Sunday, December 1, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 25


 எல்லாமொன்றும் விழுவதில்லை காதில் 
ஒவ்வொரு பெண்ணும் ஒரு நாளைக்கு சுமார் 20000 (இருபதாயிரம்) வார்த்தைகள் பேசுகிறார்கள் என்று ஓர் ஆய்வு சொல்லுகிறது. அதுவும் ஆண்களை விட 13000 வார்த்தைகள் அதிகமாக என்பது இதில் மிகவும் சுவாரசியமான தகவல். சிறு பிராயம் முதலே பெண் குழந்தைகள் அதிகமாக பேசுகின்றன. ஆண் குழந்தைகள் விஷமத்தனத்தில் ஈடுபடுகின்றன. இது இயல்பாகவே இறைவன் அல்லது இயற்கையின் படைப்புப்படி பெண்களின் மூளைகளில் சுரக்கும் ஹார்மோன் அப்படிச் செயல்பட வைக்கிறது என்கிறார்கள் அறிவியல் மற்றும் உளவியல் ஆய்வாளர்கள்.
இயல்பாக வெட்க சுபாவம் உள்ளவர்கள் பெண்கள் என்று சொல்லப்பட்டாலும் பெண்கள் பெண்களோடும் தனக்கு சுமுகமாக இருக்கக்கூடிய ஆண்களுடனும் ஏதாவது சாதாரண (கேசுவல்) உரையாடல் அல்லது சம்பாஷணைகளில் ஈடுபடுகிறார்கள். அதற்கு பதிலாக ஓர் ஆண் சில வார்த்தைகளில் பதில் அளிக்கிறான். 
பொதுவாகவே ஆண்கள் பிறந்த கிரகங்களில் பெண்கள் பிறக்கவில்லை (Men are from Mars and women are from Venus என்று ஒரு பிரபல நூல் ஒன்றை ஜான் கிரே என்பவர் எழுதினார்) என்று சொல்லப்படுகிறது.
பெண்களின் தேவை, விருப்பம் மற்றும் தேர்வு மிகவும் வித்தியாசமான ஒன்று என்பதால் தான் இந்த வேறுபாடு என்று அறிய முடிகிறது.
இவர்களில் யார் அதிகம் கேட்கிறார்கள் என்ற ஆய்வும் செய்யப்பட்டுள்ளது. இதில் ஐந்து தேசங்களை எடுத்துக்கொண்டனர் ஆய்வாளர்கள். முதலில் ஆசியா, கனடா, ஐரோப்பா, தெற்கு அமெரிக்கா, யுனைடெட் ஸ்டேட்ஸ் என்று வருகிறது அந்த வரிசை. இருபது வயது முதல் அறுபது வயது வரை இந்த கேட்கும் திறன் அதிகம் இருக்கிறது. ஆனால் கேட்கும் மனப்பாங்கு சிலருக்கு எப்போதுமே இருப்பதில்லை.
நிறுவனங்களில் எந்த பணிகளில் இருப்பவர்கள் அதிகம் கேட்கிறார்கள் (அதாவது டிபார்ட்மென்ட் வாரியாக) நிர்வாகம் எனப்படும் அட்மினிஸ்ட்ரேஷன், வாடிக்கையாளர் சேவை, சேவை, பராமரிப்பு, நிதி மற்றும் கணக்கு, பொது நிர்வாகம், மனிதவள மேம்பாடு மற்றும் பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், சட்டப்பிரிவு, உற்பத்தி, மார்க்கெட்டிங், தர நிர்ணயம், பாதுகாப்பு, மற்றும் கடைசியாக ஆர் அண்ட் டி எனப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என இந்த வரிசையில் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் - இந்த கேட்கும் பழக்கம் அல்லது திறன் கொண்டவர்கள் என்று.
