Wednesday, December 4, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 28


உள்ளதைக் கண்டு மகிழ்வது நல்லது 
நாம் ஒரு வீட்டிற்குள் நுழையும் போது அந்த வீட்டிற்குள் இருக்கும் அழகான பொருட்கள், மனிதர்கள் எல்லாம் தெரிகிறதோ இல்லையோ அந்த வீட்டின் கூரையில் காணாது போன ஓரே ஒரு ஓடு, அது வெளிப்படுத்தும் ஓட்டை தான் உடனே கண்ணில் படுகிறது. ஏன் எனில் நமக்கு நிறைகள் கண்ணில் படுவதை விட குறைகள் ஏனோ உடனே கண்ணில் படுகிறது. இது பொதுவான மனித இயல்பு

மிக அதிகமாக நாம் பார்க்கும் ஒரு விஷயம் மனிதர்களின் தலை முடி, அது நிறைய இருக்கலாம், குறைவாக இருக்கலாம், கலைந்து இருக்கலாம், மொட்டையாக இருக்கலாம், வழுக்கையாக இருக்கலாம், அதனை உடனே நாம் கவனிக்கிறோம். நமது முடியோடு அதனை ஒப்பிட்டும் பார்க்கிறோம். பெண்களின் முடி நீளமாக, சுருட்டையாக, செம்பட்டையாக இருக்கலாம். எது எப்படியோ நமது தலைமுடி அடுத்தவரது தலைமுடியை விட நன்றாக இல்லை என்றே தோன்றும்.

அதற்கு அடுத்த படி நாம் பார்ப்பது மனிதர்களின் உயரம், அவர்களின் நடை, உடை, கால்கள், நகங்கள், தோல் பளபளப்பு. மற்றவரை விட நமக்கு எது சிறப்பாக இல்லையோ அதனை நினைத்து உடனே ஒப்பிட்டுப் பார்த்து வேதனைப் படுவோம். ஏன் இப்படி ? என்றாவது இது பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறோமா

அடுத்து குழந்தை இருப்பவர்கள் தமக்கு ஏன் பக்கத்து வீட்டு குழந்தை போல அழகாக, அறிவாக பிறக்கவில்லை என்ற கவலை. குழந்தை இல்லாதவர்கள் தமக்கு மட்டும் ஏன் இப்படி குழந்தை பாக்கியம் இல்லை என்று நினைத்து நினைத்து ஏக்கம் வருகிறது

இப்படி எதையோ ஒன்றை, அந்த கூரை ஓட்டை போல நமக்கு இல்லாத ஒன்றை மட்டுமே நினைத்துப் பார்த்து வருத்தம் கொள்வது மக்களின் இயல்பாக மாறி விட்டது. சிலர் அழகு, சிலர் வெளுப்பு, சிலர் சிறந்த உடையில், சிலர் மிகப் பெரிய காரில், சிலர் எப்போதும் மகிழ்வோடு, சிலர் எப்போதும் சிரித்த முகத்தோடு, சிலர் நல்ல உடல் நலத்தோடு, சிலர் சற்றும் தொப்பை இல்லாமல் மிக கச்சிதமான உடல் அமைப்போடு, ஆனால் நாம் மட்டும் அதற்கு மாறாக, அப்படி இல்லையே என்ற மன வருத்தம்.

சிலருக்கு தேவை நல்ல மனைவி, நல்ல வேலை, நல்ல குழந்தைகள், நல்ல வீடு, நல்ல கார் அல்லது நல்ல ஒரு மொபைல். என்ன செய்வது நமக்கு பிறருக்கு அமைந்தது போல் அமையவில்லை

மனைவி கிடைத்தவர்கள் தினம் தினம் அவள் அழகு, பெர்சனாலிட்டி, அவள் புன்னகை, அவள் குணம் என்று ஏதோ ஒன்றில் குறை காண்கிறார்கள். எது நமது எண்ணப்படி இல்லையோ அது இருந்திருக்கலாம் என்ற அந்த மனோபாவம் தான் அதற்கு காரணம். நாம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு விஷயமும் எல்லோரிடமும் எப்படி இருக்க முடியும்? நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பது தான் அரிய உண்மை

இப்படி அந்த ஓட்டை தெரியும் கூரையின் காணாது போன ஓடு ஒன்றை மட்டும் பார்க்காது மீதம் இருக்கும் மேல் ஓடுகள் வீட்டைக் காக்கிறது என்ற எண்ணம் மனதில் பதியட்டும். அப்படி நமது எண்ணங்களும் மனோபாவமும் மாறினால் தான் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.

இல்லையேல் நமது வாழ்வில் இருக்கிற பல்வேறு நல்ல விஷயங்களை உற்று நோக்கி கவனித்து சந்தோஷப்படாமல் இல்லாத ஒரு விஷயத்தை மட்டும் தினம் தினம் எண்ணிப் பார்த்து வருத்தம் மட்டுமே வரவழைத்துக் கொண்டவராக இருப்போம்     'குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்' என்கிறது குறள். 'மனம் வெளுக்க வழியே இல்லை எங்கள் முத்துமாரி' என்பான் பாரதி.

எது நம்மிடம் இல்லை என்று நினைக்கிறோமோ, அது இருப்பதாலேயே அடுத்தவர் ஒரு வேளை மகிழ்ச்சி இழந்திருக்கலாம். நமக்கெப்படி அது தெரியும்

எனவே இல்லாத ஒன்றை தேடுவதை விட, இருப்பதை முழுமையாக கண்டு உணர்ந்து பார்ப்போம். அந்த விஷயத்தை எண்ணிப் பார்த்து மகிழ்வோம். அதற்கு நன்றியோடு இருப்போம். நன்றி பாராட்ட பாராட்ட 'இல்லாத' விஷயங்கள் நமக்கு 'இருக்கப் போகிற' ஒன்றாக விரைவில் மாறி விடும். கவலை வேண்டாம்இது உறுதி. மகிழ்வாக இருப்பதற்கு சிறந்த மந்திரமே இது தான். புரிந்து கொள்வோம்.

எனவே உள்ளதைக் கொண்டு (கண்டு) மகிழ்வோம். இல்லாததை பொல்லாததை எண்ணி எண்ணி வீணில் வீழ்ந்து கிடப்பதில் என்ன பலன், பயன்? உள்ளதைக் கொண்டு நல்லது செய்வோம். உள்ளத்தை மகிழ்வாய் நாளும் வைத்திருப்போம்.


No comments:

Post a Comment