Monday, December 9, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 33


பொதுப்பழக்கங்களும் புதுப்பழக்கங்களும் 
முதலில் இதைத் தெரிந்து கொள்ளுவோம். எனது நண்பர் முனைவர்ஆறுமுகம் அவர்கள் பயிற்சி வகுப்பு ஒன்றில் இதனைக் குறிப்பிட்டார் : "பழக்கம் என்பது ஒரு தனி மனிதன் சம்பந்தப்பட்டது. அதுவே நாளடைவில் ஊரில் உள்ள பலரும் அதனை ஏற்று கடைபிடிக்க ஆரம்பித்தால் அது வழக்கம் என்கிறோம். பின்னாளில் அப்படிப்பட்ட வழக்கங்கள் சாத்திரங்களாக ஏன் சட்டங்களாகக் கூட ஆகி விடுகிறது" என்று
பொதுப்பழக்கங்கள் என்று நமது நாட்டில், குறிப்பாக தமிழ் நாட்டில் சில விஷயங்கள் உண்டு. அவை, பெரியோரை பெற்றோரை மதிப்பது, இறைவனுக்கு படைத்து விட்டு உண்ணுதல்,  நேர்த்திக்கடன் செலுத்துவது, பேருந்தில் வயதானவர்கள் நிற்கும் போது நமது அமர்ந்து இருக்கும் இடத்தை அவர்களுக்குத் தருவது, ஊர்த்திருவிழா செய்வது, விசேஷ நாட்களில் உறவினர்கள் இல்லம் செல்லுவது, பெண்களை மதிப்பது, குலதெய்வ வழிபாடு செய்வது என்று பல உதாரணங்கள் சொல்லலாம்.
தனி மனித பழக்கம் ஊர்ப்பழக்கமாக மாறுவது என்றால் நடைப்பயிற்சி செய்வது, அடிக்கடி வெளியே சாப்பிடுவது, சினிமா முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது, டிசம்பர் மாதம் பாட்டு கச்சேரிக்கு செல்லுவது, சபரிமலைக்கு மாலை போட்டுக் கொண்டு விரதம் இருப்பது, திருமண விஷேஷங்களின் போது பிளெக்ஸ் பானர் வைப்பது என்று இன்னும் சொல்லலாம்
இவை எல்லாம் நல்லதா கெட்டதா என்ற விவாதத்தில் இங்கே நுழையவில்லை
தவிர, பிள்ளைகளை எல்லா வகுப்பிற்கும் அனுப்புவது, ஆண் பெண் இருவருமே வேலைக்குப் போவது, அடிக்கடி மொபைல் மற்றும் வாகனங்கள் மாற்றுவது, ஸ்டாக் மார்க்கெட்டில் விளையாடுவது, சினிமாவை நெட்டில் பார்ப்பது, இணைய தளங்களில் வணிகம் செய்து பொருட்கள் வாங்குவது, கடன் அட்டைகள் வைத்துக் கொண்டு நிலைமை மீறி செலவு செய்வது, நவீன ஆடைகள் அணிந்து கொள்ளுவது, எப்போதும் கைபேசியில் இருப்பது, ஜிம் சேருவது, எடை குறைக்க வழி தேடி என்னென்னமோ செய்வதுமதுக்கடைக்கு மாலையில் சென்று பணத்தை இழந்து வாழவைத் தொலைத்து குடும்பத்தை கெடுப்பது என்று பொதுப்பழக்கங்கள் பல இப்போது புதிதாக கூடி இருக்கின்றன
இப்போது புதுப்பழக்கங்கள் நிறைய சமூகத்தில் மிக அதிகமாக ஆகி விட்டன. ஆண் பெண் பேதம் இன்றி புகைப்பது மது அருந்துவது, இரவு நேரம் தாண்டிய பிறகும் ஹோட்டலில் அமர்ந்து நண்பர்களோடு உணவு உண்ணுவது, கிளப் மற்றும் பப் செல்லுவது, காரில் நீண்ட பயணம் செய்வது, பிறந்த நாள் என்றால் கேக் வெட்டி பலரை அழைத்து படாடோபம் செய்வது என நீளும் பட்டியலில் மிகவும் ஆபத்தான விஷயங்களும் உண்டு.
