Wednesday, July 21, 2021

நீங்கா நினைவலைகள் - 27

 நீங்கா நினைவலைகள் - 27

- பாலசாண்டில்யன் 

மகளிருவரும் எங்கள் மீது செலுத்துகிற ஆளுமையை ஒரு நாளில் சொல்லி முடிக்க இயலவில்லை. எனவே இன்றும் சற்று தொடர்கிறது. 

எனது மனைவி சுகீர்த்தியின் பாரம்பரிய   சமையல் இவர்கள் இருவரால் சில சமயம் நார்த் இந்தியன், சைனீஸ் என்று கூட மாறியது. முடிகொண்டான் சுகீர்த்தி ஒரு சகல கலா கிச்சன் மாஸ்டர் என்று ஆனது நல்ல சுவாரசியமான கதை. 

 

இத்தோடு நிற்கவில்லை இவர்கள் ஊடுருவல். எனது ஆபீஸ் உடைகள், பயிற்சி நேரத்தில் அணிய வேண்டிய உடைகள், வெளியே செல்லும் போது அணிந்து கொள்ள வேண்டிய உடைகள் என்று என்னை ஒரு புதிய பேஷன் உலகிற்குள் அழைத்துச் சென்றது இரண்டு மகள்களும் தான். பிளைன் மற்றும் கோடு போட்ட சட்டைகளை ஓரம் கட்டி என்னைப் பூ போட்ட சட்டைக்காரன் ஆக்கியது அவர்களே.  அதே போல ஹோட்டல் என்றால் எனக்கும் எனது மனைவிக்கும் 'சரவணபவன்' தவிர வேறு எதுவும் தெரியாது. ஆனால் இப்போது இத்தாலியன், பஞ்சாபி, நார்த் இந்தியன், தாபா உணவகம் என்று எங்களை இருவரும் அழைத்துப் போகாத இடமே இல்லை எனலாம். 

 

மொபைல் ஆப் மூலம் டிவி போடுவது, அணைப்பது என்று எங்கள் உலகை அவர்கள் நிறையவே மாற்றி விட்டார்கள். ஓ டீ டீ மூலம் நாங்கள் பல மொழிகளில் வருகிற சிறந்த படங்கள், வெப் சீரிஸ் என பார்க்க வைத்துள்ளார்கள். 

 

நாங்கள் கேட்கும் புதிய பாடல்கள் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என்று எல்லாமே அவர்களின் அறிமுகம் தான். ஹரிஹரன், பிரதீப், அர்ஜீத் சிங், பாம்பே ஜெயஸ்ரீ, டி எம் கிருஷ்ணா, சித் ஸ்ரீராம், சான் ரோல்டன் இவர்களின் பாடல்கள் எப்போதும் ஒலிக்கும்  எங்கள் வீட்டில். 

 

நகைச்சுவை செய்வதிலும் இருவருமே ரொம்ப அலாதி தான். சில சமயம் எனது மனைவிக்கு சற்று உடற்சோர்வு சின்ன கம்பிளைன்ட் என்று சமையல் ஓரிரு நாட்கள் நடக்கவில்லை. அப்போது சுகிக்கு தானே உடம்பு சரியில்லை. 'ஸ்விக்கி" இருக்கிறதே என்று போனில் ஆர்டர் செய்து தவிப்பை அடக்குவர்.

 

இரண்டு பேருமே புதிய பல ரெசிபிக்கள் செய்து அவ்வப்போது செய்து தமது குக்கிங் திறமையைக் காட்டி அசத்துவார்கள். 

 

அவர்கள் நண்பர்களின் இல்ல விசேஷங்களின் அழைப்பிதழ் இவர்கள் இருவரில் ஒருவர் டிசைன் செய்ததாக இருக்கும். எனது சுமார் ஐந்து நூல்களுக்கு எனது மகள்கள் செய்த டிசைன் தான் அட்டைப்படம்.


இப்போது நான் வாங்கி இருக்கும் விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வைக்க எங்கள் வீட்டு அலமாரியில் இடமில்லை. ஏன் என்றால் அந்த இடம் அவர்களின் விருதுகள் அடுக்கும் இடமாக மாறி விட்டன.

 

ஓராண்டு வேலைக்கு போய் விட்டு, திடீரென நான் எச்ஆர் சம்பந்தமான மேற்படிப்பு படிக்கிறேன் என்றாள் இளையவள்.  இரண்டு ஆண்டு தானே அப்பா, அவள் படித்து மிகப்பெரிய வேலைக்கு வந்து விடுவாள். என்ன செலவாகும் என்று பயப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று என்னை தைரியப்படுத்தியவள்,  ஒரு நாள் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பார்க்கில் நாங்கள் நால்வரும் வாக்கிங் போகும் பொழுது, என்னிடம் மூத்த மகள் சுபாஷிணி சொன்னாள், " அப்பா நீ எவ்வளவு நாள் தான் உழைப்பாய், உனது 18 வயது முதல் நீ வேலைக்கு போகிறாய், இனி ஓய்வு எடுத்துக் கொள், உனக்குப் பிடித்த விஷயங்களை செய், நான் இருக்கிறேன்". அன்று முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை. எனது மனைவியிடம் சொல்லி அழுதேன் (அது ஆனந்தக் கண்ணீர்)

 