குறிப்பாக பெண்கள் பேசுவது மட்டும் அல்ல, கேட்பதிலும் அவர்களே முன்னிலை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆண்கள் இந்த கேட்பது எனும் லிசெனிங் கலையில் திறனில் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள். இதற்கு சமூக கட்டமைப்பு காரணம் என்று கூறுவதுண்டு. அந்த அடிப்படை சமூக கட்டமைப்பு என்று ஆணுக்கு பெண் சமம் என்றும் பெண்ணுரிமை என்றும் அதிகம் பேசப்படுவதால் அவர்களின் இயல்பும் மனோபாவமும் மிக அதிக அளவில் மாறி வருகிறது.
குறை கேட்பதில், அவற்றை நிவர்த்தி செய்வதில் பெண்களுக்கு உள்ள மனநிலை மற்றும் தாயுள்ளம் காரணமாக இன்று பெரும்பாலான பெருநிறுவனங்களில் மிகப்பெரிய பதவிகளில் பெண்கள் முன்னிலை வகிப்பதை அதிகமாக காண முடிகிறது. இதற்கும் இந்த காதில் வாங்கிக் கொள்ளுதல் எனும் அடிப்படை மனோபாவம் மற்றும் திறன் காரணமாகத் தான்.
ஒரு ஆண் பெண் பேசுவதை தவிர்ப்பது என்று அவள் பேச ஆரம்பித்த 30 விநாடிகளில் முடிவெடுத்து விடுகிறான். அதிகம் ஆண்களே ஆக்கிரமிப்பு செய்யும் (வீட்டிலும் வெளியிலும்) ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் பேசுவதை நான் ஏன் கேட்க வேண்டும் என்று நிறைய பேர் சிந்திக்கிறார்கள். வளர்சூழலில் தந்தை ஒரு தாயை மிகவும் குறைவாக மதிக்கிறார் என்பதை குழந்தை உன்னிப்பாக கவனித்து தனது ஆழ்மனதில் வைத்துக் கொள்ளுகிறது.
இருந்தாலுமே ஆண்கள் அப்படி ஒன்றும் கேட்காதவர்கள் இல்லை. பத்து விஷயங்கள் அவர்களுக்கு சொல்லப்படுகிறது என்றால் அவர்கள் எல்லாவற்றையுமே கேட்கிறார்கள், கவனிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பிடித்தமான அல்லது அவர்களை பாதிக்கும் ஓரிரு விஷ்யங்களுக்கு மட்டும் அவர்கள் ரெஸ்பாண்ட் செய்து பதில் தருகிறார்கள். மீதம் விஷயங்களை கேட்காதது போலவே இருந்து விடுகிறார்கள்.
இந்த லிசெனிங் எனப்படும் கேட்டல் திறன் பற்றி இன்று மிக அதிகமாக எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது. ஏன் எனில் பேசினால் பிறர் கேட்பார்கள். கேட்டால் தான் நாம் புரிந்து கொள்கிறோம். எனவே (கற்றலில் கேட்டலே நன்று என்பதை நினைத்துப் பாருங்கள்) கேட்டல் என்பது பலரின் குறைகளை குறைக்கும். பல சிக்கல்களுக்கு தீர்வாக அமையும். புரிதல் ஏற்படும். பரஸ்பர அமைதி, அன்பு, மரியாதை எல்லாமே கேட்கும் போது அதிகமாகிறது. கேட்காமல் போனால் அதிகம் பேர் அதனை அவமரியாதை என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் மனதளவில் காயப்படுகிறார்கள். 
கேளுங்கள் தரப்படும். என்பதை சற்று மறந்து கேளுங்கள் சொல்லப்படும் என்று புரிந்து கொள்ளுங்கள்.  குறைவாக பேசி நிறைய கேட்கத் தொடங்கி நல்ல புரிதல் உள்ள சமூகமாக மாறுவோம். நம்மைச் சுற்றி நல்லதொரு பாசிட்டிவ் சூழலை உருவாக்குவோம். 



No comments:

Post a Comment