Thursday, December 5, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 29



29. மிருகங்கள் வெறுப்பதில்லை...மனிதர்கள் ?!
வெறுப்பு என்பது ஓர் உணர்ச்சி. அது பகைமை, கோபம், மனக்கசப்பு போன்றவற்றையும் மனித மனங்களில் கொணர்ந்து சேர்க்கும்.
"அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்" என்பான் வள்ளுவன். பொறாமை, பேராசை, கோபம், பழி வாங்குதல் என்று அடுத்தடுத்த நிலைக்கு சொல்லுகிறான் மனிதன். 
"பகைவனுக்கருளுவாய் நன்னெஞ்சே" என்று பாடுவான் பாரதி.
குறிப்பாக வெறுப்பு என்பது மிகவும் நெகடிவ் சக்திவாய்ந்த ஓர் உணர்ச்சி. வெவ்வேறு சூழலில் அப்படிப்பட்ட வெறுப்பு என்னென்ன செய்யும் என்று யாராலும் சொல்ல முடியாது. மனிதன் பாதி மிருகம் பாதி என்று கமல்ஹாசன் பாட்டில் வருவது போல மனிதருக்குள் மிருகங்கள் பல ஒளிந்திருக்கும். இருப்பினும் மிருகங்களுக்குள் வெறுப்பு என்பது கிடையாது. பசியால் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்ளுமே, தவிர வெறுப்பால் கோபத்தால் பகைமையால் அல்ல.
சிலர் தன்னையே வெறுக்கின்றனர். காரணம் அவர்களின் நிறம், இனம், உயரம், கல்வி, வாழ்நிலை, பெற்ற ஏமாற்றங்கள், தோல்விகள், அவமானங்கள் என்றாலும் பெரும்பாலும் உறவுமுறையில் ஏற்பட்ட விரிசல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. தனிமையில் இருப்பவர்கள், அழகற்றவர்கள், தனிமைப்படுத்தப் பட்டவர்கள், திறமையற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள், கீழ்த்தரமான குடும்பப் பின்னணியில் வந்தவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள், தன்னையே வெறுக்கின்றனர்.
சிலர் தமது வாழ்வையே வெறுப்பதாக கூறுவது உண்டு. காரணம், காதல் தோல்வி, தவறான நட்பு, மோசமான கணவன் அல்லது மனைவி, தவறு செய்யும் பிள்ளைகள், எதிர்பார்ப்பின் படி வாழ்வு அமையாத பொழுது, இலக்குகளை அடைய முடியாத பொழுது, சிலர் தமது வாழ்வை வெறுக்கிறார்கள்.
நாம் சிலரை எந்த காரணம் இன்றி அல்லது குறிப்பிட்ட காரணத்தோடு வெறுக்கிறோம். அவர்கள் முகம், நிறம், இனம், பெயர், முன்பகை, அவர்கள் கலாச்சார பின்னணி, அவர்களின் எண்ணங்கள், கொள்கைகள், சமூக வலைத்தளங்களில் அவர்கள் நடத்தை, அவர்கள் வெளிப்படுத்தும் கருத்து  இப்படி எதுவும் ஆழ்மனதில் இருக்கலாம். 
சில நிறங்களை வெறுக்கிறோம். தியாகத்தை குறிக்க காவி, அமைதியைக் குறிக்க வெண்மை, பசுமையைக் குறிக்க பச்சை என்று நமது தேசியக் கொடியில் உள்ளது போல ஒவ்வொரு நிறத்திற்கும் ஓர் உணர்ச்சி, ஓர் உண்மை, ஒரு காரணம் உள்ளது. சில வண்ணங்கள் நமது விருப்பமான (Favorite) ஒன்றாக இருக்கும். காரணமே இல்லாமல் சிலருக்கு சில வண்ணங்கள் பிடிக்காது. கறுப்பு மற்றும் காவி வண்ணங்களை வெறுப்பவர்கள் உண்டு. அதிகம் பேருக்கு பிடித்த வண்ணம் நீலம், பிங்க் எனலாம்.
சில டிவி சேனல்களை நமக்கு பிடிப்பதில்லை. கொடுமையான சீரியல்கள் வருவதால் சன் டிவி, எப்போதும் சத்தம் அதிகமாக இருப்பதால் ரிப்பப்ளிக் டிவி, சில மோசமான மனிதர்கள் பங்கு பெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியால் விஜய் டிவி என்று சொல்லலாம்.  சில டிவி அல்லது பத்திரிகை வேண்டுமென்றே உண்மைகளை திருத்தி சில அரசியல் கட்சிகளை ஆதரிப்பதால் அவற்றை வெறுக்க நேரிடுகிறது.
சில சினிமா நட்சத்திரங்களை வெறுக்கிறோம். அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள், பெண்களை மோசமாக சித்தரிப்பவர்கள், மிக மோசமான வக்கிரமான வசனங்கள் வைப்பதால், ஆபாசமான காட்சிகளில் நடிப்பதால், அவர்களின் சொந்த வாழ்க்கை காரணமாக என்று காரணங்கள் பல இருக்கலாம். அது போல சில விளையாட்டு வீரர்களை நமக்கு பிடிக்காது. அதிக மோசமாக பேசும் சஞ்சய் மஞ்சரேக்கர், சொந்த பெருமைக்காக விளையாடிய கவாஸ்கர், மைதானத்தில் கெட்ட வார்த்தை பேசும் கம்பீர் அல்லது கோஹ்லி என காரணங்கள் மாறுபடுகின்றன.
அன்பே சிவம், லவ் இஸ் காட் என்று சொல்லுவதால் அன்பின் மறுவடிவமாக இருக்கும் கடவுளுக்கு வெறுப்பு இல்லை. ஆனால் கடவுளையே வெறுப்பவர்கள் உண்டு. 
இருட்டை இருட்டால் அகற்ற முடியாது. ஒளியால் முடியும்.வெறுப்பை வெறுப்பால் நீக்க இயலாது. ஆனால் அன்பினால் முடியும். (அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்). வெறுப்பு முரண்களை மோதல்களை உருவாக்கும். அன்பு எல்லாவற்றையும் கண்மறைத்து மனதினை ஆனந்தத்தில் ஆழ்த்தி விடும். இதனை சொல்லுவது எளிது. கடைபிடிப்பது கடினம். அன்பு இருப்பவர்கள் அன்பு தருவார்கள். உலகம் அன்பினால் நிறையட்டும். 

No comments:

Post a Comment