் வீட்டில் இருந்தே வேலை என்றெல்லாம் வந்து விட்டது. இரண்டு பஞ்ச் ஒரு லஞ்ச் என்பது கூட மாறி விட்டது. ஒரு லாக் இன் ஒரு லாக் அவுட் என்று ஆகி விட்டது. இதில் இருக்கும் அனுகூலங்களை விட ஆபத்து தான் அதிகம் என்று நான் சொன்னால் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பு அதிகம் இல்லை தானே?
சற்றேனும் உடல் அசைவுகள், நகர்வுகள் இல்லாமல் எல்லாமே உட்கார்ந்த இடத்திலேயே பல காரியங்களை செய்து கொள்ளும் இன்றைய வசதி வட்டம் என்பது நமக்கு நாமே தோண்டிக் கொள்ளும் படுகுழி தான். தொழில்நுட்பத்தோடு நாம் வேகமாக பயணிக்க வேண்டும். அதோடு நாம் ஒத்துணர்வுடன் செயல்பட வேண்டும் இல்லையேல் நாம் பின்தங்கி விடுவோம் என்பதும் உண்மை தான். இருப்பினும் நம்மை வசதியாக மட்டும் வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் இந்த வசதிகள் நமக்குப் பயனற்றுப் போகும் என்பது திண்ணம்.
ஆகவே, சவால் வட்டம் எனும் 'பிஸிக்கல் பிட்னெஸ்' என்பதில் கவனம் வைத்தால் நீடு வாழலாம். பிட்னெஸ் என்பதை விட வெல்னஸ் எனப்படும் நலமுடன் நீடு வாழ்தல் தான் நன்மை பயக்கும். இன்று மருத்துவ மேம்பாடுகளால் ஆயுள் ஒருபுறம் கூடி விட்டாலும், நமது இந்த வசதி வட்ட பழக்க வழக்கங்கள் ஆயுள் குறைப்பவையாக இருக்கின்றன என்பதை மனதில் வைப்போம்.

No comments:

Post a Comment