Tuesday, July 6, 2021

நீங்கா நினைவலைகள் - 12

 நீங்கா நினைவலைகள் - 12

- பாலசாண்டில்யன் 

பகுதி 11 வரை நிறைய பிரமுகர்கள், நண்பர்கள், அக்கறை கொண்ட நண்பர்கள், எனது வகுப்புத் தோழர்கள் பல பேர் முகநூலில் இந்த பகுதியை ஆர்வத்துடன் படிப்பதைக் காண முடிகிறது. அவர்கள் தருகிற உற்சாகத்திற்கு நல்ல கமெண்ட்ஸுக்கும் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.  நிச்சயம் எனது சுய பிரதாபங்களை எடுத்துச் சொல்லும் தொடராக இருக்காது இது. என்னுடைய வாழ்வின் அனுபவப் பிழிவாகவே இருக்கும். இடையிடையே எனது சில சவால்கள், வெற்றிகள், ஏமாற்றங்கள், திருப்பங்கள், முன்னேற்றங்கள் எல்லாமே நிச்சயம் இருக்கும். அதற்கு உதவியவர்கள் பற்றியும் இருக்கும். 

இனி இந்த தொடரில் வரும் காட்சிகள் பாம்பேயில். எந்தன் அப்பாவின் மூத்த சகோதரி சரோஜா அத்தை வெகு ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆகி பாம்பே போய் செட்டில் ஆகி விட்டார். அத்திம்பேர் வேத நாராயணன் அவர்கள் (மஹா மஹா உபாத்யாய் நரசிம்ம சாஸ்திரி அவர்களின் மகன் - இவரும் பெயருக்கு ஏற்ப சிறந்த வேத வித்து - ஆங்கிலம், தமிழ், சமஸ்க்ரிதம், ஹிந்தி ஓரளவு மராத்தி என்று பன்மொழி வித்தகர்) மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் அக்கௌன்ட்ஸ் தலைமை அதிகாரியாக இருந்தார். ஒரே மகள் திருமணம் செய்து கொடுத்து விட்டார். ஒரே மகன் (எனக்கு பள்ளிக்காலத்தில் பெட்டி நிறைய நிஜார் சட்டைகள் கொடுத்தவர்) சேகர் அங்கே பட்டப்படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் விற்பனைத் துறை அதிகாரியாக இருந்தார். அவர்கள் நகரத்தின் முக்கிய பகுதியில் வசித்து வந்தனர். வாடகை வீடு தான். தடுப்பு வைக்கப்பட்ட ஒரு பெரிய ஹால், கிச்சன், குளியலறை, டாய்லெட், மற்றும் பால்கனி. 

அவர்கள் வீடு மிகவும் சிறப்பாக இன்டீரியர் செய்யப்பட்ட வீடு. ஹாலில் பார்த்தால் ஒரு மர அலமாரி கதவு போல இருக்கும். அதை கீழே இழுத்தால் எளிதாக நான்கைந்து அமரும் டைனிங் டேபிள். அதே போல பால்கனி முழுவதும் வுட் ஒர்க். முகம் பார்க்கும் கண்ணாடியே திறந்தால் மருந்து அலமாரியாக இருக்கும். அதில் எனக்கு ஒரு ரீடிங் டேபிள் தரப்பட்டது.

அப்போது என் அப்பாவின் சித்தப்பா மகன்கள் சேகர் மற்றும் சாய் இருவரும் கூட அங்கே செம்பூரில் வேலை பார்த்து வந்தனர். 

