Sunday, December 29, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 50



50. எங்கும் யார் பொறுப்பு என்பதே கேள்வி
(This article is dedicated to all the Social Soldiers)
"உன் அழகுக்கு தாய் பொறுப்பு. அறிவுக்கு தமிழ் பொறுப்பு. புகழுக்கு வான் பொறுப்பு. பொறுமைக்கு மண் பொறுப்பு. குணத்துக்கு பொன் பொறுப்பு. நிறத்துக்கு மலர் பொறுப்பு. உயிரே உயிரே என் உலகம் உனது பொறுப்பு" என்ற பிரபல பாடல் வரிகளை 'ஆளவந்தான் படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதி இருப்பார்கள்.
பொறுப்பு என்பது ஒரு நபர் இடப்பட்ட பணியை அல்லது கடமையை செவ்வனே நிறைவேற்றுவது எனலாம். நிறுவனம் என்றால் ஒருவரின் நிலைக்கு ஏற்ப சில பொறுப்புக்கள் மற்றும் கடமை சார்ந்த பணிகள் அவரது மேலதிகாரிகளால் ஒதுக்கப்படும். அதனை செய்து முடிப்பது அவரின் கடன் அல்லது கடமை எனலாம்.அதுவே குடும்பம் எனும் நிறுவனம் என்றால் இல்லத்தரசி சமையல் மற்றும் வீட்டு நிர்வாகம், கணவர் என்பவர் வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பது, பிள்ளைகள் நன்கு படித்து முன்னேறுவது என்று இந்த பொறுப்பு அவர்களுக்குள் நிர்ணயம் செய்யப்படாமல் பேசி அல்லது பேசாமல் முடிவு செய்யப்படுகிறது.
அரசுத் துறை என்றால் அரசின் சில துறைகள் சாலைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், தடையில்லா மின்சாரம் வழங்குதல் என்று தமது பொறுப்பை ஏற்று அதனை செய்து முடிக்கின்றனர். வழங்கிய பணியை முடிப்பது என்பது வேறு. தாமாக உவந்து தனக்கில்லாத ஒரு பணியை ஏற்று அதனை தனது தலையான கடமையாக எண்ணி பொறுப்புடன் செயலாற்றுவது வேறு.
'உரத்த சிந்தனை' என்ற எழுத்தாளர்கள் சங்கத்தினை ஏழு பேரைக் கொண்டு 1983 ஆம் ஆண்டு தொடங்கிய ராஜசேகர் மற்றும் உதயம் ராம் இருவரும் தமிழுக்கும் சமூகத்திற்கும் தமது அயராத பணியை மிகுந்த பொறுப்புடன் ஆற்றி வருகின்றனர். சாதாரண மக்களை சாதனை மக்களாக மாற்றி உள்ளனர். பலரின் நூலை வெளியிட்டு உள்ளனர். ஒரு மாதப் பத்திரிகையை நடத்தி வருகின்றனர். மகாகவி பாரதியின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக 'பாரதி உலா' எனும் நிகழ்ச்சியை (இந்த ஆண்டு 15 ஊர்களில் 40 நிகழ்ச்சிகள் திட்டமிட்டு செயல்படுத்தி அதன் வெற்றி விழாவை 30.12.19 அன்று விமரிசையாக கொண்டாடுகின்றனர்). பொறுப்பு என்பது இங்கே தானும் ஏற்று சிலருக்கு சில பொறுப்புக்களை பகிர்ந்து கொடுத்து இதனை செம்மையாக செய்து முடித்து உள்ளனர்.
தவிர, அளித்த பொறுப்பு அல்ல. தாமே முன்வந்து ஏற்ற பொறுப்பு.'சேவாலயா' 'ஆனந்தம்' 'மாதா கேன்சர் டிரஸ்ட்' 'தர்ஷினி' போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஓர் அரசு ஏற்க வேண்டிய பெரிய பொறுப்புகளை சில தனி நபர்கள் தன்னார்வத்தோடு சில அதே எண்ணம் கொண்ட நல்மனம் படைத்த நபர்களின் உதவியோடு அருமையாக செயல்படுத்தி வருகின்றனர்.
