Monday, December 9, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி 32


எனக்கு மட்டும் ஏன் இப்படி?
சாப்பிடும் போது தான் எனக்கு போன் வருகிறது. நல்லதொரு டிவி நிகழ்ச்சி குடும்பத்தோடு ரசித்துப் பார்க்கும் பொழுது தான் ஒரு விருந்தாளி வந்து நுழைகிறார். அவிழ்ந்த சைக்கிள் செயினை கழற்றி மாட்டி கையில் கருப்பு மையுடன் இருக்கும் போது மூக்கில் ஒரு கொசு கடிக்கிறது. நான் கையை நீட்டும் பொழுது மிகச்சரியாக கவுண்டர் கிளோஸ் என்கிறான். இப்படி எதை என்று சொல்ல. எல்லாமே எனக்கு மட்டும் ஏன் இப்படி? பலர் புலம்புவதை நாம் கேட்டிருப்போம்.
நமக்கு ஒரு துன்பம் நேர்கையில் பலருக்கும் வந்திடாத ஒன்று நமக்கு வந்து விட்டதாக எண்ணி வருந்துவோம். யோசித்துப் பார்த்தால், ஒரு மழைக்காலம் வரும் பொழுது எல்லோருமே நனைகிறார்கள். பலருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. பலருக்கு இருமல் சளி வருகிறது. ஏதோ நமக்கு மட்டும் வந்து விட்டதாக நினைக்கக் கூடும். 2015 ஆம் ஆண்டு வெள்ளம் சென்னை வீதிகளில் வந்த பொழுது எங்கள் வீட்டில் மூன்றரை அடிக்கும் மேல் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. எங்கள் எல்லாம் தரைத்தளம் என்பதால். பிறகு தான் புரிந்தது தரைத்தளத்தில் குடியிருந்த அனைத்து வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பொருள் நஷ்டம் ஏற்பட்டது. அவ்வளவு ஏன்? இன்னும் தாழ்வான பகுதிகளில் முதல் மாடிக்கே தண்ணீர் புகுந்தது. ஆனாலும் முதலில் ஏற்பட்ட எண்ணம் எனக்கு மட்டும் ஏன் இப்படி என்பது தான்.
ஒரு பிரபல ஆங்கிலப் பாடலில் வருவது போல "உண்மை வேண்டுமா? நம்மில் எல்லோருக்கும் துன்பம் நேர்கிறது. வாழ்வில் எல்லோருமே துன்பத்தில் தவிக்கின்றனர். அந்த நேரத்தில் நாம் எல்லோருமே துன்பப்படுகிறோம்" சுனாமி வந்த போது லட்சக்கணக்கான மக்கள் இறந்து போனார்கள். ஒவ்வொரு குடும்பத்தாரும் நினைத்திருக்கக் கூடும், ஏன் நமக்கு மட்டும் இப்படி என்று? ஜப்பானில் 1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமா நாகாசாகி நகரங்களில் குண்டு விழுந்த சமயம் எத்தனை பேர் உயிர் இழந்தனர். ஜப்பானியர்கள் அனைவருமே நினைத்திருக்கக்கூடும் ஏன் நமக்கு மட்டும் இப்படி என்று?
விம்பிள்டன் சாம்பியன் ஆர்தர் ஆஷே கொடுமையான நோய்க்கு ஆளான தருணம் அவருக்கு அவரின் ரசிகர்களின் கடிதங்கள் வந்து குவிந்தன, ஏன் ஆண்டவன் உங்களுக்கு மட்டும் இப்படியான ஒரு நோயைத் தந்தார் என்று. அதற்கு அவர் பதில் சொன்னார், உலகில் 50 மில்லியன் பேர் டென்னிஸ் விளையாடுகிறார்கள். சுமார் ஐந்து லட்சம் பேர் அதில் தொழில்முறையில் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். அவர்களில் சுமார் 5000 பேர் கிராண்ட் ஸ்லாம் வரை செல்லுகிறார்கள். ஐம்பது பேர் விம்பிள்டன் வரை செல்லுகிறார்கள். நான்கு பேர் மட்டும் அரையிறுதி ஆட்டத்திற்கு, இரண்டு பேர் மட்டும் இறுதி ஆட்டத்திற்கு செல்லுகிறார்கள். அந்த இரண்டு பேரில் ஒருவனாகிய என் கையில் மட்டும் வெற்றிக்கோப்பை இருந்த பொழுது நான் கேட்கவில்லையே, "ஆண்டவரே ஏன் என் நான் மட்டும்? எனக்கு மட்டும் ஏன் இப்படி?" என்று.
சோதனைகள் நம்மை வலுவாக்கும். துக்கமம் துன்பமும் நம்மை மனிதர்களாக வைத்திருக்கும். தோல்விகள் நம்மை தாழ்மையுடன் வைத்திருக்கும். மகிழ்ச்சி நம்மை ஆனந்தத்தில் திளைக்க வைக்கும். வெற்றி நம்மை ஒளிர வைக்கும்ஆனால் நம்பிக்கையும் நல்ல மனோபாவமும் தான் நம்மை தொடர்ந்து வாழ்வில் இயங்க வைக்கும்.
நல்ல வேலை கிடைக்கும் பொழுது, அருமையான மனைவி அமையும் பொழுது, அற்புதமான வீடு வாங்கும் பொழுது, அழகான அறிவான பிள்ளைகள் பிறக்கும் பொழுது நாம் நிச்சயம் கேட்பதில்லை "ஏன் எனக்கு மட்டும் இப்படி" என்று.
இரவும் வரும் பகலும் வரும். இன்பமும் வரும் துன்பமும் வரும். வெற்றியும் வரும். தோல்வியும் வரும். இப்படி மாற்றி மாற்றி வருவது தான் வாழ்க்கை. ஒரு நாட்டில் இரவென்றால் மற்றொரு நாட்டில் பகல். ஒருவர் வெற்றி பெற்றால் ஒருவர் தோல்வி அடைந்தே ஆக வேண்டும். ஆக, ஏன் எனக்கு மட்டும் இப்படி என நாம் துன்பத்தில் கேட்பது போல இன்பத்தில் திளைக்கும் போது கேட்பதில்லை.
காலையில் அழுக்கு துணிகளை படித்துறைக்கு சுமக்கும் கழுதையின் முகத்தில் சோகம் இல்லை. மாலையில் சுத்தமான நல்ல துணிகளை சுமந்து வண்ணான் வீடு வரும் போது கழுதையின் முகம் இன்பமாக மகிழ்ச்சியாக இருப்பதில்லை.கழுதை கூட நமக்கு குரு தான். இரண்டையும் ஒருபோலவே நினைக்க நாம் பழக வேண்டும். அப்படி பழகி விட்டால் "எனக்கு மட்டும் ஏன் இப்படி?" என்று நாம் கேட்கும் பழக்கத்தை விட்டு விடுவோம்
இந்த திரைப்படப் பாடல் வரி சொல்லும் நமக்குத் தேவையான பாடங்களை ; “எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும். இது தான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறி விடும். பயணம் முடிந்து விடும். மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்”.

No comments:

Post a Comment