முதல் வேலை என்னுடைய பயோ டேட்டா தயாரிக்க சேகர் உதவினார். என்ன இருக்கிறது பயோ டேட்டாவில் போட. இதற்கு முன்பு அப்படி ஒன்று தயாரித்ததும் இல்லை.  அடுத்த மூன்று நாட்களில் (மே 4 1979) எனக்கு வேலை கிடைத்தது. டிகிரி படித்த சான்றிதழ் கைவரவில்லை. ஹிந்தி பேசத் தெரியாது. டைப் ரைட்டிங் ஹையர் வரை என்பது ஒன்றே நல்ல விஷயம். முன் அனுபவம் கிடையாது. என்னுடைய சித்தப்பா சாய் செம்பூரில் இருந்த ராஷ்ட்ரிய கெமிக்கல் அண்ட் பெர்டிலைசர் நிறுவனத்தின் காண்ட்ராக்டர் கம்பெனி பி எச் இ எல் நிறுவனத்தின் சைட் ஆபிசில் அக்கௌன்டன்ட் ஆக இருந்த படியால் என்னை உடனடியாக அவரின் மேலதிகாரியுடன் (சந்தானம், அக்கௌன்ட்ஸ் மானேஜர்) பேசி டைப்பிஸ்ட் கம் கிளெர்க் என்ற வேலையில் உட்கார்த்தி வைத்தார். ஒரு நாளைக்கு ரூபாய் 25 சம்பளம். வாரா வாரம் சனிக்கிழமை நானே எனது பில் டைப் செய்து கொடுத்தால் கைமேல் காசு. அப்பா வந்த வேலை முடிந்தது என்று நான்கைந்து நாட்களில் கிளம்பினார். ஆனால் அத்திம்பேரிடம் "இவனை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும். இந்த களிமண்ணை நல்ல சிலையாக மாற்றுவது உங்கள் பொறுப்பு, உங்களுக்கும் தண்ணி காட்டிடப் போறான்" என்று நிறைய முன்னோட்டங்கள் சொல்லி வைத்தார். ஆனால் அத்திம்பேர் எந்த ஒரு ஜட்ஜ்மென்டும் இல்லாமல் இருந்தது மிகவும் ஆறுதலாக இருந்தது. 

"இங்கே எங்களுக்கு நீ எந்த பணமும் தர வேண்டாம், உனது செலவுக்கு கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டு அம்மாவுக்கு கொஞ்சம் அனுப்பு" என்று எனக்கு சில யோசனைகள் தந்தார் அத்திம்பேர். அத்தை பையன் சேகர் என்னை தாதர் கடைக்கு கூட்டிக் கொண்டு போய் சில பாண்ட் ஷர்ட் வாங்கிக் கொடுத்தான். ஷர்ட் எப்படி பேண்டுக்குள் இன்ஸெர்ட் செய்ய வேண்டும் என்று அவன் தான் சொல்லிக் கொடுத்தான். நிறைய விஷயங்களில் எனக்கு குரு அவன் தான். அதற்கு முன்பு என்னுடைய சித்தப்பா கிருஷ்ணமூர்த்தி எப்படி டிப் டாப்பாக ட்ரெஸ் செய்வார் என்று பார்த்திருக்கிறேன்.

பின்னாளில் அத்தை வீட்டில் நான் கற்றுக்கொண்ட நிறைய விஷயங்கள் என்னை முற்றிலுமாக புரட்டிப் போட்டன நல்ல விதத்தில். நிச்சயம் அந்த விஷயங்களை இங்கே பிறகு பகிருவேன்.

அத்தை வீடு சயான் மேற்கு - ஜெயின் சொசைட்டி. அங்கிருந்து ஒரு ஐந்து நிமிடம் நடந்தால் பஸ் ஸ்டாப். செம்பூருக்கு நேரடி பஸ். ஆனால் எல்லாமே புரியாத மொழியில் எழுதப் பட்டு இருக்கும். மாடி பஸ். தினம் தினம் அதே பஸ் என்பதால், கண்டக்டர் என்னைக் கேட்காமலே டிக்கெட் கிழித்துக் கொடுக்க ஆரம்பித்தார். செம்பூர் பஸ் ஸ்டாப் அருகே சாய் அவர் அண்ணனுடன் இருந்தார். அவர் வீட்டுக்கு போனால் அவர் என்னை பேக்டரிக்கு ஸ்கூட்டரில் கூட்டிப் போவார். வேலை ஒன்றும் பெரிதாக இருக்காது. தினம் சிலபல கடிதங்கள் டைப் செய்ய வேண்டும். சில நேரம் சில பில். மற்றபடி சும்மா இருக்கும் நேரத்தில் அக்கௌன்ட்ஸ் கொஞ்சம் கற்றுக்கொள் என்று அனுமதி தந்தார் சந்தானம் சார். பைல்ஸில் பேப்பர் சில தேதி வாரியாக அடுக்க வேண்டும். இப்படி அடிப்படை வேலை மட்டுமே. சில நாட்கள் பஸ் ஸ்டாப்பில் நிற்கும் சில இளைஞர்கள் போல நானும் ஓடிப்போய் மோஷனில் பஸ் ஏற முயற்சிக்கும் போது அந்த கண்டக்டர் அண்ணா இதெல்லாம் உனக்கு வேண்டாம். உள்ளே போய் அமைதியாக உட்காரு என்றார்.

