Wednesday, July 28, 2021

நீங்கா நினைவலைகள் - 34 (இது நிறைவுப் பகுதி)

 நீங்கா நினைவலைகள் - 34 (இது நிறைவுப் பகுதி)

- பாலசாண்டில்யன் 

"இனி யார்க்கும் இங்கே அடிமை செய்யோம்" என்றெல்லாம் ஜம்பம் பேசும் விஷயம் அல்ல சொந்தக் காலில் நிற்பது என்பது. அது ஒரு முட்கள் நிறைந்த பாதை. ரோஜாக்கள் நிறைந்த பாதை அல்ல என்று இறங்கி நடந்த பொழுது நிச்சயம் புரிய ஆரம்பித்தது. தேதி ஒன்று ஆனால் சம்பளம் வந்து வங்கிக் கணக்கில் விழுவதில்லை. நானே ராஜா, நானே மந்திரி. பலரை தொடர்பு கொண்டு, பலருக்கு மெயில் அனுப்பி, பலரை நேரில் சந்தித்து, படைகள் பல எடுத்து, புதிய எனது ப்ரொபைல் அனுப்பி பிறகு அங்கொன்று இங்கொன்றுமாக சில பயிற்சி வகுப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. வணிகத்தை முகர்ந்து, உண்டு, உறங்கி சதா சர்வகாலமும் அது பற்றியே சிந்தித்தால் மட்டுமே வெற்றி. இருப்பினும் நான் ஒருக்காலும் அந்த அஃக்ரெஸிவ் மார்க்கெட்டிங் செய்யவில்லை. வந்த வணிகம் எல்லாமே ரெபரல் மற்றும் குட்வில் சார்ந்தே இருந்தன. 

எல்லோரும் முட்டி மோதும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் மார்க்கெட்டை நான் தேர்வு செய்யவில்லை. கல்லூரி ஆசிரியர்கள், பெரிய பிசினெஸ் ஸ்கூல்ஸ், மற்றபடி கார்பொரேட் நிறுவனங்கள் தான் எனது இலக்கு என்று முடிவு செய்து இயங்கத் தொடங்கினேன். இருந்தாலும் எப்போதும் அழைக்கும் எம் ஓ பி கல்லூரிக்கு (டாக்டர் லலிதா பாலகிருஷ்ணன் அழைப்பை ஏற்று) அடிக்கடி சென்றேன். 

டி ஜி வைணவ கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, ராஜலட்சுமி கல்லூரி, மேல்மருவத்தூர் கல்லூரி,  இங்கெல்லாம் என்னை முதல் நாள் மாணவர்களுக்கு ஓரியன்டேஷன் ஸ்பீச் கொடுக்க அழைத்தார்கள். 

ஒவ்வொரு சமயமும் என் கண் முன்னே ஒருவரை இறைவன் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினான். (உலகுக்கு படி அளக்கும் பகவான் அல்லவா? நான் பரிபூரணமாக நம்பி என்னை அவனிடம் ஒப்படைத்து தான் இந்த சுய தொழிலில் இறங்கினேன்). முதலில் அவர் எனக்கு காட்டியது நண்பர் சிதம்பரம் அவர்கள். அவர்கள் மிகப்பெரிய காற்றாலை ஒன்றில் பெரிய பதவியில் இருந்தார். அவர் நிறுவனத்தின் பல நிலைகளில் உள்ள ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு. 

நடுநடுவே கிரிதர் அவர்களுடன் அவர் பயிற்சி செய்த போத்தீஸ் நிறுவனத்தின் பயிற்சிகளில் (சென்னை, மதுரை, திருநெல்வேலி, பாண்டி, பொள்ளாச்சி என்று பல ஊர்களில்)  என்னை எப்போதும் இணைத்துக் கொண்டார். அங்கே நான் நிறைய நபர்களை கையாள்வது, பல விளையாட்டுக்களை எப்படி பயிற்சியில் சேர்ப்பது என்று பல யுக்திகளை கற்றுக் கொண்டேன். அவை எனக்கு சரியான அடித்தளமாக அமைந்தது. போத்தீஸ் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இங்கே நன்றி சொல்ல வேண்டும். 

பிறகு நண்பர் கிருஷ்ண வரதராஜன் (கே வி) என்னை சிதம்பரம் அழைத்துச் சென்று அவருடைய முக்கிய கிளையண்ட் 'கஸ்தூரிபாய் நிறுவனத்தை' (முத்துக்குமார் சார் மற்றும் ஸ்ரீவித்யா மேடம் நடத்தும் நிறுவனம்) என்னிடம் ஒப்படைத்தார். பிறகு வருடம் குறைந்தது மூன்று முறை சிதம்பரம் சென்றேன். இன்னும் தொடர்கிறது அவர்களின் நல்ல நட்பு மற்றும் ஆதரவு. இந்த பதிவின் மூலம் கே வி அவர்களுக்கு 'நன்றி' என்று சொல்லி மகிழ்கிறேன். 