கடந்த 2019 எனது இரண்டு மகளுமே சாலை விபத்தில் சிக்கி காலில் பலத்த அடிபட்டுக் கொண்டனர். அதில் திருமணம் ஆகி இருக்கும் எங்கள் மூத்த மகள் சுபாஷிணி மிகப்பெரிய சர்ஜெரி செய்து கொண்டு நடப்பாளா, திருமணம் நடக்குமா என்று பயம் பற்றிக் கொண்ட நிலை. அவர்களுக்காக பிரார்த்தனை செய்யாத நண்பர்கள் உறவினர்கள் இருக்க முடியாது. அந்த நேரத்தில் மிகவும் ஆதரவு தந்த எங்கள் மாப்பிள்ளை, சம்பந்தி மற்றும் எங்கள் மிக நெருங்கிய சொந்தங்களும் நண்பர்களும் தான். ஆகஸ்ட் 2019ல் நடந்த சுபாஷிணி சந்தோஷ் திருமண விழாவில்  விசு சார், இயக்குனர் எஸ்பிஎம் சார், சிவசங்கரி அம்மா, டெல்லி கணேஷ் சார், லேனா தமிழ்வாணன் சகோதரர்கள், நந்தகுமார் IRS, பட்டுக்கோட்டை பிரபாகர் சார், என்று  பல பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆசி வழங்கி நலம் விசாரித்தார்கள்  மிகுந்த அக்கறையோடு.

 

அவர்கள் இருவரும் எங்களின் வரம். நாங்கள் செய்யாத தவம். இன்று நாங்கள் காண்பது புதிய உலகம். அது அவர்கள் கண்கள் வழியாக. 


மீண்டும் பாக் டு ஒரிஜினல் டிராக் :


1992 ல் எங்கள் திருமணம் நடக்கும் போது நான் அந்த லெதர் கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் ஹெட் ஆபீசில் இருந்ததால் எனது திருமணத்திற்கு வெளி நாட்டில் இருந்து எங்கள் 'பையர்' கூட வந்திருந்தனர். என் எம் டி அவர்கள் மாலை ரிசெப்ஷனுக்கு வந்து அவரின் மொய் ஆசியும், எனது ப்ரோமோஷன் லெட்டர் மூலம் மெய் ஆசியும் வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.


தொடர்ந்து அவருடன் சேர்ந்து நான் ஹாங்காங் இன்டர்நேஷனல் லெதர் பேரில் பங்கு பெற மூன்று ஆண்டுகள் செல்லும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 'ஹோட்டல் கிராண்ட் ஹயாத்' போன்ற கனவிலும் எதிர்பாராத ஹோட்டலில் தங்கினேன். திரும்பும் போது சிங்கப்பூரில் ஓரிரு நாட்கள் தங்கி விட்டு வருவதும் உண்டு. அந்த அனுபவங்கள் மறக்க இயலாது. 


ஒரு சம்பவத்தை இங்கே சொல்லியே ஆக வேண்டும். காலையில் பிரெட் மற்றும் காபி சாப்பிட்டு விட்டு எங்கள் ஸ்டாலுக்கு நான் சென்று விடுவேன். ஒரு நாள் மதிய சாப்பாடு ஒரு பிரூட் பௌல் மட்டுமே சாப்பிடுவேன். இரவு உணவு தான் சிறப்பாக இருக்கும். நாங்கள் ஒரு நாள் கூடுதலாக தங்கி இருந்து விட்டு போக முடிவு செய்தோம். சரியாக சாப்பாடு இல்லாததால் எனக்கு தலை சுற்றல் போல இருந்தது. எம் டி நண்பரைப் பார்க்க வெளியே சென்று விட்டார். ரிசப்ஷனுக்கு போன் செய்து 'கால் எ டாக்டர்' கேட்டேன். டாக்டர் லைனில் வந்தார். அவர் எனக்கு என்ன செய்கிறது என்று கேட்டார். தவிர எனது பீஸ் 750 டாலர் ஆகும். அந்த பணம் இருக்கிறதா? என்று கேட்டார். நான் பாக்கெட் மணியாக வைத்து இருந்த 1500 டாலரில் பாதி கரைந்தது ஓரிரு மாத்திரை மற்றும் ஒரு ஊசிக்கு. 


ஐந்து பாக்டரி, நான்கு வெளியில் கொடுத்து வேலை பெறும் பாக்டரி, தவிர அப்போது நாங்கள் லீசுக்கு எடுத்த டானரி வேறு. அதனால் எம் டி இன்னும் ஆட்களை களத்தில் இறக்கினார். என் பால்ய நண்பன் திரு எதிராஜன் எச் ஆர் மற்றும் ஐ ஆர் பார்த்துக் கொள்ள நியமிக்கப்பட்டார். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இருந்து ஓர் அதிகாரி, எம் டி யின் சொந்தத்தில் ஓரிருவர், வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற ஓர் அதிகாரி என்று எங்கள் டீம் பெரிதாகியது. 


மறக்க முடியாதது எம் டி சார் தினமும் சுமார் 11 மணிக்கு தனது மஹராஜிடம் (வீட்டு சமையல் நிபுணர்) இன்று என்ன சாப்பாடு அனுப்ப வேண்டும் என்று சொல்லுவார். சுமார் ஒன்றரை அல்லது இரண்டு மணிக்கு எம் டி, அவர் மகன், நான் மற்றும் இன்னும் ஓரிரண்டு முக்கிய அதிகாரிகள் அனைவருக்கும் அவர் வீட்டில் இருந்து சாப்பாடு வரும். அதில் 'காபூலி' என்று ஒரு புலாவ் போன்ற உணவு, சப்பாத்தி மற்றும் அதற்கேற்ற சைட் டிஷ் என்று ஒரு கட்டு கட்டுவோம். இரவு வீடு கிளம்ப சில நேரம் 9 கூட ஆகி விடும். மாலை சாண்ட்விச், காபி என்று நிச்சயம் இருக்கும். 


சோதனைகள் நிறைந்த காலத்தை நெருங்க ஆரம்பித்தோம். அது பற்றி தனியாகத் தான் பேசியாக வேண்டும். 

 

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

No comments:

Post a Comment