Sunday, December 15, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 37


வாழ்க்கைச் சுவையின் மர்மம் 
அறுசுவை உணவென்கிறோம். தவிர நற்சுவை, தீஞ்சுவை, அருஞ்சுவை என்றெல்லாம் தமிழில் வர்ணிக்கின்றனர். எல்லாமே நமது ஐம்புலன்கள் சம்பந்தப்பட்டது தான். காதால் கேட்பது, மூக்கால் நுகர்வது, நாக்கால் சுவைப்பது, கண்ணால் காண்பது, தொட்டால் உணர்வது என்று நான் ஒன்றும் இங்கே புதிதாக சொல்லிவிடவில்லை. தவிர சில அறிவியல் மற்றும் உளவியல் ஆய்வாளர்கள் மனிதர்களுக்கு அங்க அசைவு பற்றிய அறிவு, பசி, வலி, தாகம், கற்பனை என்றெல்லாம் இருப்பது கூட இவற்றில் சேர்க்கலாம் என்கின்றனர்.
மேலும் ஹார்வர்ட் மெடிக்கல் பள்ளி சொல்லுவது இன்னும் ஆச்சரியப்பட வைக்கிறது. தற்காலிக அபிப்ராயம், உடலின் சீர்த்தன்மை, சூடு குளிர் என்று உணரும் புரிதல் அறிவு, காலம் கடந்து போகும் உணர்வறிவு, இதர உடல் உறுப்புகளில் இருந்து கிடைக்கும் உணர்வுகள் என்று சேர்த்துக் கொள்ளலாம் என்கின்றனர்.
பொதுவாக கசப்பான மாத்திரை என்று மட்டும் நாம் சொல்லுவதில்லை. இது ஓர் கசப்பான அனுபவம் என்கிறோம். இது ஓர் இனிமையான சந்திப்பு என்கிறோம். காரசார விவாதம் என்கிறோம். சுவை மற்றும் விருப்பம் (டேஸ்ட் மற்றும் பிரெபெரென்ஸ்) என்பார்கள் சிலர்; அதாவது எந்த மாதிரி உடை அணிவது, எப்படி வீட்டை அலங்காரம் செய்வது அதற்கு தனியான ஒரு ரசனை அல்லது ருசி வேண்டும்.  
பாரதி 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்று பாடிய போது நாக்கில் தெரியும் இனிமை காதில் தெரிகிறது என்கிறான். அதே போல தமிழுக்கும் 'அமுதென்று' பேர் என்று பாடினான் பாரதிதாசன். தெலுங்கில் பத்ராச்சல ராமதாசர் எழுதிய கீர்த்தனை ஒன்றில் "ஓ ராம நீ நாம எந்த ருசிரா' என்று ராம நாம மகிமையை அதன் ருசியை எடுத்து முன்வைக்கிறார்.
அதிகம் பேருக்கு வாழ்க்கை என்றால் அன்பு காதல் மட்டும் தான். சிலருக்கு வெற்றி, சாதனை மற்றும் புகழ் எனலாம். அதிகம் பேருக்கு ஆனந்தம், மகிழ்ச்சி, பணம், அனுபவம், என்று இருக்கிறது. சிலருக்கு குடும்பம், வெற்றி மற்றும் இலக்கை அடைதல், பெயர் புகழ் பெறுதல் என்றாகிறது. வாழ்வின் முடிவுக்கு சுமார் ஒன்பது அறிகுறிகள் இருக்கின்றன : வலி, வாந்தி, வயிற்று சங்கடம், மூச்சுத்திணறல், பதட்டம், பசியின்மை, மலச்சிக்கல், சித்தப்பிரமை அல்லது நினைவில்லாமல் போவது, முற்றிய அமைதியின்மை, மேலும் மரண ஓலம் அல்லது சத்தம் எனலாம். எனவே பல சுவைகளை மீறி சில நவாம்சங்கள் மருத்துவர்களுக்கு மட்டுமே புரிகிறது.
நம்மில் எத்தனை பேர் இயற்கையை ரசிக்கிறோம். மலர்களை, பறவைகளை, வித விதமான செடிகள் மரங்களை, விலங்குகளை, மலை மற்றும் கடற்காட்சிகளை...வறுமையிலும் பாரதி பாடினான் : எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று. வாழ்க்கையின் ரசனை என்பது சிக்கலான ஒன்று. அதன் சுவை பிடிக்கும், பிடிக்காது, என்று மனிதருக்கு மனிதர் சமயத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.  
