Tuesday, December 3, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 27


அறிவதெல்லாம் அறிவாசெய்வதெல்லாம் செயலா?
பிறந்தது முதல் கடைசி மூச்சு வரை நாம் நிறைய அறிந்து கொள்கிறோம். தெரிந்து கொள்கிறோம். நாம் அறிந்து கொள்கிற அனைத்தும் அறிவு ஆகிவிட முடியாது. அன்றாடம் எழுந்தது முதல் உறங்கும் வரை பல்வேறு செயல்கள் செய்கிறோம். அவை எல்லாமே செயல்களாக, நற்செயல்களாக ஆகிடுமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்
ஒவ்வொரு வயதிலும் இது செய்தால் வெற்றி என்று இருக்கிறது. அதாவது முதல் வயதுக்குள் பார்ப்பது, சிரிப்பது, அழைத்தால் பதிலளிப்பது போல திரும்புவது அல்லது எதிர்வினையாற்றுவது. மூன்று அல்லது நான்கு வயது வரை நமது உள்ளாடை நனையாமல் சிறுநீர் கழிப்பது பெரிய வெற்றி என்று சொல்லுவர்.
அடுத்தது படிப்பது, எழுதுவது, பேசுவது, பேசுவதைச் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கு பதில் சொல்லுவது அல்லது கீழ்ப்படிவது இது ஐந்து வயதுக்கு மேலாக யார் கையையும் பிடித்துக் கொள்ளாமல் வீதியைக் கடந்து சரியாக நடந்தால் மிகப்பெரிய வெற்றி. பிறகு தானே பல் தேய்த்து, குளித்து, உணவை கீழே சிந்தாமல் உண்ணுவது, தானே ஆடை அணிந்து கொள்ளுவது, பள்ளிப் பாடங்களை எழுதுவது, விளையாடுவது, நண்பர்களோடு பழகுவது, நல்ல தொடர்புகளைப் பெறுவது  என்று சொல்லிக்கொண்டே போகலாம்
அடுத்த சில வயதுகளில் (இருபதுக்குள்) லைசென்ஸ் பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, ஓட்டு போடும் அட்டை பெறுவது, தேர்தலில் ஓட்டு போடுவது என்று சொல்லலாம். முப்பது வயதுக்குள் திருமணம் செய்வது, குழந்தை பெற்றுக் கொள்ளுவது, சொந்தமாக வீடு மற்றும் கார் வாங்குவது, சிறந்த படிப்புக்களை முடிப்பது, நல்ல வேலையில் பணியமர்வது என்று இவற்றை சாதனையாக வெற்றியாக சொல்லலாம்
மேற்சொன்ன அனைத்தையும் அடைய நாம் பல விஷயங்களை அறிந்து கொள்கிறோம். அவற்றில் எல்லாமே அறிவு என்று சொல்லிவிட முடியாது.
தவிர நடிகை நயன்தாரா தனது காதலரோடு உல்லாசமாக இருக்கிறார், நடிகர் பாலாசிங் இறந்து விட்டார், கமல்ஹாசன் அவர்கள் கலைத்துறையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டார், ஆந்திராவில் ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார், உரத்த சிந்தனை எனும் அமைப்பு பாரதிக்கு 40 இடங்களில் விழா எடுக்கிறது என்று பல விஷயங்கள் அறிகிறோம். இவை எல்லாம் தகவல்கள் மற்றும் செய்திகள். இவற்றை அறிவு என்று சேர்த்துக் கொள்ள இயலாது.
அடுத்து பிள்ளைகளை தமது வாழ்வில் சரியான கல்வி, வேலை, திருமணம் என்று செட்டில் ஆகச் செய்வது பெரிய வெற்றி. அதற்கு நாம் நிறைய கற்றுக் கொள்கிறோம். அதுவும் அறிவு அல்ல. அது அனுபவம். பிறகு வயது அறுபது முதல் எழுபது வயது வரை தமது வயதுக்கு உரிய நல்ல நட்பை பெறுவது, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுவது. இவை தான் வெற்றி. அதற்கு நாம் சிலவற்றை கற்றுக் கொள்ளுவோம். அவை எல்லாம் அறிவு அல்ல. அவை எல்லாம் வாழ்வை வழிநடத்த நாம் பெறும் சமாளிக்கும் திறன் எனலாம்.
