Friday, December 20, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 41


 புறச்சவால்களும் பிற சவால்களும் 
முயற்சி எல்லா வேளைகளிலும் இன்பம் பயப்பதில்லை. ஆனால் முயற்சியின்றி இன்பம் ஒருபோதும் பிறப்பதில்லை.

“கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் தன்  பொல்லாச் சிறகை விரித்து” என்பது போல அவர் செய்கிறார் இவர் செய்கிறார் என்றெல்லாம் தொழில் தொடங்குவதால் நிச்சயம் நஷ்டத்தில் தான் கொண்டு போய் நிறுத்தும்

எல்லா இடங்களிலும் எல்லா வயதினராலும் பகிர்ந்து கொள்ளப்படும் கனவு சுதிந்திரமாக இருப்பது தான் (Being free). கண்டிப்பு, இறுக்கம், வரம்புக்கு உட்படுதல், இவையெல்லாம் கைதியாக்குவது போல உணர்வது உண்டு. சுதந்திரமாக இருத்தல் என்பது ஓர் அகநோக்கு. ஒருவன் சுந்தந்திரமாகச் செயல்பட அவனிடம் சிறிதளவு தைரியம், திறமை அவசியமாகிறது. வாழ்க்கையில் நம்பிக்கை மிக்க அடியை எடுத்து வைத்தல், சுயமாகச் சிந்தித்தல், செயல்படல், தனது வாழ்க்கைப் பாதையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளல், வெற்றி தோல்விகளை பயமின்றி துணிவுடன் எதிர்கொள்ளல் - எல்லாமே சுதந்திரமாக இருத்தலில் அடங்கும். அப்படிப்பட்டவர்கள் தான் தொழில்முனைவோர்களாக உருவாகிறார்கள். மெல்லிய காற்றுக்கே பொசுக்கென சாயும் ஊசி மரங்கள் போல அவர்கள் அல்லர். என்ன பிரளயம் ஆனாலும் அப்படியே நிற்கும் பனை மரங்கள் போல...!

இன்று போட்டிகளை சமாளிப்பது எப்படி? வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்புகளை எதிர்கொள்வது எப்படி ? அரசின் கட்டுப்பாடுகள், தீடிர் விதி மாற்றங்களை சமாளிப்பது எப்படி போன்ற சவால்கள்  ஏராளம். தொழில் முனைவோர்கள் இன்று பெரும்பாலும் அவசரப்படுகிறார்கள்....மிக விரைவில் பெரிய தொழிலதிபராக ஆகி விட வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்

இன்றைய சூழலில் நுகர்வோர் தேர்வு மற்றும் விருப்பம் மிகவும் மாறிவருகிறது. அவர்களின் சந்தை நிலவரம் மற்றும் சூழல் அறிவு அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் எல்லோர் மனதிலும் எழும் கேள்விகள் மக்கள் பணம் செலவழிப்பது தொடருமா? எல்லாத் தொழிலும் குதூகலம் அடையுமா? வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்களா? நம்பிக்கையுடன் களத்தில் தொடரலாமா ? இவை தான்.

தொழில் செய்வது என்பது ஒரு தவம் போல. நாடி, நரம்பு, செல் என்று ஒவ்வொன்றிலும் தொழில் பற்றிய வீரியமான எண்ணம் ஓங்கி இருத்தல் வேண்டும். பசி நோக்கார், கண் துஞ்சார் என்பது போல எப்போதும் பிசினெஸ் பற்றிய சிந்தனை இருந்தால் மட்டுமே தொடர்வேற்றி பெற முடியும்.

