Friday, November 8, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 8

8.  தெளிவாக இருங்கள் 

நமது கண்ணோட்டங்கள், யோசனைகள், வியூகங்கள், இலக்குகள், தகவல் பரிமாற்றங்கள், நோக்கங்கள், செயல்பாடுகள், எல்லாவற்றிலும் தெளிவாக இருத்தல் மிக அவசியம் ஆகிறது.

குடும்பம் என்றால் ஒரு தந்தையாக ஒரு தாயாக நமது குறிக்கோள், வாழ்க்கை லட்சியம், அதனை அடையும் வழி, வாழ்வியல் மதிப்பீடு என்று எல்லா விஷயங்களையும் நமது பிள்ளைகளிடம் மிகத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். அவற்றை நாம் முதலில் கண்டறிந்து யோசித்து வைத்திருத்தல் வேண்டும். அப்படி அந்த விஷயங்களை நமது பிள்ளைகளுக்கு எடுத்துரைக்கும் போது நமது பலங்கள் பலவீனங்கள் இவை பற்றியும் தெளிவாக தெரிந்து வைத்திருந்தால் நமது பிள்ளைகள் எதிர்கேள்வி எதுவும் கேட்காமல் நாம் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வர்.

அதே போல நாம் ஒரு மேலாளர் என்றால் நம்மைப் பற்றி, நமது நிறுவனம் பற்றி, நமது நிறுவனத்தின் பொருட்கள் அல்லது சேவை பற்றி, நிறுவனத்தின் குறிக்கோள், அடுத்தடுத்த திட்டங்கள், நிறுவனத்தின் எதிர்பார்ப்புகள், நமது பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்று எல்லா விஷயங்களையும் தெளிவாக தெரிந்து வைத்திருந்தால் நல்லது. நமது குழு அங்கத்தினர் ஒவ்வொருவர் பற்றியும் அவரவர் திறன், அவரவர் பங்களிப்பு இவை பற்றியும் தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தால் நமது பேச்சு அங்கே எடுபடும். இல்லையேல் நாம் என்ன சொன்னாலும் அவற்றை நம்மோடு உடன் பணியாற்றுகிறவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நமக்கே தெளிவு இல்லை என்று அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுவார்கள்.

ஒவ்வொரு மனிதரிடமும் எப்படிப் பழக வேண்டும், யாரிடம் எப்படி விஷயங்களை எடுத்து முன்வைக்க வேண்டும் என்று தெளிவாக கற்றுக் கொண்டால் நமது செயல்பாடு மிகவும் செம்மையாக சீரிய முறையில் இருக்கும். 

தேநீர் கடையில் கவனித்துப் பாருங்கள். தேநீர் தயாரித்தவுடன், வடிகட்டியில் ஊற்றி வேண்டாதவற்றை நீக்கி தெளிவான நல்ல தேநீரை மட்டும் நமக்கு பருகிடும் கோப்பையில் ஊற்றிக் கொடுப்பார் அந்த டீ மாஸ்டர்.

அது போல எந்த விஷயத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர், அரசியல்வாதி, அமைச்சர், பெற்றோர், நிறுவன முதலாளி, அதிகாரிகள் என்று அனைவரும் தனக்கு முதலில் தெளிவுபடுத்திகொண்டு பிறகு தான் சொல்ல நினைக்கும் அந்த விஷயத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நமக்கே தெளிவு இல்லை என்றால் எதிராளிக்கு எப்படி தெளிவு கிடைக்கும். 

தவறான விஷயத்தை மட்டும் இறுக்கப் பற்றிக் கொள்ளுகிற மனிதரை 'பன்னாடை' என்று திட்டுவதைப் பார்த்திருக்கலாம். பன்னாடை என்பது தென்னை அல்லது பனை மரத்து மட்டையில் நாம் காணலாம். பதநீரை பன்னாடை கொண்டு வடிகட்டுவர் கிராமத்து ஆட்கள். அப்படி வேண்டாததைப் பிடித்துக் கொள்ளும் அந்த 'பன்னாடை' போல நாம் இல்லாமல் கீழே விழுகிற பயன்படுத்தும் திரவம் போல தெளிவாக இருத்தல் நலம் பயக்கும். 

தெளிந்த நீரோடை என்பார்களே அப்படி இருக்க வேண்டும் நமது மனம் - அது குழப்பமில்லா நிலை எனலாம்.எண்ணத்தில், பேச்சில், எழுத்தில், செயல்பாட்டில், என எல்லாவற்றிலும் தெளிவு கொண்ட ஒருவர் எப்போதும் மதிக்கப்படுகிறார். அவர் வெற்றி பெறுகிறார். 'தெளிவு பெற்ற மதியினாய் வா வா' என்று பாரதி பாடுவான்.அந்தத் தெளிவு தான் ஞானம் தரும். வெற்றி தரும். பிறரின் மதிப்பைப் பெற்றுத் தரும். எனவே தெளிவாக இருப்போம்.
தெளிவாகத் தான் சொல்லி இருக்கிறேனா அல்லது இருக்கும் தெளிவையும் குழப்பி விட்டேனா ?

No comments:

Post a Comment