Saturday, December 7, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி 31


:
31. எது ஒருவரின் மதிப்புமிக்க சொத்து ?
ஒவ்வொரு மனிதரின் வாழ்வில் மிகவும் முக்கியமான மதிப்புமிகு சொத்து என்பது அவரின் மனநிலை ஆகும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிவின் மூலமாகவும், அந்த நபர் கடந்து செல்லும் நிகழ்வு மற்றும் அதன் அனுபவம் மூலமாகவும் அவருக்கு இருப்பது என்னவென்றால் அவரின் தன்னம்பிக்கை மற்றும் நேர்மறையான மனப்பாங்கு மற்றும் நுண்ணறிவு. அது அவரை அவரின் வாழ்வில் அவரை வெகுதூரம் நிச்சயம் அழைத்துச் செல்லும்.
வாழ்வில் பல நேரம் நம்மில் பலர் பாதி குவளை நிறைந்ததாகவே எண்ணி வருத்தத்துடன் இருக்கிறோம். ஒரு பாதகமான சூழலை விட, வாழ்வில் நாம் சந்திக்கும் அதிகபட்ச வலியை விட அந்த வலி தந்த பாடத்தை விட அது கற்றுத்தந்த பாடத்தை விட எது நமக்கு பெரிய சொத்தாக இருந்து விட முடியும்?
ஒரு பாதகமான சூழல் ஒரு சில மனிதரை புரட்டிப் போடும், உடைத்துப் போடும். ஒரு சிலருக்கு  ஏற்கனவே  இருக்கும் சாதனைகளை முறியடித்து நிற்கும் சூழலாக மாறும். சில நேரம் துன்பம் நம்மை குணமாக்கும். கஷ்டம் நம் மனதிற்கு களிம்பாக மாறும். வலி சிலருக்கு ஊக்கத்தை அளிக்கும். அப்படி பல அவமானங்களை, தோல்விகளை, ஏமாற்றங்களை, வலிகளை வேதனைகளை தமது புதிய சூழலுக்கு, பற்பல சாதனைகளுக்கு ஏதுவாக மாற்றி இருக்கிறார்கள். அது நெல்சன் மண்டேலாவாக இருக்கலாம், அப்துல் கலாமாக இருக்கலாம், இசைப்புயல் ரஹ்மானாக இருக்கலாம், பில் கேட்ஸ் ஆக இருக்கலாம். இவர்கள் எல்லோருமே தமது மனநிலையை மிகப்பெரிய சொத்தாக நினைத்து முன்னேறி இருக்கிறார்கள். 
சில சமயம் 'நம்பகத்தன்மை' நம்மை பாதாளம் வரை தள்ளிவிடும். நம்பியவர் நம்மை கழுத்தறுத்து ஏமாற்றி நமக்கு நஷ்டம் ஏற்படுத்தும் பொழுது நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் நமக்கு பெரிய சொத்தாக அமைகிறது. அப்படி நான் பல முறை ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். அவமானப்பட்டு இருக்கிறேன். அதை மீறியும் நான் அதே தப்பை தவறைச் செய்து வலி அனுபவித்து இருக்கிறேன். அந்த வலிகளை வாழ்வின் பெரிய வழிகளாக எண்ணுகிறேன். அந்த பாதகமான சூழலுக்கு நன்றி சொல்கிறேன். அப்படிப்பட்ட மனிதர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று கற்றதே மிகப்பெரிய சொத்து என்று சொல்ல முடியும்.
எல்லாம் சுலபமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டாம். எப்படி இருந்தாலும் அதற்கேற்ற சூழலறிவு வேண்டும் என்று கேட்போம். குறைவான சிக்கல்கள் வேண்டும் என்று நினைக்க வேண்டாம். அதிகமான திறன்கள் வேண்டும் என்று எண்ணுவோம். சவால்களே வாழ்வில் வேண்டாம் என்று நினைப்பதற்கு பதில் எந்த சவாலையும் சந்திக்கும் துணிவு மற்றும் ஞானம் இரண்டையும் கேட்போம்.