இதற்கிடையில் நண்பர் உதயசான்றோன் மூலம் இந்தியாவின் 21 மாநிலங்களில் (O & M in Thermal Power Plants) தொழிலை வெற்றிகரமாக செய்து வரும் நிறுவனத்தின் ஜி எம் திரு முத்துக்குமார் மற்றும் இயக்குனர் ராமு மற்றும் எம் டி திரு செந்தில் இவர்களின் அறிமுகம் ஏற்படுத்தினார். பிறகு நான்  உதயா, கிரிதர் மூவரும் முதல் சில பயிற்சிகள் ஒடிசா சென்று நடத்தினோம். 

பிறகு தொடங்கியது எங்கள் பயணம். ஒடிசா, மஹாராஷ்ட்ரா, ஹரியானா, எம் பி, ஜார்கண்ட், என நாங்கள் தமிழில் ஹிந்தியில் என்று பற்பல பயிற்சிகள் செய்தோம். அதில் நான், உதயா, சுரேகா, சந்திரமோகன் எல்லோரும் இருந்தோம். (லாஞ்சிகர், பீர்சிங்க்பூர், பானிபட், கோர்பா, பாரதீப் போர்ட், கட்டாக், புவனேஷ்வர், ரத்னகிரி, நாக்பூர், ஆனந்தவன், ஜார்சகுடா, சம்பல்பூர், ஹீராகுட் இங்கெல்லாம் சென்ற விஷயங்களை தனியாக விவரமாக எழுதினால் அது பயணக்கட்டுரையாக மாறி விடும் - ஒவ்வொரு இடத்திலும் அப்படி ஓர் அனுபவம்)

பிறகு உதயாவுடன் கார் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனம் இன்சூரன்ஸ் நிறுவனம் என்று ஏகப்பட்ட பயிற்சிகள் செய்தேன். அவர் ஒரு எனர்ஜி பால். யாருக்கும் தொற்றிக் கொள்ளும் அவர் எனர்ஜி.

பல நாள் நண்பர் கிரி டிரேடிங் ரங்கநாதன் அவர்களின் கிரி டிரேடிங் நிறுவனத்தின் அனைத்து கிளைகளின் ஊழியர்களுக்கும் பயிற்சி தரும் வாய்ப்பை அளித்தார். உடன் சுரேகா இருந்தார். 

சீ சேன்ஜ் நிறுவனம், எஸ் ஆர் எம் நிறுவனம் இணைந்து 18 டிரைனர்கள் கொண்டு சாதனையாக 24 மணி நேரம் தொடர் பயிற்சி ஒன்றை நடத்தினர்.  அந்த 18 பேரில் என்னையும் சேர்த்துக் கொண்டது உயர்திரு பிரகாஷ் சேஷாத்திரி மற்றும் எம் கே ஆனந்த் அவர்கள். நிச்சயம் மறக்க முடியாத நிகழ்வு அது. 

எனது உற்ற நண்பர்கள் திரு எதிராஜன் மற்றும் ஜி ஈ குழுமத்தில் பணி புரிந்த ஸ்ரீனிவாசன் இருவரும் பல நல்ல வாய்ப்புகளை தத்தம் நிறுவனங்களில் உருவாக்கித் தந்தனர். அவர்களை எப்படி மறக்க முடியும்?

பின்னர் ஒரு நாள் மிகப்பெரிய டர்ன் அரௌண்ட் கன்சல்டன்ட் டாக்டர் மேகநாதன் மூலம் பல பயிற்சிகள், (தவிர அவர் எங்களுக்கு செய்து கொடுத்த பப்ளிக் ப்ரோக்ராம் மறக்க முடியாது, அவர் நிறுவனத்தில் என்னையும் ஆலோசகராக இணைத்துக் கொண்டது அவரது பெரிய மனது). மகினோ நிறுவனத்தின் ராம்கி மூலம் பல தொடர் பயிற்சிகள், ஒரு நிமிட சந்திப்பில் ஏற்பட்ட அற்புதம் மூலம் திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர் நிறுவனத்தில் தொடர் பயிற்சிகள் செய்யச் சொன்னார். திரு ராகேஷ் கந்தன் மூலம் சில பயிற்சிகள், என் எல் பி ராமசுப்பிரமணியன் மூலம் சில பயிற்சிகள் என்று நடந்தன. டாக்டர் மேகநாதன், முரளி ஸ்ரீனிவாசன், கிரி டிரேடிங் ரங்கநாதன், சிதம்பரம் போன்றோர் விஷன் அன்லிமிடெட் ஆண்டு விழாக்களில் தவறாது கலந்து கொண்டு தமது ஆதரவைத் தந்துள்ளது மிகப் பெரிய மகிழ்ச்சி. 