தங்க, திங்க செலவில்லை. செம்பூர் வேலை முடிந்ததுமே மாலை நேரக்கல்லூரி (மாதுங்கா போதார் காலேஜில் )  மகாராஷ்டிரா அரசு வழங்கக் கூடிய டிப்ளமோ இன் காமெர்ஸ் சேர்ந்தேன். டி காம் என்று அழைக்கப்பட்ட படிப்பு. ஓராண்டு படிப்பு. அக்கௌன்ட்ஸ், பிசினஸ் மாக்ஸ், காமெர்ஸ், ஆங்கிலம் என்று மொத்தம் ஆறு பேப்பர்கள். (நான் தான் ஆடிட்டர் ஆகும் இலக்கு வைத்து இருந்தேனே). இந்த படிப்புக்கு டிகிரி சான்று தேவை இல்லை. அந்த ரிசல்ட் மற்றும் டிகிரி சான்று தான் வரவில்லையே.  மிகவும் கவனத்தோடு படித்தேன். அந்தக் கல்லூரி ஆங்கில பேராசிரியருக்கு (வயதில் நல்ல மூத்தவர்) என்னை மிகவும் பிடித்துப் போனது. வாரக் கடைசிகளில் ஆங்கில தேர்வு தாள்களை திருத்தும் பணி அடிக்கடி தர ஆரம்பித்தார். அதற்கு தனியாக பணம் உண்டு. சாரதா பள்ளியில் இருந்த அந்த ஆரம்ப நாள் விருப்பம் மற்றும் உற்சாகம்  படிப்பில் வருவது போல எனக்குத் தோன்றியது. பாலு சார் மற்றும் ரகோத்தமன் சார் குளித்தலையில் தந்த அந்த ஆங்கில அறிவு உதவிக்கு வந்தது. மிகவும் நல்ல மதிப்பெண் எடுத்து என்னுடைய பேட்சில் இரண்டாவது ரேங்க் எடுத்தேன். அதற்காக எனக்கு கேஷ் ப்ரைஸ் வேறு கொடுத்தார்கள். ஒரு விக்கெட் எடுத்த அஷ்வின் அடுத்த அடுத்த விக்கெட் முயற்சி செய்வாரே அப்படி தோன்ற ஆரம்பித்தது எனக்கு. 

இங்கே ஒரு சின்ன பிளாஷ் பாக். நடுவில் தீபாவளி வந்தது. அதற்கு முன்பே எனது ரிசல்ட் வந்தது. பைனல் இயரில் ஐந்து பேப்பரில் ஒரு பேப்பரில் (நான் மிகவும் சிறப்பாக எழுதிய ஒரு பேப்பர்) எனக்கு 36 மார்க் வந்தது. இன்னொரு பேப்பரில் பெயில். அந்த 36 மார்க்குக்கு மீண்டும் டோடல் செய்ய அப்ளை செய்தேன் எனது கசின் மூலம் அது அப்படியே திரும்பி 63 ஆனது. அடடா இப்படியும் கூட நடக்குமா? மற்றொரு பேப்பர் மிகச் சரியாக தீபாவளி சமயத்தில் வந்ததால் யாருக்குமே தெரியாமல் சைலன்ட் ஆக எழுதி விட்டு மீண்டும் ஊருக்கு கிளம்பினேன். பிறகு நல்ல மார்க் தான். ஆனால் மொத்தத்தில் 58.5% தான். நமக்கு முதல் வகுப்பு ரயில் உண்டு, ஆனால் முதல் வகுப்பு சான்றிதழ் இல்லை போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

மும்பையில் எனது மாலைக் கல்லூரிக்கு பின்னால் தான் அத்தை பெண் பிரேமா அக்கா வீடு. சில நேரம் அங்கே போவேன். குடிக்க காபி, அல்லது அடை ஏதாவது நிச்சயம் தருவார். சில நேரம் அத்தை கொடுப்பதை கொண்டு அங்கே கொடுத்து வர போவதும் உண்டு.

