Tuesday, November 12, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 11

11. பெரிய விவரம் தேடுங்கள் 

அடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த விவரம் தேடும் விஷயத்தில் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஒரு பெண்ணிடம் எந்த விஷயம் கேட்டாலும் விவரமாக விளக்கமாக சொல்லுவர். ஓர் ஆண் என்றால் அதிகம் நீட்டி முழக்காமால் ஓரிரு வார்த்தைகளில் அந்த சம்பாஷணையை முடிக்கப் பார்ப்பார்.

உதாரணத்திற்கு ஒரு திருமணம் என்று வைத்துக் கொள்ளுவோம். ஆணிடம் விசாரித்தால் அவர் ரொம்ப நன்றாக நடந்தது என்பார். அதில் அதிகம் திருப்தி அடையாத பெண் மேலும் சில கேள்விகள் கேட்டு விவரங்கள் பெற்றிட முனைவர். அதே ஒரு பெண் என்றால் திருமணப்பெண் மற்றும் மாப்பிள்ளை பொருத்தம், அவர்கள் உடை, அலங்காரம், மற்றும் வந்திருந்த கூட்டத்தின் விவரம், வந்திருந்த சில விஐபிக்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் பற்றிய விவரம், மற்றும் என்னென்ன உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஒரு பந்தியில் எவ்வளவு பேர் சாப்பிட்டு இருப்பார்கள். தவிர வந்திருந்த கூட்டத்தின் தன்மை (ஏழை, பணக்காரர், அழகானவர்கள், பலர் அங்கே பழகிய விதம்), பாட்டு கச்சேரி என்று அவர்கள் சொல்லும் விஷயங்களில் எதுவுமே விட்டுப்போகாது.

இப்படித் தான் ஒரு நிறுவனத்தின் அதிகாரிகளிடம் நிறுவனத்தின் இயக்குனர்கள் அல்லது நிர்வாகம் பற்பல விவரங்களை புள்ளி விவரங்களோடு எதிர்பார்க்கும். சொல்லப் போனால் திருமணம் போலவே ஒரு நிறுவனம் ஒரு அதிகாரியை ஒரு முக்கிய கூட்டத்திற்கு வெளியூரோ வெளிநாடோ அனுப்பி இருந்தால் அங்கு அந்த கூட்டத்தின் மொத்த விவரங்களின் அடிப்படை விஷயங்களை ரிப்போர்ட் எனும் பாணியில் எதிர்பார்க்கும். அதிகாரிகள் அப்படிப்பட்ட ரிப்போர்ட் தரும் போது போட்டோ, மற்றும் புள்ளி விவரங்களோடு அளித்தால் நிறுவனம் நிச்சயம் அவரை வெகுவாக பாராட்டும். அதையே ஒரு ப்ரெசென்ட்டேஷன் போல செய்து பிறரிடம் பகிர்ந்து கொண்டால் அங்கே அவருக்கு கிடைக்கும் பாராட்டும் அங்கீகாரமும் நிச்சயம் வேறு மாதிரி தான் இருக்கும். 

சில நிறுவனங்கள் இன்றைய கால கட்டத்தில் 'பிக் டேட்டா' என்று குறிப்பிடுவது என்னவென்றால், (தீபாவளி அல்லது புத்தாண்டு விற்பனை குறித்து நிர்வாகம் ஒரு ரிப்போர்ட் எதிர்பார்க்கிறது என்றால்) அங்கே நிறுவனத்தின் பல கிளைகளில் எவ்வளவு (ப்ரொடக்ட் வாரியாக ) விற்பனை நடந்துள்ளது. எந்தப் பொருளில் பின்னடைவு, எது மெதுவாக விற்றது, எது தங்கிப் போனது என்றெல்லாம் நிச்சயம் நிறுவனம் எதிர்பார்க்கும். அப்படிப்பட்ட விவரமான விஷயங்களை கொடுக்க வேண்டும் என்றால் கண்களை, காதுகளை நிச்சயம் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். பல தரப்பட்ட மக்களோடு கலந்துரையாடி விவரங்களை சேகரித்தல் வேண்டும். அதே போல போட்டி நிறுவனங்கள் இம்முறை எப்படி இந்த சூழலை எதிர்கொண்டுள்ளது, பொதுவாக இம்முறை சந்தை எப்படி இருந்தது, எந்த நிறுவனம் முன்னிலையில் இருந்தது, யார் மிகவும் மோசமான வணிகத்தை சந்தித்தனர் என்றெல்லாம் விவரம் திரட்டி அதனை நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கும் போது நம் மீது இருக்கும் மரியாதை, நமது அந்தஸ்து பன்மடங்காகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

பெரிய விவரங்கள் திரட்டும் பொழுது சூழல் அறிவு, பரந்து பட்ட பறவையின் பார்வை போல விரிந்த பார்வை நிச்சயம் தேவை. அதற்கு நிச்சயம் முழுமையான ஈடுபாடு, பிறரோடு பழகும் பாங்கு, விவரங்களை தேடிச் சேகரிக்கும் ஆர்வம், சேகரித்து அவற்றை திரட்டும் திறன், திரட்டிய விவரங்களை சமர்ப்பிக்கும் அழகிய பாங்கு எல்லாமே இங்கே பிரதானமாகிறது.

ஆகவே பன்முகத் திறன் கொண்ட மனிதர்கள் பெரிய விவரம் தேடுவதில் மிகவும் கெட்டிக்காரர்களாக இருப்பர். என்ன இந்த சிறு கட்டுரையில் உங்களுக்கு ஏதேனும் பெரிய விவரம் கிட்டியதா?

No comments:

Post a Comment