Tuesday, December 17, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 39


தாக்கம் என்பது எதிர்வினையே 
இயற்கையில் எல்லாவற்றிற்கும் வெகுமதிகள் அல்லது தண்டனை கிடையாது; ஆனால் விளைவுகள் நிச்சயம் உண்டு. நமது செயல்களுக்கு நிச்சயம் முடிவென்றும் உண்டு. ஒவ்வொரு செயலும் ஒரு தாக்கத்தை (இம்பாக்ட் என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்) ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு தாக்கத்திற்கும் ஒரு பாதிப்பு உண்டு.
சென்னையில் வெள்ளம் வந்த பொழுது தனிமனிதரும், சமூகமும் எத்தனை தாக்கத்திற்கு உள்ளானார்கள் என்று நமக்குத் தெரியும். சமுக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூச்சல் பாதிப்பு என்ன என்றும் நமக்கு நிச்சயம் தெரியும். 
கல்வியும் பொருளாதாரமும் நாட்டின் இரு கண்கள் எனலாம். கல்வி கற்றவர்களால் நாட்டுக்கு நல்ல தாக்கம் மற்றும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தான் அனைவருக்கும் கல்வி, பெண் கல்வி போன்ற திட்டங்கள் அறிமுகமாகி உள்ளன. சமூகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது நிச்சயம் அந்த நாடு முன்னேற்றப் பாதையில் வேகமாக செல்லுகிறது.
சுயமதிப்பை உயர்த்திட பணத்தை துரத்த ஆரம்பித்தால் நம்மைச் சுற்றி உள்ளவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற சில முக்கியமான விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ளத் தவறிவிடுகிறோம். அதுவே பணத்தின் தாக்கம் என்பது.
சுயமாக இருக்கும் பெண்களினால், பொருளாதார சுதந்திரம் பெற்ற பெண்களினால் குடும்பங்கள் மேம்படுகின்றன. அப்போது பிள்ளைகளின் உடல்நலன் சீராகிறது. குழந்தை இறப்பு, சிசுக்கொலை, மக்கள் தொகை பெருக்கம் எல்லாமே குறைகிறது. இது தான் பெண்களின் பொருளாதார மேம்பாட்டின் தாக்கம் என்பது. 
உள்நாட்டு கலவரம் மற்றும் வன்முறை இருக்கும் பிரதேசங்களில் சிறு குழந்தைகள் உளவியல் ரீதியான அதிர்ச்சி, மன அழுத்தம் மற்றும் பயம் இவற்றில் தான் அவை வாழ்கின்றன. அதனால் தான் சட்ட ஒழுங்கின் மீது எந்த அரசும் கவனம் செலுத்த விரும்புகிறது. சட்ட ஒழுங்கு சீர்கெடுவதால் ஏற்படும் சமூக தாக்கம் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது.
அதே போல பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, மந்தநிலை, பணவீக்கம் போன்ற விஷயங்களின் தாக்கத்தில் இருந்து ஒரு நாடு மீண்டு வர பல ஆண்டுகள் ஆகின்றன. 1945 ஆம் ஆண்டு குண்டு போடப்பட்ட ஜப்பான் மீண்டு சகஜ நிலைக்குத் திரும்ப சுமார் 40 ஆண்டுகள் ஆயின. அதாவது 1980 வரை 'டோன்ட் டச்' என்று யாருமே உலகில் ஜப்பானிய பொருட்களை வாங்கவில்லை. 
அதே தான் ஊழல் அதிகமாக நிலவும் தேசங்களின் பொருளாதாரமும். நேர்மைக்கு இருக்கும் நல்ல தாக்கங்கள் ஊழல் போன்ற சமூக சீர்கேடுகளுக்கு இருக்கும் தாக்கம் மிகவும் பயங்கரமானது. காகிதங்கள் கோப்புகள் மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியே நகருவதில்லை. வல்லமை பெறுவதும் வல்லரசு ஆவதும் நிகழும் சாத்தியம் தள்ளித்தானே போகும்.
சமுக வலைத்தளங்களின் தாக்கம் இன்று மிகவும் மேலோங்கி விளங்கிகுறது என்று நான் சொல்லவும் வேண்டுமோ? 800 ஆண்டுகளுக்கு முன்பு மார்கோபோலோ நமது சோழ நாட்டிற்கு விஜயம் செய்த பொழுதே சீனர்கள் காகித பணத்தை அறிமுகம் செய்து விட்டனர். அப்போது நாம் வெள்ளி, முத்து, தங்கம் போன்றவற்றையே பயன்படுத்தி நமது வணிகத்தை செய்தோம் என்பது வரலாறு. அதே போல இன்று இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் எல்லாமே மாறி விட்டது. பெட்டிக்கடையில் கூட 'கூகிள் பே' இருக்கிறது. தொழில்நுட்பத்துடன் சேர்ந்து மக்களும் ஓட ஆரம்பித்து பந்தயத்தில் இறங்கி விட்டனர். அதுவே சமுக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் சகாப்தத்தின் தாக்கம் என்பது.
அடுத்து, ஊடகங்களின் தாக்கம் என்பது, அது சொல்லில் அடங்காத ஒன்று. இன்று யார் ஆட்சிக்கு வர வேண்டும், எந்த பொருள் விற்கப்பட வேண்டும், எந்த படம் ஓட வேண்டும், எந்த கொள்கையை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு தொடர் சங்கு போல காதில் ஊதி (ஊதி ஊதி எல்லாவற்றையும் பெரிதாக்கி) மிகப்பெரிய அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள். மக்களின் சுய சிந்தனையே மழுங்கி விட்டது தான் அவை ஏற்படுத்திய தாக்கம் என்பது.
உண்மையின் தாக்கம், பொய்யின் தாக்கம், அநீதியின் தாக்கம் என்பது போல நல்ல தலைமையின் தாக்கம் உலகெங்கும் பரவ வேண்டும். வாழ்வின் மதிப்பீடுகளை உணர்ந்து பின்பற்றும் போது உலகே போர்க்களத்தை நோக்கி பாய்வதை விடுத்து பொற்காலத்தை நோக்கி பயணிப்பதை காண முடியும். அது தான் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் தாக்கம் என்பது.
என்ன போட்டுத் தாக்கி விட்டேனா? போகட்டும் விடுங்கள். எப்படியோ படித்து முடித்து கடைசி வரிக்கு வந்து விட்டீர்களே!!

No comments:

Post a Comment