Monday, December 2, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 26



இயலாமையும் இல்லாமையும் வேறு வேறு 
இயலாமை என்பது எதுவும் செய்ய முடியாத நிலை என்று பொதுவாக சொல்லி விட முடியும். ஆனால் அது மட்டுமல்ல.
இயலாமையில் அதிகாரமின்மை, ஆற்றலின்மை, உடல் மற்றும் உள்ள பலவீனத்தால் ஒன்றும் செய்ய முடியாமை, (தைரியம், துணிச்சல்,ஆண்மையின்மை கூட இதில் அடங்கும்), தகுதியின்மையால் இருக்கும் நிலை, போதிய திறன் மற்றும் திறமையின்மையால் வரும் நிலை, அறிவு சாமர்த்தியம் மற்றும் சாதுரியம் போதாமை, திறம்படச் செய்யத் தெரியாமை, போதிய அறிவு மற்றும் ஆற்றல் இல்லாமையால் ஏற்படும் நிலை  ஏதோ ஒரு குறைபாடு உள்ள நிலை என்று பலவாறு இதற்கு பொருள் உண்டு.
என்னால் இது இயலாது என்று ஒருவர் சொன்னால் அதற்கு மேற்சொன்ன பலவற்றுள் ஏதோ ஒன்று அல்லது அவற்றுள் பல கலந்த ஒரு நிலை அவரிடம் உள்ளது என்று தான் அர்த்தம். பொதுவாக வயது மற்றும் தள்ளாமை காரணமாக ஏற்கனவே மிக சிறப்பாக பல சாதனைகளைச் செய்த ஒருவரால் அன்று போல் இன்று செய்ய முடியவில்லை என்பது கூட இயலாமை தான். இதனை ஆங்கிலத்தில் இன்எபிலிட்டி என்பர். 
ஒருவரால் தன்னிடம் உள்ள காகிதத்தில் உள்ள விஷயத்தை படிக்க இயலவில்லை  என்றால் அவருக்கு அந்த காகிதத்தில் உள்ள ஆங்கில மொழி தெரியாது எனக் கொள்ளலாம்,  அல்லது அவருக்கு தற்போது கண்பார்வையில் கோளாறு என்றும் கொள்ளலாம். 
சிலருக்கு பல விதமான ஆற்றல், யோசனைகள், சாதுரியம் இருக்கும். அவற்றை வெளிப்படுத்த முடியாமல் இருக்கும் பலவிதமான கட்டுப்பாடுகளால் அவர் எதுவும் தெரியாதது போல இருக்கிறார் என்றால் அவரது சூழல் அவரை 'இயலாதவராக' ஆக்கி இருக்கிறது. அரசியலில், பத்திரிகைத் துறையில், விளையாட்டுத் துறையில் ஒரு சிலரின் ஆளுமையால், அதிகாரத்தால், கட்டுப்படுத்தும் சக்தியால் இன்று பலர் இந்த 'இயலாதவர்' பட்டியலுக்கு தள்ளப்பட்டு விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றனர் என்பது உண்மை.
இல்லாமை என்பது ஒருவருக்கு இயற்கையாகவே செல்வம், கல்வி, திறன், ஆற்றல், அறிவு, பலம், சக்தி, சிந்திக்கும் பழக்கம், துணிச்சல் இல்லாது இருக்கும் நிலையை குறிக்கிறது.
'எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்ற பழைய பாடல் (கறுப்புப்பணம் படத்தில் கவிஞர் கண்ணதாசன் வரிகளில் சீர்காழி அவர்கள் குரலில்) கேட்டு இருப்போம். அப்படி இல்லாமை என்பது 
போதிய உயிர்ச்சத்து இல்லாமை ஒருவரை என்ன செய்யும் என்று மருத்துவ ரீதியாக யோசித்துப் பார்ப்போம். சிலருக்கு உடலில் போதிய கால்சியம், உப்பு, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் டி, இருப்பதில்லை. அதனால் அவர்களுக்கு அது சம்பந்தமான நோய் உபாதைகள் வருகின்றன. அண்மையில் பலருக்கு டிங்கு எனும் காய்ச்சல் வந்த போது உடலில் தேவையான ப்ளட்லெட்ஸ் எனப்படும் தட்டணுக்கள் மிகவும் குறைந்து அது உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.
இயலாமை நிலையை போதிய உடற்பயிற்சி, மனப்பயிற்சி, திறன் பயிற்சி இவற்றின் மூலம் சற்று சரி செய்யலாம். 
அதே போல இல்லாமை என்பது - அறிவு என்றால் கல்வி புகட்டலாம். பணம் என்றால் உழைக்க, சம்பாதிக்க கற்றுக் கொடுக்கலாம். பிறர் வழங்கலாம். 
ஆக, இயலாமை ஓரளவுக்கு மாற்றக்கூடிய ஒன்றாகவும், இல்லாமை என்பது அதை விட சற்று அதிகமாக மாற்றக்கூடிய ஒன்றாகவும் நிச்சயம் இருக்கிறது. 
ஒரு நாட்டில் இல்லாமை என்பது நீக்கப்பட வேண்டும். அதே போல ஒரு நாடு வல்லரசாக மாற வேண்டும் என்றால் 'இயலாமை' என்ற நிலைமையை மாற்றி எல்லோரையும் திறனுள்ளவர்களாக, அறிவுள்ளவர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
குறிப்பாக எங்கும் உணவு, உடை, உறைவிடம், காற்று, நீர் கல்வி, வேலை போன்ற அடிப்படை விஷயங்கள் 'இல்லாமை' நிலையில் இருந்து மாறி விட்டால் அங்கே வளமை ஏற்படும். அப்போது அந்த நாடு 'இயலாமை' என்ற நிலையில் இருந்து மாறி வல்லமை பெற்ற ஒன்றாக மாறிவிடும் என்பதில் என்ன சந்தேகம்?




No comments:

Post a Comment