பிறகு கிரிதரன் அவர்களின் நண்பர் திரு பஷீர் மூலம் தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்யும் வண்ணம் பல மாபெரும் நிறுவனங்களுக்கு, ஓரிரு தனியார் வங்கிகளுக்கு  பெரிய அளவில் பயிற்சிகள் நடந்தன. சில பயிற்சிகள் நண்பர் ராஜ் பிரபாகர் மூலமும் நடந்தன.

அதைத் தொடர்ந்து எங்கிருந்தோ வந்தார் லீன் துரைசாமி சார். அவர் மூலம் ஓயாது சென்றேன் ஓசூர். பற்பல நிகழ்ச்சிகள். சொல்லொணா அனுபவங்கள். பிறகு அவர் மூலமே நாக்பூர் சென்றேன். சுமார் 4000 பேருக்கு நடந்து இருக்கும் அப்படியான பயிற்சிகள். 

அதன் பின் என்னைத் தேடிக் கண்டுபிடித்து அருமையான வாய்ப்புகள் வழங்கியது கோவை (டெஸ்ட்டைல் மில்ஸ் அமைப்பின்) திரு பிரபு சார். பல முறை அங்கு சென்றேன்.

பாரிஸ் கார்னர் திரு இளங்கோவன் மூலம் சில நிகழ்ச்சிகள் என்று தொடர்ந்தது.

சகோதரி போல என் மீது பாசம் காட்டும் திருமதி பத்மஜா அவர்கள் மூலம் நல்ல ப்ரொஜெக்ட்ஸ் செய்து இருக்கிறேன்.

எனது நண்பர், ஆலோசகர், வழிகாட்டி, குடும்ப நண்பர் திரு பஞ்சாபகேசன் அவர்கள் நெறிமுறையில் மிகப்பெரிய வங்கியில் பயிற்சித் தொடரைப் பெற்றுத் தந்து அது இன்னும் நல்லபடி தொடர்கிறது. எனது நலம் விரும்பிகளில் முக்கியமானவர் அவர். 

இப்படி (சரியான கணக்கில் வைத்துக் கொள்ளவிடினும்) டோர்மேன் டு சேர்மேன் வரை பற்பல பயிற்சிகள் மூலம் நிச்சயம் 2 லட்சம் பேரைச் சந்தித்து பயிற்சி வழங்கி இருப்பேன் (தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில்). இங்கே சிலரின் உதவிகள் மற்றும் தொடர்புகள் விட்டுப் போய் இருக்கலாம். தயை கூர்ந்து மன்னிக்கவும். நினைவு தவறி இருக்கலாம் என்று நினைத்து விட்டு விடுங்கள். 

தவிர, எங்கள் பயிற்சி வகுப்புகளில் யோகா தேவையெனில் ஷிவ் ரிஷி (என் கே டி ஜெயகோபால்) அவர்களும் சிரிப்பு யோகா என்றால் ஹாஹோ சிரிப்பானந்தா அவர்களும் உதவி செய்து இருக்கிறார்கள். எங்கள் டீமில் உதயா, சந்திரமோகன், ப்ரஸன்னா, அஷ்ரப், டாக்டர் மகிமை, திரு ராமசுப்பிரமணியன், முருகபாரதி, சித்ரா, அமுதா மதிழகன், என்று பலர் உதவி இருந்தாலும் எப்போதும் நிலைய வித்வானாக இருப்பவர் டாக்டர் ஆறுமுகம் அவர்கள் தான். 

நிறைய ரிஸ்க் எடுத்து பப்ளிக் ப்ரோக்ராம் செய்து சில முறை லாபம், பல முறை கை கடிக்கும் அனுபவங்கள் பெற்றோம். அதனால் அந்த முயற்சியை கை விட்டோம். 

கவுன்செலிங் (அப்பாய்ன்ட்மென்ட் மூலம்) சுமார் 300 பேருக்கும் மேலாக மனநலம் சார்ந்த உதவிகள் செய்து தற்கொலை, காதல் தோல்விகள், விவாக ரத்து இவற்றில் இருந்து காத்து உதவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் தொழில் தொடங்கும் ஆலோசனைகளும் உண்டு. 

அப்படி 'தினமலர்' நாளிதழ் என்னை அவர்களின் 'வழிகாட்டி' நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் முன்பு கல்வி ஆலோசனை வழங்கும் வாய்ப்பினை அளித்தனர். அதே போல 'கல்வி மலரில்' எனது தொடர் கட்டுரைகளை பிரசுரித்து ஊக்குவித்தனர். அதற்கு குறிப்பாக கல்பலதா மேடம் மற்றும் சதீஷ் அவர்களை இங்கே நினைவு கூறுகிறேன்.