நான் வசிக்கும் போஸ்டல் காலனி முதல் தெருவில் (மேற்கு மாம்பலம்) ராமநாதன் மற்றும் நவநீதன் எனும் இரண்டு இளைஞர்கள் கற்பக கணேஷ், சந்தானம், அன்பு, பாஸ்கர் போன்ற அதே நோக்கம் கொண்ட சிலரின் உதவியோடு மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவதால், தெருவின் சுத்தம், குடிநீர் வரத்து, தெருவில் பாதுகாப்பு போன்ற விஷயங்கள் சிறப்பாக இருக்கிறது. பகுதி MLA திரு சத்யா அவர்களை அழைத்து வந்து தெருவின் பிரச்சனைகளை சொல்லுதல், காவல் துறை துணை ஆணையரை வரவழைத்து பெண்களைக் காக்கும் புதிய செயலி 'காவலன்' அறிமுகம் செய்தல், குடிநீர் வரத்து சம்பந்தமாக உரிய அதிகாரிகளை சென்று சந்தித்து ஆவன செய்தல் எல்லாமே யாரும் சொல்லாமல் தாமே உவந்து ஏற்ற பொறுப்பு எனலாம்.
இப்போது யோசியுங்கள், 'பொறுப்பு' என்பது பிறர் கொடுப்பதா? தாமே ஏற்று செயல்படுத்துவதா? ஒவ்வொரு தனி நபருக்கும் (நாட்டின் குடிமகனுக்கும்) தெருவில் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவது, எச்சில் துப்பாது இருத்தல், சட்ட ஒழுங்கை மதித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாத்தல் போன்ற சில சொல்லப்படாத பொறுப்புக்கள் இருப்பதை உணர்ந்து செயல்படுவது முக்கியமாகிறது.
தனிநபர்களுக்கு சில பொறுப்புக்கள் உண்டு. குறிப்பாக அவர்கள் வாழ்க்கைக்கு அவர்களே பொறுப்பு. அவர்களின் வெற்றி, தோல்வி, வருமானம், செலவு, சேமிப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி, கல்வி, வேலை, வேலையில் பதவி உயர்வு, குடும்பப் பராமரிப்பு என்று எதற்குமே அரசோ, பிறரோ, சமூகமோ, உறவினரோ, நண்பர்களோ வேறு யாருமோ பொறுப்பு அல்ல. அவர்களே முழுக்க முழுக்க பொறுப்பு.
நமது சிக்கல்களுக்கும் நமது சந்தோஷங்களுக்கும் எப்படி பிறர் பொறுப்பாக இருக்க முடியும்.ஒவ்வொருவரும் 'என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு' (ஐ ஆம் ரெஸ்பான்சிபிள் பார் மை லைப்) என்று உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போது யாரும் யாரையும் 'பழி' சொல்லும் இழிசெயல் வேண்டி இருக்காது.பிளேம் கேம் என்று சொல்லப்படும் இந்த பழி விளையாட்டு உலகெங்கும் வீட்டிலும், வெளியிலும், சமூகத்திலும், நடத்தப்படுகிறது. இது தமக்கு இருக்கும் பொறுப்பை தட்டிக் கழிப்பதால் வரும் விளைவே.
தட்டிக் கழிப்பது பொறுப்பு அல்ல. முட்டி மோதி முன்வந்து ஏற்பதே ஆகும். அதற்கு தன்னார்வம் என்று சொல்லுவது உண்டு. தம்முடைய செயல்களையே பிறர் செய்ய வேண்டும் என்று நினைக்கும் உலகில் பிறர் செயல்களை கடமைகளை யார் வந்து பொறுப்புடன் செய்வார்கள்.
இந்த உலகில் நிறைய உதயம் ராம்கள், முரளிதரன்கள், பாகீரதிகள், கிருஷ்ணமூர்த்திகள், விஜயஸ்ரீக்கள், ராமநாதன்கள், சௌமியாக்கள் தேவைப்படுகிறார்கள்.பொறுப்புகளை சொல்லாமல் ஏற்கும் நபர்களே நல்ல தலைவர்களாக விளங்குகிறார்கள். ஆகிடுவோம் நாமும் அப்படி பொறுப்புடன். ஏற்கும் பொறுப்பே மிகவும் சிறப்பு.
(இந்தப் பகுதி இன்றுடன் 50 செய்திகளைத் தொட்டு நிறைவடைகிறது தங்கள் ஆதரவுடன்)

No comments:

Post a Comment