Sunday, November 17, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 16

சுய கட்டுப்பாடு சிறந்தது 
சுய கட்டுப்பாடு என்பது நம்மை சற்று கட்டுப்பட்டு நிறுத்துகின்ற ஒரு வழிமுறை எனலாம். நமது எண்ணங்களை, நடத்தைகளை, வார்த்தைகளை சில தூண்டுதல்களில் இருந்து சில சலனங்களிலிருந்து தடுத்து நிறுத்துகிறது இந்த சுய கட்டுப்பாடு.
நமது இலக்குகளை அல்லது இலட்சியங்களை அடையத் தேவையான  ஓர் அறிவுசார் செயல்முறை இது என்று கூறலாம். 
எதைப்பார்த்தாலும் வாங்க வேண்டும் என்ற நுகர்வோர் மனநிலை, இனிப்பு உணவைக் கண்டால் நப்பாசை, தவிர சில தீய பழக்கங்களுக்கு  (புகைத்தல், மது அருந்துதல், போதைக்கு ஆளாகுதல் இன்ன பிற) அடிமையாக இருத்தல் போன்ற பல விஷயங்களில் நமது சுய கட்டுப்பாட்டை இழக்கிறோம். 
இன்றைய காலகட்டங்களில் நொடிக்கொரு முறை மொபைல் எடுத்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தல், முகநூலில் மூழ்கி இருத்தல், அடிக்கடி செல்பி எடுத்துக்கொள்ளுதல், பார்க்கும் பொருட்களை உடனே வாங்கி விடுதல், யார் எது வைத்திருந்தாலும் அதனை தானும் வாங்கி விட வேண்டும் என்ற வேட்கை கொள்ளுதல், விடாது பேசிக் கொண்டே இருத்தல் இப்படி பல விஷயங்களில் மக்கள் சுய கட்டுப்பாட்டை இழந்து நிற்பதைக் காண முடிகிறது. இது ஒரு நல்ல அறிகுறி அல்ல. 
அருகில் இருக்கும் ஒரு பாக்கெரியில் இருந்து வாசனை வந்தால் உடனே சென்று ஒரு பிஸ்கட் வாங்குதல், வாசலில் மணி அடித்தாலே ஓடிச் சென்று ஐஸ்கிரீம் அல்லது வேர்க்கடலை வாங்குதல், வாகனத்தில் செல்லும் பொழுது பலாப்பழ வாசனை வந்தால் உடனே வண்டியை நிறுத்தி கொஞ்சம் வாங்குதல், டீக் கடையை பார்த்த மாத்திரத்தில் தேநீர் வாங்கிப் பருகுதல் என்று சுய கட்டுப்பாட்டை இழக்கும் பலரை அன்றாடம் காணலாம். 
எத்தனை முறை மணி சத்தம் கேட்டாலும் நான் வாசல்பக்கம் போக மாட்டேன், ஐஸ்கிரீம் அல்லது வேர்க்கடலை வாங்க மாட்டேன் என்று நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளுவது தான் நமது மனஉறுதி எனப்படுவது. "மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்" என்று பாடுவான் பாரதி. இதனை நெஞ்சுறுதி என்றும் சொல்லுவார்கள். 
நான் பொய் சொல்ல மாட்டேன். புலால் உண்ண மாட்டேன். அஹிம்சை வழியில் தான் செல்லுவேன். இப்படிச் சொல்லி அதன் படி வாழ்ந்து காட்டிய தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் தான் சுய ஒழுக்கம் அல்லது சுய கட்டுப்பாடு என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
சுய கட்டுப்பாடு பெரும்பாலும் நமது உடல்நலம் காக்க, பணியில் சிறப்பை வெளிப்படுத்த, தரமான வாழ்வை அளிக்க, பலரிடம் நற்பெயர் எடுக்க, பல சாதனைகள் செய்ய, பிறருக்கு உதவ, பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க உதவுகிறது. 
நேரத்திற்கு எழுந்து யோகா மற்றும் உடற்பயிற்சி செய்தல், தியானம் செய்தல், இரவு நேரத்தே உறங்குதல், உடலுக்கு ஒவ்வாத உணவைத் தவிர்த்தல், கெட்ட பழக்கங்களை தவிர்த்தல், தினம் நல்ல நூல்களை வாசித்தல், இயன்றவரை இயலாதவருக்கு உதவுதல் என்று நல்ல பழக்கங்களை வரவழைத்துக் கொண்டு அதன் படி விடாமல் நடந்து கொள்ள சுய கட்டுப்பாடு நிச்சயம் உதவுகிறது.
வெற்றி வாய்ப்பை அதிகரிக்க, செல்வத்தைப் பெருக்க, ஆரோக்கியமாக இருக்க, சமூக நன்மதிப்பைப் பெற, இலக்குகளை அடைய, சலனங்களில் இருந்து காக்க சுய கட்டுப்பாடு உதவுகிறது எனும் நோக்கத்தை புரிந்து கொண்டு நமது சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் கட்டற்ற மட்டற்ற வெற்றியும் ஆனந்தமும் கிடைக்கும் என்பது உறுதி.
தவிர மனஅமைதி, உணர்ச்சிக்கட்டுப்பாடு, நேர்மையான வாழ்வுமுறை, நல்ல சரியான முடிவுகள் எடுக்க, மற்றவர்களோடு நல்ல புரிதல் எல்லாமே சுய கட்டுப்பட்டால் ஏற்படும் நன்மை எனலாம்.
முக்கியமாக, பிறர் நம்மைக் கட்டுப்படுத்துவது பிடிக்காது என்பதால் நம்மை நாமே கட்டுக்குள் வைத்துக் கொள்ளுவது சிறந்த விஷயம் தானே?

No comments:

Post a Comment