Thursday, December 12, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 35


கடந்த காலம் உடைந்த பானை 
கடந்த காலம் என்பது உடைந்த பானை. எதிர்காலம் என்பது மதில் மேல் பூனை. நிகழ்காலம் என்பது இசை தரும் வீணை.
ஏற்கனவே நதியில் ஓடிக் கொண்டு இருக்கும், கால் நனைத்த நீரை நம்மால் மீண்டும் தொட முடியாது. கடந்த நேரத்தை நம்மால் திரும்பப் பெற முடியாது. சிந்திய நீரை அள்ளி விட முடியாது. சொல்லிய வார்த்தையை வாய்க்குள் திரும்பப் போட முடியாது. வில்லில் புறப்பட்ட அம்பை மறுபடியும் அழைக்க முடியாது. அரிந்து விட்ட கனியை ஓட்ட வைக்க முடியாது. அனுப்பி விட்ட மெயிலை ஒன்றும் செய்ய முடியாது. அது போலத்தான் கடந்த காலம் என்பதும்.
காலம் தான் சொல்லும் என்பது நமக்கு உணர்த்தும் ஒரு செய்தி அலைகள் கடல் ஆவதில்லை. கால் நனைத்த பின் மீண்டும் அது கரையைத் தொட்டு விட்டு சென்று விடுகிறது. எனவே காலம் களிம்பாக ஆனாலும் சென்றதினி மீளாது.
நம்மை நாமே உற்று நோக்குதல் நன்மை தரும். மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தால் தீங்கு தான் வரும் மனதிற்கும் உடலுக்கும். நடந்து முடிந்ததை வரலாறு என்கிறோம். அது வெறும் வரலாறு தான். நடந்து முடிந்த கெடுதல்கள் ஏமாற்றங்கள் அவமானங்கள் இழப்புகள் இவற்றை எண்ணி எண்ணிப் பார்ப்பதால் ஆரோக்கியமற்ற சமாளிக்கும் திறனையே நாம் பெறுகிறோம்
நமது மகிழ்ச்சிக்கு குறுக்கே நிற்பது நாம் மட்டுமே. நாம் ஒரு வண்ணத்துப்பூச்சி என்றால் அதனைப் பறக்கவிடாமல் அதன் சிறகைப் பிடித்துக் கொண்டு இருப்பது நாம் தான். அதாவது நமது முன்னேற்றத்திற்கு நாமே தான் தடை. இதில் சந்தேகம் வேண்டாம்.
நினைவுகள் நமக்கு தொந்தரவு இல்லை. ஆனால் திரும்பத் திரும்ப நினைக்கும் எண்ணங்களுக்கு நாம் வலு சேர்த்து நமது முன்னேற்றத்தை நாமே முடக்கிப் போடும் நங்கூரம் ஆகிறோம். ஏற்கனவே நடந்து முடிந்த அநீதிகளை, அவதிகளை திரும்பவும் நினைவு கூர்ந்து பிறரிடம் பகிரும் பொழுது ஆறிவிட்ட காயத்தின் தழும்பை மீண்டும் கீறிவிட்டு ரத்தம் வரச் செய்கிறோம் என்று தான் அர்த்தம்.
ஒரு தடகள வீரன் முதுகின் பின்னால் மிகவும் கனமான ஒரு மூட்டையைக் கட்டிக்கொண்டு கூடவே ஓடி வரும் இதர ஓட்டப்பந்தய வீரர்களை விட எப்படி வேகமாக ஓடிவிட முடியும்? அவனால் ஓட முடியும். ஆனால் அவன் தான் கடைசியில் வருவான். வெற்றி நிச்சயம் பெற மாட்டான். அப்படித்தான் கடந்தகால நினைவு மூட்டைகளை சுமந்து கொண்டு வாழ்வைக் கடப்பது என்பதும். நிச்சயம் நாம் பின்தங்கிப் போய் விடுவோம்
சுமந்திருக்கும் அந்த வேண்டாத மூட்டையை (வருத்தங்கள், அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நஷ்டங்கள், சந்தித்த இடர்பாடுகள், செய்த தவறுகள், அதனால் மனதில் இருக்கும் குற்றபாவங்கள், உடைந்த மனதின் வலிகள், காழ்ப்புணர்ச்சிகள், தேவையற்ற சந்தேகங்கள், எதிர்கால பயங்கள், சலிப்புகள், தோல்வி பயங்கள், இயலாமை எனும் உணர்வுகள், முயற்சிக்க முடியாத அயற்சிகள் போன்றவை தான் அந்த மூட்டையில் மிகவும் கனமாக உட்கார்ந்து இருக்கிறது)சற்றும் யோசிக்காமல் தாமதிக்காமல் கீழே போடாவிட்டால் நம்மால் நகர முடியாது
நமக்குத் தேவை தன்னம்பிக்கை, நன்னம்பிக்கை, மற்றும் உற்சாகம். இவற்றை அந்த வேண்டாத மூட்டையை கீழே போட்ட பிறகு கையிலேந்தி வாழ்க்கைப் பாதையில் நடைபோட வேண்டும். புதிய பாதையில் புதிய புன்னகையோடு நாம் முன்னேற நிச்சயம் நாம் உறுதி ஏற்க வேண்டும்.
வசதி வட்டத்தை விட்டு ஒரு சவால் வட்டத்தில் நுழைவது என்பது சற்று கடினமான சூழல் தான். இருப்பினும் அதனுள் நுழைந்தே ஆக வேண்டும் என்று நமக்கு நாமே சுய சந்தேகம் இன்றி கட்டளை இட்டுக்கொண்டு நகர்ந்தால் நரகம் தவிர்க்கலாம். நன்றாக இருக்கலாம்.


No comments:

Post a Comment