Saturday, December 7, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 30


30. சரியானதென்று எதுவுமில்லை 
'சரியானதென்று இவ்வுலகில் எதுவுமில்லை' என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். யாரும் எதுவும் (பெர்பெக்ட்) சரி என்று சொல்லி விடமுடியாது. அதே போல எதுவுமே சரியில்லை (இம்பெர்பெக்ட்) என்பதும் கிடையாது. எல்லாமே தனித்தன்மை வாய்ந்தது. சரி என்பதும் சரியில்லை என்பதும் அவரவர் பார்வையைப் பொருத்து அமைகிறது. 
இது நல்ல மலர், இது நல்ல கனி என்றெல்லாம் கிடையாது. குறிப்பாக குவிந்து கிடைக்கும் பல ரோஜாக்களில் ஒவ்வொன்றும் ஒரு விதம். பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம், பாடல்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று பிரபலப் பாடல் உண்டு அல்லவா ? ஆனால் ஒரு பொருளின் தன்மை என்பது மாறும். இது பெரிய பழம், சிறிய பழம் என்று. அதற்கேற்ப அதன் விலை மாறுபடலாம். ஒவ்வொரு சரியான மற்றும் சரியில்லாத பொருளையும் நபர்களையும் நாம் நேசிக்க வேண்டும். 
எல்லோரும் குயிலை கிளியை மயிலை பார்த்து ரசிக்கும் போது பாரதி காக்கையை குருவியை ரசித்தான். எல்லோரும் குதிரையை மாட்டை விரும்பும் போது பாரதி கழுதையைக் கட்டிப் பிடித்தான். வெயில், நிழல், பூ, முள், இலை, பகல், இரவு, துன்பம், இன்பம், உழைப்பு, ஓய்வு எல்லாமே அழகு தான். நாம் ஒன்றை விரும்பி மற்றவற்றை வெறுக்கிறோம். இது ஞாயம் இல்லை.
எல்லாமே சரியாகச் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் நம்மில் நிறைய பேர் தோல்வியே கண்டு வருகிறோம். வெற்றியை விட முயற்சியே பாராட்டுக்கு உரியது என்பர் சிலர். அழகு என்பது கூட இந்த 'சரி' 'சரியில்லை' என்பது போலத்தான். அழகு என்பது காண்பவர் கண்ணில் உண்டு என்று சொல்லுவதுண்டு. 
இசையை, உணவை, ஓவியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சிலர் சரியில்லை என்று சொல்லும் அதனுள்ளும் ஏதோ ஒரு 'சரி' நிச்சயம் இருக்கும். அதனை பார்க்கத் தவறியது யார் குற்றம்? நமது உடை, பழக்க வழக்கங்கள், பேச்சு முறை, பயன்படுத்தும் சொற்கள், வாழ்வியல் மதிப்பீடுகள் என்று எல்லாவற்றிலும் இந்த சரி மற்றும் சரியில்லை நிச்சயம் வந்து நிற்கும். ஏற்கனவே சொன்னது போல யார் செய்கிறார்கள், எப்படி அது பார்க்கப்படுகிறது என்பதைப் பொருத்து அமைகிறது மக்கள் எண்ணமும் அபிப்பிராயமும். 
ஒரு பெண்ணின் வாழ்வை கெடுத்து கொலையே செய்து விட்ட நால்வரை போலீஸ் சுட்டுக் கொல்லுவது வேறு. நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பது வேறு, பொது மக்களே அடித்துக் கொல்லுவது வேறு. இதில் மக்களின் பார்வை ஒருவருக்கொருவர் நிச்சயம் வேறுபடும். ஊடகங்கள் இதனை பலவாறாக சித்தரித்து விவாதங்கள் நடத்தும்.
மொழியாக்கம் செய்து மூலத்தில் இருந்து 'நேர் கொண்ட பார்வை' என்று ஒரு படம் எடுத்தால் அது ஏற்கனவே வெளிவந்த 'பிங்க்' போல இல்லை பலர் சொல்லக்கூடும். அது பார்வையாளரின் எண்ணம். மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை. பிராந்தியத்திற்கு பிராந்தியம், தேசத்திற்கு தேசம் நிச்சயம் அவர்களின் கருத்து மாறுபடுகிறது. ஹிந்தி மொழி வேண்டாம் என்று சிலரும், கடவுள் இல்லை என்று சிலரும் கூறினால் அது அவர்களின் கருத்து தானே தவிர அது தான் சரி என்றோ அது சரியில்லை என்றோ சொல்லிவிட முடியாது.
