Friday, July 23, 2021

நீங்கா நினைவலைகள் - 29

 நீங்கா நினைவலைகள் - 29

- பாலசாண்டில்யன் 

வழக்கம் போல நான் சாலமன் சார் சொன்ன நேரத்தை விட பத்து நிமிடம் முன்னாலேயே போய் காந்தி சிலை அருகே நின்றேன். அவர் எனக்கும் முன்னால் அங்கே வந்திருந்தார். 'அவர் அப்படித்தான்'. எல்லாவற்றிலும் மிகவும் பெர்பெக்ட். என்னைப் பார்த்ததும் 'வாங்க பாலா, நேரா ஆபிஸில் இருந்து தான் வரீங்களா? உட்கார்ந்து பேசுவோமோ?" என்று அதிகம் ஆட்கள் இல்லாத இடமாக பார்த்து மணலில் அமர்ந்தோம். 

நேராக விஷயத்திற்கு வந்தார். "உங்க கம்பெனி கொஞ்சம் சிரமத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன். நீங்க ஒரு முறை கேட்டது போல உங்களுக்கு எங்க இன்ஸ்டிடியூட்ல ஒரு அருமையான வேலை இருக்கு. அதுவும் என்னோட இடத்துல, நான் உங்களைத் தான் நினைச்சேன். எப்படி உங்க சௌகரியம்" என்று கேட்டு எனது முகத்தைப் பார்த்தார். 

எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை மறைக்க முடியவில்லை. என்ன இது இறைவன் தானாகவே திறக்கும் கதவு போல இருக்கிறதே? "சார் நீங்க " என்றேன் கேட்க வந்ததை முழுங்கிய படி. அவர் பதிலுக்கு "நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சேருகிறேன். எனது இடத்தில் சரியான ஒரு நபரை அமர்த்தும் பொறுப்பும் என்னுடையது தான். நீங்கள் உங்கள் ரெஸ்யூமே ஒன்றை உடனடியாக எனக்கு மெயில் செய்யுங்கள். வருகிற வெள்ளி அன்று எங்கள் நிறுவனத்தின் ஏ ஜி எம் கூட்டம் நடக்கிறது. அங்கே எங்கள் சேர்மன், மற்றும் இதர முக்கிய இயக்குனர்கள், அட்வைசர்ஸ் இருப்பார்கள். நீங்கள் சரியாக மாலை ஐந்து மணிக்கு வந்து விடுங்கள். உங்களுக்கு இந்த வேலை கிடைத்து விட்டது என்று எடுத்துக் கொள்ளுங்கள்" என்று படபடவென்று பேசி விட்டு கிளம்பினார்.

அவர் சொன்னபடி எனது ரெஸ்யூமே அப்டேட் செய்து மெயிலில் அனுப்பினேன். வெள்ளி அன்று ரிப்பன் கட்டிடம் அருகே பெரியமேடு ஏரியாவில் நடக்கும் அந்த மீட்டிங் அறைக்கு வெளியே காத்திருந்தேன். ஒரு சிலர் மீட்டிங் முடிந்து வெளியே போக ஆரம்பித்தனர். சாலமன் சார் வந்து என்னை உள்ளே அழைத்துப் போனார். அங்கே நான் இதுவரை கேள்விப்பட்டு இருக்கும் ஜாம்பவான்கள் உயர்திரு ஹாஷிம் சாஹிப் (சேர்மேன்), பாபுசா என்கிற திரு ரஃபிக் அஹ்மத் சாஹிப் (வைஸ் சேர்மன்), சி எல் ஆர் ஐ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ராமசாமி சார், பிறகு உயர்திரு சஹஸ்ரநாமன்  IAS ஆகியோர் இருந்தனர். எனக்கு ஒரு சீட்.. பக்கத்தில் சாலமன் சார். டீ வந்தது. ஹாஷிம் சார் கையில் எனது ரெஸ்யூமே இருந்தது.

"கியா பா பாலா, இத்தினி நாள் பாக்டரில இருந்து வேல பாத்திருக்கே, இந்த ட்ரெயினிங் வேலை ஒன்னால பாத்துக்க முடியுமா? சாலமன் உன்ன பத்தி ரொம்ப சொல்றார், சரி, அந்த லோடாவுக்கு நீ ரைட் ஹாண்ட் ஆச்சே, உன்ன விடுவாரா அந்த ஆளு? எப்போ ஜாயின் பண்ணுவே?"

அடுக்கடுக்கான கேள்விகள். நான் மிகுந்த மரியாதையுடன், "சார் நிச்சயம் சீக்கிரத்தில் இந்த ட்ரெயினிங் பற்றி தெரிந்து கொள்ளுவேன். ஒரு பதினைஞ்சு நாள்ல ஜாயின் பண்ணலாம் சார். நான் ரிலீவ் ஆகிடுவேன் சார்" என்றேன். அவர் "சஹஸ், சொல்லுங்க என்ன பண்ணலாம் ?" என்று கேட்டார் சேர்மேன் சார். சஹஸ்ரநாமன் சார் "பாலா ஐ திங்க் யு கேன் ஹாண்டில். பட் முதல் சில மாதங்கள் நீ டெபுடி டைரக்டர், சாலமன் ரிலீவ் ஆனவுடன் நீ தான் எக்சிகியூடிவ் டைரக்டர். எல்லா பொறுப்பும் உன்னுடையது. சாலமன் கிட்ட எல்லாம் கத்துக்கோங்க, ஓகே" என்றார்.  பிறகு ஓகே நீங்க போகலாம். உங்களுக்கு ஆபர் லெட்டர் வரும் என்றனர்.