விஷன் நிறுவனத்தின் ஆடிட்டர் திரு என் ஆர் கே, KVB வங்கி, என் மனைவி மற்றும் இரு மகள்கள், பல நல்ல உள்ளங்கள் இவர்களால் தான் தொடர்கிறது இந்த சுயதொழில் நிறுவனம். செப்டம்பர் 21, 2021 அன்று சரியாக 13 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது விஷன் அன்லிமிடெட்.  பல ஆண்டுகள் ஆண்டு விழாக்களை சிறப்பான முறையில் நடத்தி தொடர்புடைய பலரையும்  கௌரவித்து மகிழ்ந்துள்ளோம். 

இன்னும் தொடரும் இந்த பயணத்தில், கடந்த தூரம் மிகக் குறைவு, கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம் (Miles to go before I sleep - so little done, so much to do). இறைவன் சித்தம் இருந்தால் மேலும் நிறைய செய்வேன். 

நெஞ்சைத் தொட்ட நினைவலைகள் ஓய்வதில்லை. 

தொடரும் தங்கள் ஆசிகளுடன். இது நாள் வரை தினம் தினம் முகநூல் மற்றும் ப்ளோக் வழியாக ஆதரித்த பல நல்ல உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை இங்கே சமர்ப்பித்து நெகிழ்கிறேன்.

1 comment:

  1. திரு பால சாண்டிலியன் அவர்கள் நீங்கா நினைவுகள் என்ற நெடுந்தொடர் மூலம் தன் வாழ்வில் பயணப்பட்டு அனுபவங்களை அற்புதமாக வழங்கியிருக்கிறார். தான் கடந்து வந்த பாதையை எழுதுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.. அதுமட்டுமல்ல ஒரு 50 ஆண்டுக்கு மேலான அனுபவத்தை ஒரு 36 கட்டுரைக்குள் எழுதுவதென்பது மிகவும் சவாலான பணி அதை மிக நிறைவாகவே செய்திருக்கிறார்... படிப்பவர்களுக்கு திரு பால சாண்டில்யன் அவர்களைப்பற்றிய புரிதல் இன்னும் அதிகமாகும் என்பது மட்டும் திண்ணம்... வாழ்க்கை என்ற பயணத்தில் பல மனிதர்களை சந்திக்கின்றோம் ஆனால் சந்திக்கின்ற மனிதர்கள் ஏதோ ஒரு விதத்தில் ஒரு அனுபவத்தை நமக்கு விட்டுதான் செல்கிறார்கள்..... திரு பாலா அவர்களுடன் பல பயிற்சி வகுப்புகள் இணைந்து பணியாற்றிய அந்த அனுபவம் ஒரு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும் நிச்சயம் பொற்காலத்தை தாண்டி அதிஅற்புதமான நாட்கள் திரும்பும் அதற்கு இறைவன் அருள் செல்வார் மீண்டும் கொரானா அலை முடிந்த பிறகு பல்வேறு ப்ராஜெக்ட் மூலம் திரும்ப அவருடன் இணைந்து பணியாற்ற நானும் தயாராகத்தான் இருக்கிறேன்... குழந்தை மனம் படைத்தவர் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்... எதையும் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்துவிடக் கூடியவர், உண்மையானவர்... அவர் வருங்காலங்களில் இன்னும் பல உயரங்களை தொடுவார் இந்த கட்டுரையை படித்த நண்பர்களுக்கு நான் வேண்டுகோள் வைப்பது என்னவென்றால் பாலா போன்ற அவர் நிறுவனம் நடத்தக்கூடிய பயிற்சிகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மனிதன் இருக்கும் போது அருமை தெரிவதில்லை எங்கேயோ எங்கேயோ பல லட்சங்கள் கொடுத்து பயிற்சியாளர்களை நாம் பயன்படுத்துகிறோம் மிக அற்புதமான மாற்றத்தை தரக்கூடிய விஷயங்களை செய்யக்கூடிய பயிற்சிகள் நடத்தக்கூடிய விஷன் அன்லிமிட்டட் போன்ற நிறுவனங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உரிமையாக கேட்டுக்கொள்கின்றேன்... மறக்காமல் இந்த கட்டுரைகள் என்னையும் பயிற்சி அனுபவத்தையும் நன்றியோடு நினைவு படுத்திய திரு பால சாண்டில்யன் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் அவரும் அவர் குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு புகழோடு செல்வ வளத்தோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்...
    பேரன்புடன்...
    உதயசான்றோன்
    உலக சாதனை படைத்த சர்வதேச பயிற்றுநர்.

    ReplyDelete