ஹிந்தி எழுத படிக்க வருமே ஒழிய பேச வரவில்லை. அத்தை கீழே போய் பால் வாங்கி வா என்றார். சைக்கிளில் பால் விற்பவன் வந்திருந்தான். அத்தை சொன்னதை அப்படியே சொன்னேன். அவன் பதிலுக்கு ஏதோ சொன்னானோ கேட்டானோ, நான் "மராத்தி நஹி மாலும், ஹிந்தி மே போலோ" என்றேன் - (மராத்தி தெரியாது, ஹிந்தியில் சொல்லுங்கள் என்று). சரியான மூக்கடைப்பு நடந்தது முதல் முறையாக. அவன் சொன்னான் "ஏ சாலா ஹம் தோ ஹிந்தி மே ஹி பாத் கியா" (நான் ஹிந்தி தாண்டா சொன்னேன் வெண்ண என்றான்). நல்ல பல்ப் வாங்கி வந்து அத்தையிடம் சொன்னேன். அத்தை 'நான் வந்த புதுசுல இப்படித்தான் ஹிந்தி  பேசுவேன். நீயும் கத்துப்பே கவலைப்படாதே' என்றார். 

ஒரு முறை மெயின் ரோடு தாண்டி கனி நாடார் ஸ்டார் போய் தக்காளி வாங்கி வரச் சொன்னார். அங்கே கடையில் "அய்யருக்கு தேங்கா எடு" என்று பேசுகிற ஆட்கள் இருந்தனர். சில லோக்கல் ஆட்களும் இருந்தனர். எனக்கு மாட்டியது அந்த நபர்கள் தான். நான் ஒன்று கேட்க அவன் ஒன்று கொடுக்க (அவன் தக்காளி சாஸ் கொடுத்தான்). அத்தை எனக்கு சரியான மொக்கை கொடுத்து திரும்ப கடைக்கு போய் மாற்றி வரச் செய்தார்.

இப்போது ஓராண்டு டைப்பிஸ்ட் வேலை முடிந்தது. அப்போது அத்திம்பேருடைய நண்பர் ஆடிட்டர் ராத்தியிடம்  (குஜராத்திக்காரர்) பேசி எனக்கு அக்கௌண்ட்ஸ் கிளெர்க் வேலை ஏற்பாடு செய்தார். அந்த நிறுவனம் அலுமினிய கண்டக்டர் செய்யும் பேக்டரி - அவர்கள் மின்சார வாரியத்திற்கு சப்ளை செய்யக் கூடிய வியாபாரம் செய்தனர். அவர்கள் நிறுவனம் கோரேகாவ் எனும் இடத்தில் இருந்தது. இப்போது நான் வீட்டருகே ஒரு ரயில் பிடித்து பாந்திரா ஸ்டேஷன் வரை ஹார்பர் லைனில் சென்று பிறகு பிளாட்பாரம் மாறி வேறு வெஸ்டர்ன் ரயில் பிடித்து போக வேண்டும். வீடு திரும்பவும் அப்படித்தான். நான் பெரும்பாலும் மக்கள் செல்லும் எதிர் திசையில் செல்ல நேர்ந்ததால் ரயில் நெரிசல் அவ்வளவாக இருக்காது. 
இந்த நிறுவனம் எனக்கு கொடுத்தது தான் மிகப்பெரிய படிப்பும் அனுபவமும். யப்பா மறக்க முடியாது. ஓனரின் ஒரு மார்வாடி. பிரமோத் தாபடியா. அவர் எப்போதாவது தான் வருவார். அவரின் தம்பி சோட்டு (உண்மையான பெயர் தெரியாது) தான் பேக்டரி பார்த்துக் கொள்ளுவார்.

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும். 

No comments:

Post a Comment