Tuesday, December 10, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி 34

முடிவில் முடிவு என்னவாகிறது?
பல நேரம் தனிநபர்கள் அந்த நொடியில் தருணத்தில் சூழலில் முடிவெடுக்கும் படி தள்ளப்பட்டு அந்த முடிவினை செயப்படுத்துகிறார்கள். இதில் ஒரு பெரிய முடிவெடுக்கும் செயல்முறைகள் எதுவும் இருக்காது. அதனால் என்ன ஆகும்,. விளைவுகள் என்ன, என்றெல்லாம் யோசிப்பதில்லை. அவர்கள் எடுப்பதே இறுதி முடிவு என்றாகிறது. 
இதுவே ஓர் அரசு, நிறுவனம் என்றால் குழுவாக அமர்ந்து பல ஆய்வுகள், தகவல்கள், விவாதங்கள் இவற்றிற்கு பிறகு (அதனால் என்ன விளைவுகள் ஏற்படலாம் என்று உணர்ந்து) ஒரு முடிவினை எடுப்பார்கள். அது குடியிருமை பற்றியோ அல்லது விண்வெளிக்கலம் அனுப்புவது குறித்தோ இருக்கலாம்.
தனி நபர்கள் சொல்லுவார்கள் நான் இந்த முறை விடுப்பு எடுக்கலாமா வேண்டாமா என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. 
அதுவே பிரதமர் இனி இரண்டாயிரம் ரூபாய் செல்லாது என்று முடிவு செய்து அறிவித்தார் எனும் சூழல் வேறு.
தவறான ஒரு செயலை முருகன் எனும் ஊழியர் செய்ததால் நிறுவனம் அவரை பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டது. ஆனால் அதற்கு சில விவாதங்கள், வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டு இருக்கும். 
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இனி இரண்டு  மாதங்களுக்கு பிறகு தான் நடக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சி இனி நடக்காமல் போகலாம். இப்படி ஒரு சேனல் அறிவிப்பு செய்தால் அந்த முடிவு சந்தை விவகாரங்களை சிந்தித்து எடுக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். 
மீனவர்களை விடுவித்து விடுவோம் என்று அண்டை நாட்டு அமைச்சர் அறிவித்தால் அந்த முடிவு என்பது அவரின் முடிவல்ல. அது அவர் நாட்டின் முடிவு. 
டாஸ் வென்ற பிறகு முதலில் பாட் செய்யப்போகிறோம் என்று விராட் கோலி சொன்னால், அது அவர் முடிவு அல்ல, அவரது குழு நிர்வாகத்தின் முடிவும் அது தான். அதனை அவர் சொல்லுகிறார்.
நான் வரும் புத்தாண்டு முதல் புகைக்க மாட்டேன், மது அருந்த மாட்டேன் என்று ஒருவர் சொன்னால் அது அவரின் தனிப்பட்ட முடிவு. இன்று நான் பத்து மணிக்கே உறங்கப்போகிறேன் என்று ஒரு பெண் சொன்னால் அது அவர் எடுத்த முடிவு. நான் எனது வேலையை ராஜினாமா செய்யப் போகிறேன். இது ஒரு தனி நபரின் முடிவு. இருப்பினும் அது அவரின் மற்றும் குடும்பத்தின் வருமானம் மற்றும் நிதி நிலையில் மாற்றம் கொணரலாம்.
இப்போது சொல்லுங்கள். முடிவு என்பது யார் எடுக்கிறார்கள். அதனால் யாருக்கு என்ன பயன், யாருக்கு நஷ்டம், யாருக்கு லாபம், யாருக்கு நன்மை, யாருக்கு தீமை என்பது போல விளைவுகளையும் பார்க்க வேண்டும். அந்த விளைவுகளுக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? அந்த முடிவை யார் ஏற்கப்போகிறார்கள்? என்று கூட பார்க்க வேண்டும்.
