Wednesday, December 18, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 40

எல்லா சொல்லும் வெல்லும் சொல்லா ?
சில வார்த்தை வெல்லும். சில வார்த்தை கொல்லும். இப்படி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் உணரக்கூடிய ஆற்றலைக் கொண்டது. அது நாம் நினைப்பது, பேசுவது, கேட்பது, படிப்பது என்று எப்படியானாலும்  ஒரு சொல்லின் ஆற்றலை பல கூறுகள் பாதிக்கின்றன (சாதகமாக அல்லது பாதகமாக).
சொற்களுக்கு எடை, ஒலி,  நிறம், தோற்றம் உள்ளது. மொழி என்பது ஒருவரின் உள்ளுணர்வை வெளிப்படுத்துகிறது. நாம் தோற்றுவிக்க எண்ணும் வாழ்க்கை, மற்றும் வாழுகின்ற வாழ்க்கை நமது சொற்களில் பிரதிபலிக்கிறது.உங்களைப் பற்றிய உலகத்தை நீங்கள் பயன்படுத்தும் சொற்கள் பிரதிபலிக்கிறது. அது தான் உங்கள் பிம்பம் அல்லது இமேஜ் எனலாம். நாம் பேசாத சொற்கள் கூட நமது உணர்வலைகளை பாதிக்கும் அதிர்வுகளைக் கொண்டது. 'சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை' எனும் பாடல் வரிகள் நாம் அறிந்ததே.
'மென்மை' அல்லது 'மிருதுவான' எனும் சொல்லை நாம் சொல்லும் போது பட்டுத்துணி, பூவிதழ், மிருகத்தின் சருமம் என்று பல விஷயங்கள் நினைவுக்கு வரும் அல்லவா? 'கடினமான' என்று சொல்லும் போது பாறை, மலை, இரும்பு போன்ற விஷயங்கள் நினைவுக்கு வரும் தானே? 'ஒளி' என்றவுடன் பல்ப், விளக்கு, மெழுகுவர்த்தி, தீக்குச்சி எல்லாவற்றையும் நினைவூட்டும். 'ஒலி; என்றதும் மைக், ஒலிபெருக்கி, போராட்டம், பயம், சங்கு, சைரன், இவையெல்லாம் நினைவுக்கு வருவதை தடுக்க முடியமா?
பரிட்சைக்கு செல்லும் ஒரு மாணவனை 'பயப்படாமல் எழுது' என்று வழியனுப்புதல் தவறு. பரிட்சையும் பயமும் சேர்ந்தே பயணிக்கிறது. அதனால் தைரியமாக எழுது என்றே சொல்ல வேண்டும். இன்ச் என்றும் மைல் என்று சொல்லும் போதே மனம் அந்த தூரத்தை உணரத் தொடங்கி விடும். 
அடைவது, வெற்றி, சாதனை, நம்பிக்கை, நல்லிணக்கம், அமைதி, கனவு, விடுதலை, கவர்ச்சி, புத்திசாலி, நன்றி, தனித்தன்மை, போன்ற சில தெய்வீக வார்த்தைகள் மந்திரச்ச்சொற்கள் எனலாம். அதுவே பயம், டென்சன், குழப்பம், கவலை, மோசம், அசிங்கம், குண்டு, கருப்பு, குப்பை உணவு, தொப்பை, வழுக்கை போன்ற வார்த்தைகள் மனதை மிகவும் பலவீனமாக எளிதில் மாற்றி விடும் நெகடிவ் மாயச்சொற்கள்.
'வரும் போது மறக்காமல் அரை லிட்டர் பால் வாங்கி வாருங்கள்' என்று ஒருவரிடம் சொல்லும் பொழுது அவர் மறந்து போகிறார். அதுவே 'வரும் போது ஞாபகமாக அரை லிட்டர் பால் வாங்கி வாருங்கள்' எனும் பொழுது அவர் மறப்பதில்லை. உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்பதற்கு பதில் எனக்கு உன் மீது விருப்பம் இல்லை. எனக்கு உடல்நிலை மோசமாக உள்ளது என்பதற்கு பதில் எனது உடல்நிலை இன்று அவ்வளவாக நன்றாக இல்லை. இரண்டுமே ஒன்று தான். ஆனால் அதன் அர்த்தமும் தாக்கமும் வேறு வேறு.
நியூ, டிஸ்கவுண்ட், இலவசம், உங்களுக்கு, மன்னிக்கவும், நன்றி, காரண்டி, உன்னை நம்புகிறேன், உன்னை மதிக்கிறேன், உன்னை ஏற்கிறேன், உன்னால் முடியும், வெற்றியே பெறுவாய், நிச்சயம் முடியும், ப்ளீஸ், உத்வேகம், முன்மாதிரி, நல்லது, நன்மை, சாய்ஸ், அபரிமிதம், அற்புதம், ஆனந்தம் என்ற சில சொற்கள் இனிமையானது மட்டுமல்ல, மிகவும் சக்தி வாய்ந்தன என்றால் அது மிகையல்ல. 
'நீ உருப்படாதவன், நீ சோம்பேறி, நீ தோல்வியே அடைவாய், நீ உதவாக்கரை, தண்டசோறு, சில்லறை புத்தி, வேண்டாம், விபத்து, ஆபத்து, வியாதி, வயதானவன், முதுமை, செலவு, நஷ்டம், ஏமாற்றம், தோல்வி, கசப்பு, வெறுப்பு, சாபம் என்கிற வார்த்தை பலரை சுக்குநூறாக உடைத்து விடும். இந்த சொற்களில் அதிகம் நெகட்டிவ் எனெர்ஜி அல்லது சக்தி இருக்கிறது என்று பல ஆய்வுகள் சொல்லுகின்றன.
அதே போல தொங்கப்போட்ட முகம், தளர்ந்த தோள்கள், புன்னகைக்கா முகங்கள், சோகம் தரும் வசனம் காட்சி பாடல் எதுவுமே ஒரு மனிதனின் சூழலை தலைகீழாக மாற்றி விடும் வல்லமை கொண்டது. 


மனதில் உள்ளதே எண்ணமாக சொல்லாக செயலாக வெளிப்படுகிறது. எனவே நன்மை பயக்கும் நல்ல சொற்களை நாம் நமது ஸ்டாக் போல வைத்திருக்க வேண்டும். நாம் பேசுகின்ற சொற்கள் எல்லாமே வெல்லும் சொல்லாகவே இருக்கட்டும். சொக்கித் தான் போகட்டும் பிறர் நமது சொற்களில். கட்டிப்போடுங்கள் பிறரை கயிறு இன்றி, உங்கள் எல்லா வெல்லும் சொற்கள் மூலமாக. இது சாத்தியம். ஆவீர்கள் நீங்கள் அப்படியொரு மந்திரவாதியாக. அசாத்தியங்கள் நிகழட்டும் உங்களைச் சுற்றி அபரிமிதமாக. தினம் தினம் நல்லுறுதி வாக்கியங்களை சொற்களை பயன்படுத்த பயிற்சி எடுங்கள். நல்லதே சொல்ல நல்லதே நடக்கும்.

No comments:

Post a Comment