Sunday, December 15, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 36

சத்தமா கோபமா ? ஒலி மாசு குறைப்போமா?

இந்தியர்கள் நாம் ஏன் மிகவும் சத்தமாகப் பேசுகிறோம்? என்றாவது யோசித்தது உண்டா?இங்கு எப்போதும் சத்த வெடி தான். எல்லா விதமான சத்தமும் நம்மை சுற்றி இருந்து கொண்டே இருக்கிறது. சாலையில் பாருங்கள் எங்கு பார்த்தாலும் என்று பார்த்தாலும் பஸ், லாரி, கார், பைக் மற்றும் ஆட்டோ வண்டிகளின் ஹார்ன் சப்தம் ஓயாமல் ஒலித்த வண்ணம் இருக்கிறது.

உலகெங்கும் உள்ள வண்டிகளில் ஹார்ன் இருக்கும். ஆனால் அவற்றில் இருந்து கை எடுக்காமல் அடித்த வண்ணம் இருப்பவர் என்னவோ நாம் மட்டுமே.பல நாடுகள் பயணித்தவர்கள் இந்த கருத்தை ஏற்றுக் கொள்ளுவார்கள். ஏதோ ஒரு காரணத்திற்கு அல்லது காரணமே இல்லாமல் ஹார்ன் அடிப்பது இந்திய வாகன ஓட்டிகளின் மாற்ற இயலாத பழகிப் போன குணம். 

தவிர, தொடர்ந்து புதிதாக அல்லது பழையதை இடித்து கட்டப்படும் கட்டிட தொழிலாளர்கள் ஏற்படுத்தும் இயந்திர மற்றும் சுத்தியல் ஒலி கேட்கிறது நாடு முழுவதும். மெட்ரோ ரயில் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி அறிவிப்பு வேறு வந்து விட்டதால் புதிய வளாகங்கள், பாலங்கள், கட்டிடங்கள் எல்லாம் வரும் சூழல், அதனால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்த சத்தம் நிச்சயம் குறையாது...மாறாது.

இந்தியாவில் சத்தமின்றி கட்டிடம் கட்டும் தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை.  ஏறிக்கொண்டு இருக்கும் நமது மக்கள் தொகை, 2024 ல் சீனாவை முந்தும் நிலையில் புதிய வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள், வானுயர் அடுக்கு மாடிக்கட்டிடங்கள் இவற்றை யாராலும் தடுக்க முடியாது. அவை ஏற்படுத்தும் சத்தங்களையும் தான்.  

எல்லாவற்றையும் மிரட்டி தோற்க வைக்கும் சத்தம் இந்திய மக்களாகிய நாம் ஏற்படுத்தும் சத்தம் தான். சத்தம் குறித்த மாசு (சவுண்ட் பொல்யூஷன்) என்று பார்க்கும் போது அது மக்களின் குரல் சத்தம் தான் என்று சொன்னால் அதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 'மனதின் குரல்' அது என்று புறந்தள்ள முடியாது.

ஒட்டுமொத்த சத்தங்களுக்கு இந்தியர்கள் நாமெல்லாம் பொறுப்பு என்பதில் சந்தேகம் இல்லை.  உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதைத் தாண்டி உலகின் அதிக ஒலி பெருக்கி நாடும் நமதே.  இந்தியர்கள் நமக்கு பேசுவது மிகவும் பிடிக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? நிறைய பேசுகிறோம் அன்றாடம், ஐபிஎல் பற்றி, அரசியல் பற்றி, ஸ்டாக் மார்க்கெட் பற்றி, பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி, கைது ஆகிடும் அரசியல்வாதி பற்றி, புதிய கூட்டணிகள் பற்றி, நடிக நடிகைகள் கிசுகிசுக்கள் பற்றி, வட்டார வம்பு தும்புகள், கொலை கொள்ளைகள், உடல்நிலை சிக்கல்கள், புதிய டிவி நிகழ்ச்சிகள் பற்றி,

பேசி சத்தம் போட, சத்தமாக பேசிட விஷயமா இல்லை? வெறுமனே பேசுவது இல்லை நாம். நமது குரலின் உச்ச ஸ்தாயியில் கத்திப் பேசுவது தான் நமது இயல்பு. குரல்வளை நரம்புகள் முறுக்கிக் கொள்வதே பேசிப் பேசித் தான். சத்தமாக பேசினால் தான் நமது விஷயம் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற கருத்தைத் தாண்டி நாம் அன்றாடம் டிவி தொகுப்பாளர்கள் கத்தி கத்தி பேசி நம்மையும் அப்படி மாற்றி விட்டார்கள் என்பது நாமே உணராத உண்மை. எல்லா டிவி செய்தி வாசிப்பாளர்களும் கத்திப் பேசுகிறார்கள். கத்திப் பேசினால் அது முக்கியமான விஷயம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.  

எழுதும் பொழுது பெரிய எழுத்தில் தலைப்புச் செய்திகள், கவர்ந்து இழுக்கும் தலைப்புகள் கூட கத்திப் பேசுவதற்கு சமம். சத்தமான குரலும் பெரிய எழுத்துக்களும் ஒன்று தான். முகநூலில் சிலர் கேப்பிடல் எழுத்துக்களை பயன் படுத்துகிறார்கள். அதுவும் கத்துவது போலவே.  

அடி வயிற்றில் இருந்து நாபிக் கமலத்தில் இருந்து கத்திப் பேசினால் தான் நாம் கேட்கப் படுவோம் என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள், வக்கீல்கள், தெரு வணிகர்கள், மீன் வியாபாரிகள், அரசியல்வாதிகள், ஊடக நண்பர்கள் எல்லோருமே நமக்கு திரும்பத் திரும்பக் கற்றுத் தருகிறார்கள்.

இந்த ஆழமாக பதிந்து போன பழக்கத்தை ஆழ்மனதில் இருந்து களைந்து எறிந்து நம்மை மாற்றிக் கொள்ளுவது மிக மிக கடினம்.  

மெதுவாக பேசுவதே கடினம் எனும் பொழுது மௌனமாக இருப்பது அதை விட கடினம் அல்லவா?

இந்தியா ஒளிர்கிறது என்பதை விட இந்தியா ஒலிக்கிறது என்பதே பொருத்தமாக இருக்கும். என்று தணியும் நமது சத்தம்.

புன்னகை மூலம் சத்தம் குறைக்கலாம். உள்ளன்பு இருந்தால் கண்கள் கூட புன்முறுவல் பூக்கும். முயற்சிப்போமா? 

No comments:

Post a Comment