அன்பைத் தாண்டி பயம், பாதுகாப்பின்மை, இழப்பு, மாற்றம், ஆனந்தம், நன்றி என்று புதிய உணர்வுகளில் லயித்துப் போகிறவர்கள் ஏராளம். அவர்கள் சாதாரண மக்களில் இருந்து மாறுபடுபவர்கள்.
நாம் பயன்படுத்தும் பாத்திரமோ கரண்டியோ நாம் சுவைக்கும் ஒரு ரசம் அல்லது சூப் போன்ற பதார்த்தத்தின் சுவையை பெரிதாக மாற்றி விடாது. இருந்தாலும், பகிரும் தேநீர் கூட நல்ல கோப்பை, நல்ல சூழல், அருகில் இருக்கும் மனிதர்கள், வருடிச் செல்லும் மெல்லிய காற்று, எங்கோ வந்து கொண்டிருக்கும் இதமான பாடல், ஆங்காங்கே ஓடித்திரியும் பறவைகள், கண்ணில் படும் வண்ண மலர்கள், கடல் அலைகளின் சத்தம் என்று இருந்து விட்டால் அந்த தேநீரின் சுவை மாறித்தான் போகும். என்ன சந்தேகம்?
காட்டும் நேரம் ஒன்று தான். ஆனால் நாம் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் நமது ஆரோக்கியம், நமக்கு வரும் தொலைபேசி அழைப்பு, என்று பல விஷயங்கள் காட்டி நமது ஆளுமையை மேம்படுத்தினால் எப்படி இருக்கும். 
சிலர் வீடு சிறியதாக இருந்தாலும், அந்த வீட்டில் அவர்கள் வைத்திருக்கும் பொருட்கள், சுவற்றின் வண்ணம், நாற்காலிகள், பயன்படுத்தும் பாத்திரங்கள், வீட்டில் வருகின்ற நறுமணம், சுற்றி இருக்கும் அழகிய செடிகள், ஜன்னல் திரைச்சீலைகள் என்று நம்மை வியக்க வைக்கும். அது ஒரு பெரிய ரசனை மற்றும் சுவை.
சிலர் வலியை, வேதனையை, தோல்வியை, வருத்தத்தை, ஏமாற்றத்தை கூட பாடல்கள் பாடி ரசித்து விட்டுக் கடந்து விடுவார்கள் அழகாக. அதனை நம்மால் கற்பனை கூட செய்து பார்த்து விட முடியாது. சிலர் அழுகைப் பாடல்களை கூட ரசித்துப் பார்ப்பது உண்டு. 
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் நெகட்டிவ் உணர்ச்சிகளை கூட பாசிட்டிவ் ஆக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் சிலருக்கு உண்டு. எப்போதுமே ஆனந்தம் என்று இருந்துவிட முடியாது. எப்படி கருப்பு நிற காபி டிகாஷன் வெண்மை நிற பாலில் கலந்த பின்பு அழகான வேறு ஒரு நிறத்தை கொணர்ந்து தனது சுயத்தை இழக்கிறதா அப்படி நம்மை இழந்து நம்மைத் தேடிப் பெற்றால் நன்மை பெறுவோம்.
அலுப்பு, அவநம்பிக்கை, பயம், பதட்டம், இவற்றை கூட மகிழ்ச்சி, தன்னம்பிக்கை போலப் பார்த்து விட்டால் வாழ்வில் ஏது கசப்பு?சோகம் நமது வாழ்வே வீணாகும் விதத்தில் பிரதிபலிக்கிறது. அறியாமை என்பது நாம் சுவைக்கும் வாழ்வில் ஒரு சோதனை, நாமே உருவாக்கிய உலகில் பயம் மட்டும் தனியாக நிற்கிறது, நமது அழுகையே தாமதமாக வரும் என்றால் அந்த அழுகைக்கே உயிரில்லை. 


வாழ்க்கையை உள்ளபடி உள்ளத்தில் ஒவ்வொரு நாளும் அப்படி அப்படியே இயல்பாக சுவைப்போம். இரவு பகல் போல எல்லாமே மாறி மாறித்தான் வரும். எல்லாவற்றையும் ஏற்கும் வகை அறிவோம். வாழ்வின் பல்வகை சுவை புரிவோம்.

No comments:

Post a Comment