இதுவே நாளை முதல் எல்லோருக்கும் பொங்கல் பரிசு உண்டு என்று அரசு அறிவித்தால் அதனால் எத்தனை செலவாகும், எத்தனை பேர் பலன் பெறுவார்கள், அது எப்படி வழங்கப்படும், எங்கிருந்து இதற்கு நிதி வரும்? எத்தனை நாட்களில் இந்த பரிசு வழங்கப்பட வேண்டும், யார் இதனை எதிர்த்துப் பேசுவார்கள் என்று பலவாறாக யோசிக்க, அவற்றை எதிர்கொள்ள நாம் தயாரா என்றெல்லாம் முன்கூட்டியே திட்டமிடுகிறது அரசு.
வாழ்க்கை தானாக நகர்வதில்லை. நாம் தான் அதனை நகர்த்துகிறோம். அப்போது ஒவ்வொரு தருணத்திலும் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான் சிறந்த முடிவுகளை எடுக்கும் செயல் நிகழும். வாழ்வின் சாதரண முடிவுகள், சிறு சிறு முடிவுகள், பெரிய முடிவுகள் என்று அவை வித்தியாசப்படுகின்றன. இன்று என்ன உடை அணியலாம், அலுவலகம் செல்லலாமா வேண்டாமா என்பவை வேறு. சொந்த வீடு வாங்கலாமா வேண்டாமா? காதல் திருமணம் செய்து கொள்ளலாமா? குழந்தை பெறுவதை தள்ளிப் போடலாமா? போன்றவை அவை.
அதே போல ஒரு நாட்டை நிர்வாகம் செய்யும் அரசு சில முடிவுகளை எடுக்கும். சில அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம்? யாரை முதல்வர் ஆக்கலாம்? இப்படி வாழ்நாள் முழுவதுமே முடிவுகளால் சூழப்பட்டவையே.. யார் முடிவெடுக்கிறார்கள்? என்ன முடிவெடுக்கிறார்கள்? என்ன விளைவு ஏற்படும்? நமக்கான முடிவை நாம் எடுக்கிறோமா, பிறர் எடுக்கிறார்களா? அப்பப்பா ! இவ்வளவு விஷயங்களா முடிவு எனும் போது?
முடிவெடுக்கும் போது ஒரு மனிதனின் ஐம்புலன்களும் சரியாக செயல்பட வேண்டும். இதை ஆங்கிலத்தில் 'ரெஸோர்ஸ்புல் ஸ்டேட் அப் மைண்ட்' என்று சொல்லுவார்கள். அதாவது நமது மூளை மற்றும் அது சார்ந்த பல்வேறு அங்க அவயங்கள் சரியாக செயல்பட்டாலே ஒழிய நம்மால் சரியான நல்லதொரு முடிவை எடுத்தல் மிக மிக கடினம். நமக்கான முடிவை எடுப்பது, வேறு ஒருவாருக்காக ஒரு முடிவை எடுப்பது, ஒரு நிறுவனம் அல்லது அமைப்பிற்கான முடிவை எடுப்பது என்று இதில் பலவகை உண்டு. தவிர, தனிநபர் முடிவு, கூட்டு முடிவு என்றும் இருப்பதை நாம் அறிவோம்.
நானும் யோசிக்கிறேன். இந்த கட்டுரையை இன்று பிரசுரிக்கலாமா வேண்டாமா? ஏழெட்டு பேர் தான் தினமும் முகநூலில் எனது கட்டுரையை படிக்கிறார்கள். எனது பிளாக் கில் யார் யார் படிக்கிறார்கள் என்று கூடத் தெரியாது. இதற்கெதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டும். பரவாயில்லை. படிப்பவர்கள் பயன்பெறட்டும். பின்னால் நானே இவற்றை ஒரு நூலாக்கலாம். இப்படி எடுத்த முடிவினால் இதோ இந்த கட்டுரை உங்கள் கண்களில் இங்கே இன்று படுகிறது. 

No comments:

Post a Comment