பாம்புக்கு முன்னால், வெள்ளம் கரை புரண்டு போகும் போது பாலத்தில் நின்று, ஒரு விபத்து நடந்தால், கோவிலில் கடவுள் முன்பு என்று இடம் பொருள் ஏவல் பாராமல் செல்பி எடுத்துக் கொள்ளுவது புதுப்பழக்கங்களில் அடங்கும். எல்லா விஷயங்களுக்கும் போராட்டம் செய்து வீதிக்கு வருவது, சமூக வலைத்தளங்களில் கண்டபடி எழுதுவது, தேவையில்லாத விடீயோக்களை பதிவிறக்கம் செய்து பலருடன் பகிர்ந்து கொள்ளுவது என்று மனதை பாதிக்கும் இந்த புதுப் பழக்கங்களை பற்றி சொல்ல எழுத நிச்சயம் மனம் வருத்தம் கொள்ளுகிறது.
திருமணத்திற்கு முன்பே ஊர் சுற்றுவது, தகாத உறவு வைத்துக் கொள்ளுவது, பிள்ளைகள் கையில் மொபைல் கொடுத்து விடுவது, எப்போதும் செல்லும் கையுமாக இருப்பது, தனிக்குடித்தனம் போவது, பெற்றோரை ஆசிரமத்தில் சேர்ப்பது, நொறுக்குத் தீனி தின்று கொண்டே இருப்பது, பார்க்கும் பொருட்கள் யாவையும் வாங்குவது, அடிக்கடி வேலை மாற்றுவது, எதற்கும் வெட்கம் பயம் இன்றி நடந்து கொள்ளுவது, சற்றும் சகிப்புத்தன்மை இன்றி இருப்பது, எதுவாக இருந்தாலும் கூகிள் சொல்லுவதை மட்டும் நம்புவது, நுகர்வோர் கலாச்சாரத்தில் சிக்கிக் கொண்டு தவிப்பது எல்லாமே இந்த புதுப் பழக்கங்களில் அடங்கும்.
எல்லோரையும் 'அண்ணா' என்று அழைப்பது, எந்தக் கடைக்கு சென்றாலும் பேரம் பேசுவது, அதிக போக்குவரத்து இருக்கும் போது சாலையைக் கடப்பது, இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்குவது, இரண்டு சக்கர வானங்களில் மூன்று பேர் செல்லுவது, தெருவோரக் கடைகளில் சாப்பிடுவது, நாய் கோழி தவிர மீன்கள் வளர்ப்பது, குப்பையை கண்ட இடத்தில் போடுவது, எல்லா இடங்களிலும் துப்புவது, தெருக்களில் சிறுநீர் கழிப்பது, லுங்கி அல்லது நைட்டி அணிந்து எங்கு வேண்டுமானலும் செல்லுவது, இளம்பெண்கள் தலைவிரி கோலமாக அலைதல், தலைமுடியை வண்ணமயமாக மாற்றிக் கொள்ளுதல், இளைஞர்கள் தாடி வைத்துக் கொண்டு திரிதல், இப்படி நல்லது கெட்டது பாகுபடுத்தி சொல்ல முடியாவிட்டாலும் நிறைய புதுப் பழக்கங்கள் இந்திய இளைஞர்களை தொற்றிக் கொண்டு இருக்கிறது.
அதே சமயம் வெளிநாட்டவர்கள் வணக்கம் சொல்லுவது, யோகா செய்வது, நெற்றியில் பொட்டு வைப்பது, தோப்புக்கரணம் போடுவது, என்று நமது நல்ல பழக்கங்களை தமது நாடு சென்று கடைபிடிக்கிறார்கள்.
இழிபழக்கங்களை விட்டு விட்டால் நமக்கு நல்லது. இது பிறர் சொல்லி செய்வதை விட நாமே உணர்ந்து செய்வது மிகவும் சிறப்பு. நிச்சயம் நமக்கு தெரியும் எவை நல்ல பழக்கம் எவை தீய பழக்கம் என்று. யோசித்துச் செய்தல் மிக நல்ல பழக்கம்.


No comments:

Post a Comment