கச்சாப்பொருள் விலை ஏற்றம், பெட்ரோல் டீசல் விலை ஏற்றம், ஊழியர் ஊதிய மாற்றம், புதிய பொருட்களின் சந்தை வரவு, அரசு மான்யம் பெற சங்கடம், தொடர் மின்சாரம் பெறுவதில் சிக்கல், வங்கி வட்டி விகித மாற்றம்இறக்குமதி பெற்ற விலை குறைந்த பொருட்களின் வருகை, ஆட்சி மாற்றங்கள்தொழில் கொள்கைகளில் அரசின் புதிய கண்ணோட்டங்கள் போக்குவரத்து செலவுகளின் ஏற்றம், ஏற்றுமதி  தொழில் என்றால் மாறிக் கொண்டே இருக்கும் அந்நிய செலாவணி நிலை, வாடிக்கையாளர்களின் மாறி வரும் டேஸ்ட், தினம் தினம் மாறும் தொழில்நுட்ப மாற்றம், கண்கவர் பாக்கிங் மாற்றங்கள், சமூக வலைத்தளங்களின் ஆக்கரமிப்பு, சந்தைப்படுத்தலில் வந்து நிற்கும் புதிய யுக்திகள், தரக்கட்டுப்பாட்டு சிக்கல்கள் என்று நீளும் பட்டியலில் அனைத்துமே புறச்சிக்கல்கள் தான். இவற்றில் எதுவுமே தொழில் முனைவோர் கட்டுப்பாட்டில் இல்லை. இவற்றை சமாளித்திட நவீன அணுகுமுறை தொழிலில் தொடர்ந்து தேவை.

கண்களை மற்றும் காதுகளை திறந்து வைத்துக்கொண்டு செயல்படும் தொழில் முனைவோர்கள் நிச்சயம் இத்தகைய சவால்களை எளிதில் சமாளிக்கிறார்கள். எந்தவித மாற்றம் நிகழ்ந்தாலும் அவற்றிற்கேற்ப தமது சூழலை மாற்றிக் கொள்ளும் ஒரு விவேகம் தேவைப்படுகிறது. தொழில் முனைவோர்கள் தம்மைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டு பிறரையும் உற்சாகப்படுத்த வேண்டும். தன்னைத் தொடர்ந்து வெற்றியாளராக நிலைநிறுத்திக் கொள்ள தேவையான பயிற்சி எடுத்துக் கொள்ளுதல், பிசினெஸ் சம்பந்தமான பத்திரிகைகள் படித்தல், தொழில் அமைப்புகளில் உறுப்பினராக இருத்தல், அவர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், போட்டியாளர்களை தொடர்ந்து கண்காணித்தல் இவை அனைத்துமே கட்டாயம் அவசியமாகிறது

இயலும் என்றால் வாக்குறுதி கொடுத்தல்அதன்படி நிறைவேற்றுதல்,  மகிழ்வுடன் இருத்தல்,  எந்தவொரு வலியோ கவலையோ ஏமாற்றமோ  புன்னகையை அகற்றி விடாதபடி பார்த்துக் கொள்ளுதல்,   பிறரது அபிப்ராயம்  மனதுக்குள் செல்ல அனுமதிக்காது இருத்தல்நஷ்டங்களை, தளர்ச்சியை, வீழ்ச்சியை கண்டு ஒருபோதும் துவளாது இருத்தல்அதிக எதிர்பார்ப்பு இன்றி இருத்தல் எல்லாமே இன்றைய கால கட்டத்தில் மிக மிக  அவசியமாகிறது.

பண விஷயத்தில் ஈட்டல் கடினம், ஈட்டியதைக் காத்தல் அதனினும் கடினம். பண ஒழுக்கம் என்பது எப்போதும் அவசியம். எதற்காக வங்கிக் கடன் வாங்கினோமோ அந்த விஷயத்திற்கு செலவிடாது பணத்தை வேறு திசை திருப்பினால் புறச் சூழல்கள் தரும் தொல்லைகள் மிகப் பெரிய சவாலாக மாறும்.எல்லாவற்றை விட மிக முக்கியம் செலுத்த வேண்டிய வரிகளை நிலுவை இல்லாமல் செலுத்துதல், வெளிபடையாக இருத்தல், ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்திருத்தல் ஆகும்.

சரியான முறையில் செய்யப்படும் முயற்சி எல்லாத் தடைகளையும் தகர்த்து விடும் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள். அச்சம் தரும் புறச் சூழலிலும் செயல்களை தொடர்ந்து செய்யுங்கள். சக்தி தானாகவே வரும்


No comments:

Post a Comment