தவிர காலம் (நேரம்) தான் நமக்கிருக்கும் மிகப்பெரிய சொத்து எனலாம். எல்லோருக்கும் சமமான 24 மணி நேரம் என்றாலும், நாம் அவற்றை எப்படி பயனப்டுத்தி முன்னேறுகிறோம் என்பது தான் நமது புத்திசாலித்தனம்.
அதே போல ஆரோக்கியம் தான் நமது மிகப்பெரிய சொத்து. சிறு வயதில் அதனை இழந்து பிறகு அதிக செலவில் அதனை மீட்க நினைப்பது நிச்சயம் தவறு தான்.
பல திறமைசாலிகள், அறிவாளிகள், நல்மனம் படைத்தோர் இவர்களின் தொடர்பு நமக்கு நல்ல பெரிய சொத்து எனலாம். அதனை நாம் ஒரு நாளில் பெற்றுவிட முடியாது. படிப்படியாக பல ஆண்டுகள் அதற்கு உழைத்து தான் பெற முடியும்.
இயல்பாகவே ஆண்டவன் கொடுத்திருக்கும் ஆற்றல், பிறகு நமது ஊக்கம் உழைப்பு ஆர்வம் இவற்றால் நாம் பெறுகிற ஆற்றல் இவை நமக்கு கடைசி வரை வாழ்க்கையில் மிகப்பெரிய சொத்தாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
நம்மை நாம் அறிந்து நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொண்டு அவற்றை செவ்வனே கடைபிடித்து முன்னேறுவது என்பது ஒரு சொத்து எனலாம். 
மிகப்பெரிய சொத்து என்று சிலர் தமது பெற்றோர், குருமார்கள், வழிகாட்டிகள், படித்த புத்தகங்கள், கிடைத்த மனைவி மக்கள், பெற்ற நண்பர்கள் மற்றும் உறவினர், சிறந்த பணியாளர்கள் என்று எண்ணி மகிழ்வதைப் பார்த்திருக்கிறோம். 
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று ஆசி வழங்குவதை பார்த்திருக்கிறோம். கலையாத கல்வி, கபடமற்ற நட்பு, குறையாத வயது, குன்றாத வளமை, போகாத இளமை, பரவசமான பக்தி, பிணியற்ற உடல், சலியாத மனம், அன்பான துணை, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடையற்ற கொடை, தொலையாத நிதி, கோணாத செயல், துன்பமில்லா வாழ்வு என்று அபிராம பட்டர் இறைவனிடம் கேட்ட வரங்கள் என்று கூறப்படுகின்றன.
'இன்பர்மேஷன் இஸ் வெல்த்' என்று ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் சொல்லுவார். அதாவது நம்மிடம் இருக்கும் தகவல்கள் (தகவலறிவு என்பர்.) 
பல நிறுவனங்கள் இன்று தமது 'பாலன்ஸ் ஷீட்டில்' அசையும் அசையா சொத்து என்று கட்டிடம், இயந்திரம், தொழில்நுட்பம் என்று பலவாறாக குறிப்பிட்டாலும் திறன் வாய்ந்த ஆற்றல் மிக்க மக்களே சிறந்த சொத்து என்றாகும். 'ஹியூமன் அஸெட்ஸ்' என்று சொல்லுவர் - மனித வளம். 
நீர், கனிமவளம், நாகரீகம், கலாச்சாரம், மருத்துவம், சாஸ்திரம், மலை, நதி, கடல் என்று இருந்தாலும் நமது நாட்டின் மிகப்பெரிய சொத்து நமது இந்தியர்களின் அறிவு தான் என்பதில் சிறிதும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கள்வரால் திருட முடியாது, தீயில் எரியாது, அள்ள அள்ளக் குறையாது அறிவு (தொட்டனைத் தூறும்...கற்றனைத் தூறும் அறிவு)
உங்கள் சொத்து என்ன என்று இது வரை யோசித்து உள்ளீர்களா? அது உங்கள் தனித்தன்மையாகக் கூட இருக்கலாம்.

No comments:

Post a Comment