வாழ்க்கை என்பது ஒரு சைக்கிள் அல்லது சுழற்சி எனலாம். எண்பது வயது ஆகும் போது மீண்டும் உள்ளாடை நனையாமல் சிறுநீர் கழித்தல், தனியாக தனது கடமைகளை செய்து கொள்ளுதல் பெரிய வெற்றி. 90 வயது ஆகும் போது மீண்டும் யார் கையையும் பிடித்துக் கொள்ளாமல் நடப்பது, படி ஏறுவது, வீதியைக் கடப்பது, நமது உணவை நாமே உண்பது இவை மிகப்பெரிய வெற்றி. அதற்குரிய சில விஷயங்களை நாம் கற்கிறோம். அவை எல்லாம் அனுபவப்பாடங்கள் மற்றும் வாழ்திறன்கள் எனலாம்.
ஆக தெரிந்து கொள்ளும் எல்லாமே அறிவு அல்ல. உலகம் உருண்டை என்று அறிவது, பூமி தன்னையும் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது, காகிதம் மரத்தில் இருந்து தயாரிக்கிறார்கள், பிளாஸ்டிக் பயன்படுத்தி நல்ல சாலைகளை அமைக்கலாம், மரங்களை வெட்டி வீழ்த்தினால் மழை பொழியாது, இப்படி சிலவற்றை அறிவுபூர்வமானவையாக கருதுகிறோம்
‘அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் 
என்னுடைய ரேனும்இலர்.’
அறிவுடையோர் எல்லா நன்மையுமே உடையவர் ஆவர்; அறிவில்லாதவர் எதனை உடையவரானாலும் எந்த நன்மையும் இல்லாதவரே ஆவர் - என்பது இந்த குறளின் பொருள் 
அதே போல எழுவது, குளிப்பது, ஆடை அணிவது, பருகுவது, உண்பது, இயற்கை உபாதைகளில் மீள்வது, பணிக்கு செல்லுவது, பணம் ஈட்டுவது, சேமிப்பது, செலவழிப்பது, சண்டை செய்வது, சச்சரவு செய்வது, திருமணம் செய்து பிள்ளைகள் பெறுவது என்று இப்படி செய்யும் செயல்கள் எல்லாம் பெரிய செயல்கள் என்று பெரிதாக பிரஸ்தாபம் செய்து கொண்டுவிட முடியாது.
சில செயல்கள் வெற்றியில் முடியும். சில செயல்கள் புகழ் பெருமையில் முடியும், சில செயல்கள் சாதனையில் முடியும், சில செயல்கள் திருப்தி தரும், சில செயல்கள் செல்வம் தரும், சில செயல்கள் சமூகத்திற்கு நன்மையாக இருக்கும், சில செயல்கள் (விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள்) வாழ்நாள் முழுவதும் உலகிற்கே உபயோகமாக இருக்கும். உதாரணத்திற்கு ஒருவர் பல்பு, ஒருவர் மின்சாரத்தை, ஒருவர் புகைவண்டியை, ஒருவர் தொலைபேசியை, ஒருவர் செல்பேசியை, ஒருவர் காகிதமில்லா பணத்தை, ஒருவர் கணினியை என்று கண்டுபிடித்துக் கொடுத்து தமது செயல்கள் மூலம் அகிலமே பயனுறச் செய்து இருக்கிறார்கள்
இப்போது சொல்லுங்கள் அறிவதெல்லாம் அறிவா? செய்வதெல்லாம் செயல்களா? நிச்சயம் புரிந்திருக்கும் எது செய்தி, எது அனுபவம், எது திறன் மற்றும் எது அறிவு என்று. அதே போல செய்யும் யாவும் செயல்கள் அல்ல. எது உலகிற்கு உன்னதம் தருகிறதோ, உலக மக்களுக்கு நன்மை பயக்குகிறதோ, எது நமக்கு பெருமை தேடித் தந்து நாட்டிற்கும் நற்பெயர் பெற்றுத் தருகிறதோ அவையே செயல் ...அருஞ்செயல்.
அன்னை தெரசா செய்த சேவை போல, அண்ணல் காந்தி பெற்றுத் தந்த சுதந்திரம் போல, பாரதி எழுதிய அழியா கவிதைகள் போல, எடிசன் கண்டுபிடித்த பல்பு போல செயல்கள் என்று சிலவற்றை மட்டும் நம்மால் மிக எளிதாக பாகுபடுத்திவிட முடியும்
பெற்றிடும் அறிவு நற்செயல்களில் சென்று முடியட்டும். நானிலம் அவற்றினால் நன்மை பெற்று மேம்படட்டும்.


No comments:

Post a Comment