Tuesday, December 17, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 38



மனம் வெளுக்க வழி தான் உண்டா?

ஒட்டடை படிந்த வீட்டை சுத்தப்படுத்துகிறோம். வீட்டின் தரையை தினம் தினம் கூட்டிப் பெருக்கி துடைத்து சீராக்குகிறோம். ஜன்னலில் படிந்த தூசியினை அவ்வப்போது துடைத்துச் சுத்தம் செய்கிறோம். அது போல தினம் தினம் மனதில் சேரும் குப்பைகளை, அழுக்குகளை அதாவது வேண்டாத நெகட்டிவ் எண்ணங்களை அதன் பாதிப்புகளை பற்றி நாம் எண்ணிப் பார்க்கிறோமா?

இதைத் தான் பாரதி 'மனம் வெளுக்க வழியே இல்லை எங்கள் முத்துமாரியம்மா' என்று பாடினான். 

மன ஒழுங்கீனமின்மை அல்லது மனத்தூய்மை இன்மை என்பது மனதின் பேரதிக தூண்டுதல்களினால் வரும் விளைவு எனலாம். மனதும் தான் கல்லானது காரணம், மனம் 'செல்'லால் பெறும் விளைவுகளாலே எனலாம். பொதுவாக நாம் வண்டி ஓட்டும் பொழுது, டிவி பார்க்கும் பொழுது, யாரிடமோ பேசும் பொழுது, சாப்பிடும் பொழுது என்று எல்லா சமயமும் மொபைல் போனையே பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஒரு சமயத்தில் பல வேலை செய்வது நல்லது தான் அதனை மல்டி டாஸ்கிங் என்கிறார்கள். ஆனால் மொபைல் போன் மூலம் பெரும்பாலும் நமக்குக் கிடைப்பது எல்லாமே நெகடிவ் விஷயங்கள் தான்.

மன ஒழுங்கீனம் ஏற்பட்டால் அந்த மனதில் தெளிவு இருப்பதில்லை. பாசிட்டிவ் எண்ணங்கள் தோன்றுவதில்லை. பல்வேறு திசைகளில் மனம் பயணித்து மனிதனை எந்த வேலையையும் உருப்படியாக செய்ய விடுவது இல்லை. கடந்த காலத்தை அதிகம் எண்ணி வருத்தப்படுவது, எதிர்காலத்தை எண்ணி பயப்படுவது, அடுத்து என்ன என்று மனம் அலைபாய்வது, குறைகள் மற்றும் புகார்கள் இவற்றில் மனம் லயிப்பது, மற்றவர்களின் விமர்சனம், ஆட்சேபணைகள் என்று சும்மா இருப்பதில்லை மனசு.


மனஉறுதியுடன் நமது மனதை தெளிவாக சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் என்பது ஒரு தவம் போல. இது எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது. 

நம்மை மீறி நடப்பவற்றை கடந்து போக அனுமதிப்பது, எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிற தீர்மானம், ஆழமாக எளிதாக சுவாசிக்கும் பழக்கம், பணியிடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், எந்த முக்கிய வேலையையும் நிலுவையில் வைக்காது இருத்தல், செய்தவற்றை ஒரு முறை அசைபோட்டு பார்த்தல், அவற்றில் தேவையானவற்றை சரிசெய்தல், நன்றி பாராட்டுதல், சில சமயம் மனம் விட்டு சிரித்தல். யோகா மற்றும் தியானம் செய்தல், நமது மன பாரங்களை இறக்கி வைத்தல், தேவையற்ற கவலைகளை சுமக்காது இருத்தல், மனதை எப்போதும் ஏதோ ஒரு நல்லதொரு விஷயத்தில் ஆக்கிரமிக்க செய்தல், அறிவை அனுபவங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல் எல்லாமே நமது மனதை சீராக வைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். 

தேவையற்ற குற்றபாவம், தன்னைப் பற்றி குறைவாக எண்ணிக் கொள்ளுதல், அதிக மன அழுத்தத்தில் இருத்தல், அநாவசியமான கடமைகளை தன்மீது இழுத்துப் போட்டுக் கொள்ளுதல், பணி மற்றும் வாழ்க்கை இரண்டையும் சமமாக பார்க்கும் எளிய வகையினைக் கண்டறிதல், உறவுமுறைகளில் இருக்கும் விரிசல்களை சரிசெய்தல், இவை எல்லாமே நமது மனதை லேசாக்கும்.

ஆர்கனைசிங் என்று சொல்லக்கூடிய ஒழுங்கமைத்தல் ஒன்றும் மிகச் சிரமமான காரியம் இல்லை. யதார்த்தமான ஓர் இலக்கை நிர்ணயம் செய்து அதனை அடைவதற்கு உரிய சரியான நடவடிக்கைகளை எடுத்தாலே நிச்சயம் வெற்றிகள் குவியும். தோல்வி பயம் குறையும்.

அளவிலாத மன இரைச்சல் நமது அக உலகில் (அகமனதில்) புரிந்து கொள்ள முடியாத பல இறுக்கங்களை உருவாக்கி விடும். அது நமது வாழ்வின் நிம்மதியைக் குலைத்து விடும். தெளிவாக இருக்கும் மனதை சேறு போல குழைத்து விடும்.

ஒரு தெளிவான மனது சரியாக சிந்திக்கவும், உண்மையில் முக்கியமானவற்றில் கவனம் செலுத்தவும் ஏதுவாக இருக்கும். 
சிறந்ததொரு வாழ்க்கையை வாழ வெறித்தனமான உறுதியுடன் மனதின் குப்பைகளை அவ்வப்போது நீக்கி சுத்தமாக சுகமாக மனதை வைத்துக் கொள்ளுங்கள்.

நமக்கிருப்பது ஒரு வாழ்க்கை. அதனை செம்மையாக உருவாக்குங்கள். அதனை அர்த்தமுள்ளதாக ஆக்குங்கள்.

அதற்கு முக்கியமாக வேண்டாத டிவி நிகழ்ச்சிகள் காண்பது, வேண்டாத செய்திகளை வாசிப்பது, தீய நபர்களுடன் பழகுவது, உடலை மனதை கெடுக்கும் உணவைத் உண்பது இவை தவிர்த்து பாசிட்டிவ் விஷயங்களை செய்தல், பாசிட்டிவ் மனிதர்களுடன் பழகுவது போன்ற செயல்களை செய்திட வேண்டும். 


வாழ்க்கையை கொண்டாடி மகிழுங்கள். குப்பை என்பது வீட்டில், வெளியில், அகத்தில், புறத்தில் எங்குமே வேண்டாம்.  




No comments:

Post a Comment