சின்னப்பிள்ளை எனும் மதுரையைச் சார்ந்த சாதனைப் பெண்ணிற்கு விருது கொடுத்து விட்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர் காலில் விழுந்து மரியாதை செலுத்தினார். சரி என்றும் சரியில்லை என்றும் இரு வேறு கருத்துக்கள் இருந்தது அப்போது. 
சந்திராயன் மற்றும் மங்கள்யான் என்று அறிவியல் அறிவு கொண்ட நம்மால் ஆழ்கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையை காப்பாற்ற இயலவில்லை என்பது பலரின் கருத்து. இதை சரி என்று ஏற்கவும் முடியாது. மறுக்கவும் இயலாது.
மரணத்தை பல தேசங்களில் பலவாறாக பார்க்கிறார்கள். கொரியா நாட்டில் இறந்தவரின் சாம்பலில் இருந்து வண்ணமயமான மணிகளை உருவாக்கி அதனை வீட்டில் வைத்துக் கொள்ளுகிறார்கள். துக்கம் விசாரிக்க செல்லும் பொழுது சீனாவில் வெள்ளை நிற உடை அணிகிறார்கள், கருப்பு அல்ல. புத்த மதத்தை சார்ந்தவர்கள் 100 நாட்கள் துக்கம் அனுசரிக்கிறார்கள்.
ஜப்பானியர்கள் மரணத்தை விடுதலை (லிபரேஷன்) என்று கருதி மக்கள் வெள்ளை காகித உறையில் பணம் போட்டு எடுத்து வந்து சார்ந்தவர்களிடம் அளிக்கிறார்கள். இஸ்லாமியர்கள் இறந்த பின் உடலை புதைக்கிறார்கள். இந்துக்கள் அதனை எரிக்கிறார்கள். அவர்கள் 13 நாட்கள் காரியம் செய்கிறார்கள். இவற்றில் இது சரி என்றும் பிறரது சரியில்லை என்றோ சொல்ல முடியுமா?
சூரியனை சாட்சியாக வைத்து சிலர் திருமணம் நடத்துவதால் பகலில் செய்கிறார்கள். சிலர் சந்திரனை சாட்சியாக வைத்து செய்வதால் இரவில் நடத்துகிறார்கள். இப்போது ஏன் திருமணம்? நாம் சேர்ந்து வசிப்போம் என்கிறார்கள். முன்பு ஒருவரே பல திருமணம் செய்து கொண்டார்கள். சிலர் தமது தந்தையின் இறப்புக்கு பிறகு இரண்டாவது அல்லது மூன்றாவது தாரத்தை மகனே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது என்று அறிய முடிகிறது.
இது சரி. இது சரியில்லை என்று சில நெறிகளை, வழக்கங்களை, கருத்துக்களை உருவாக்கியது மனிதர்கள் தான். 
படித்து வேலைக்கு சென்று திருமணம் செய்து பிள்ளைகள் பெறுவது தான் சரி எனும் நிலையில், சிலர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு (பாரதி, சச்சின், எடிசன்) தமக்கு பிடித்த விஷயங்களை செய்து சாதனை செய்து நிற்கிறார்கள். டாக்டர் அப்துல் கலாம் போன்றவர்கள் திருமணமே செய்து கொள்ளாமல் நாட்டுக்கு உழைத்து விட்டு சென்று இருக்கிறார்கள். எனவே இது தான் சரியான வாழ்க்கை, இது சற்றும் சரியில்லை என்று அறுதியிட்டு சொல்லி விட முடியாது. பார்வை மற்றும் கருத்து மாற்றம் மனிதர்களுக்கு இடையே இருப்பதால் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் தினந்தோறும் ரசித்து மதித்து போற்றி கொண்டாடி மகிழ்வோம். கொண்டாடுவதும் பிறருக்கு நலம் பயக்கும் வாழ்வும் நிச்சயம் சிறந்தது.


ஒருவர் வாழ்வை மற்றொருவர் 'ஜட்ஜ்' செய்து இது சரி என்றோ சரியில்லை என்றோ தீர்ப்பு வழங்கிட நிச்சயம் உரிமை இல்லை. என்ன சரி தானே?

No comments:

Post a Comment