அட இவ்வளவு எளிதில் ஒரு இன்டெர்வியூவா ? தாங்க்யூ காட் என்று வெளியே வந்தேன். ஐ ஐ எல் பி யில் (இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் லெதர் ப்ரொடக்ட்ஸ் - செக்க்ஷன் 25சி (லாப நோக்கற்ற சேவை நிறுவனம்) என்ற நிறுவனத்தில் நுழைய நான் ரெடி. நினைத்துப் பார்த்தேன். ஒரு சாதாரண டைப்பிஸ்ட் கிளெர்க் அன்று. இன்று டைரக்டர் லெவலுக்கு. "பாலா சூப்பர்டா" என்று என்னை நானே தோளில் தட்டிக் கொண்டேன். ஆபர் லெட்டர் வந்தது. அப்பாவிடம் கொடுத்து அப்பா அம்மா இருவருக்கும் நமஸ்காரம் செய்தேன். சுகீர்த்தியை கட்டிப் பிடித்து அணைத்தேன். 

அங்கே இண்டோவில் நான் செய்ய வேண்டிய சில யூனியன் விஷயங்கள், இன்னும் விற்று முடிக்க வேண்டிய சில இம்போர்ட்டட் பொருட்கள், தவிர ஏற்கனவே இருக்கும் ஆர்டர்களை முடிக்க அயனாவரத்தில் வேறு ஒரு இடத்தில் பெயர் இடப்படாமல் ஒரு பாக்டரி செட் செய்து அங்கே ப்ரொடக்ஷன் தொடங்க வேண்டும். மேலும் எனக்கு மூன்று மாத சம்பளம் வரவில்லை. சுமார் பத்தரை ஆண்டுகள் சர்வீஸ் செய்ததற்கு எனக்கு கிராஜூவிடி, மற்றும் இன்சென்டிவ் போன்ற செட்டில்மென்ட் நிலுவைகள் வர வேண்டும். கம்பெனியில் நிதி நிலைமை சரியில்லை. என்ன செய்வது? ஏற்கனவே நான் வாங்க இருந்த பிளாட்க்கு எம் டி தருவதாக சொன்ன இன்சென்டிவ் தொகையும் கொடுக்கவில்லை. நான் கடன் வாங்கி இருந்தேன். அப்போது தான் இந்த நஷ்ட வேளை தொடங்கியது. 

மிகுந்த துணிச்சலுடன் எம் டி சாரை சந்தித்து நேராக அவர் காலைத் தொட்டு ஹிந்தியில் 'என்னை ஆசிர்வதியுங்கள்' என்றேன். என்னை புதிராகப் பார்த்தார். விஷயத்தை சொன்னேன். "நீயாவது என்னிடம் சொல்லி விட்டு கிளம்புகிறாயே, எல்லா பயலும் சுருட்டற வரை சுருட்டி விட்டு கிளம்பி விட்டான், சரி எல்லா வேலைகளையும் முடித்து விட்டு 10 நாளில் கிளம்பு, நீ நல்லா இருப்பே. ஆனா உனக்கு வர வேண்டிய சம்பளம் மட்டும் தான் கிடைக்கும், மீதி எல்லாம் பின்னால பார்க்கலாம்" (கெடைக்காது என்பதை நாசுக்காக சொன்னார் என்பது எனக்கே புரிந்தது - லட்சக் கணக்கில் எனக்கு நஷ்டம் - என்ன செய்வது? நான் அடுத்த நிலைக்கு போக வேண்டுமே ! ஒன்றைப் பெற ஒன்றை இழந்து தானே ஆக வேண்டும்?)

நான், "இந்த மட்டும் நான் பொழச்சேன்" என்று மைண்ட் வாய்ஸ் கொடுத்து விட்டு "தாங்க்யூ சார்" என்று கிளம்பினேன். 

சொன்னபடி சொன்ன நாளில் அம்பத்தூர் எஸ்டேட்டில்  உள்ள ஐ ஐ எல் பி நிறுவனத்தில் சேர்ந்து விட்டேன். 

ஐந்தாறு மாதங்களில் எனது இரண்டாவது மகள் சுபிக்ஷா பிறந்தாள். கூடவே நல்ல நேரமும் தான். சாலமன் சார் கிளம்பும் நேரம் வந்தது. என்னை எக்சிகியூடிவ் டைரக்டர் ஆக்கினார்கள். குருவி தலையில் பனங்கா என்று புரிய ஆரம்பித்தது. 

ஒரு புறம் மாணவர் சேர்க்கை, அவர்களுக்கு தேர்வு, அவர்களுக்கு வேலை பெற்றுத் தருதல், வாடகைக்கு பணம் ஏற்பாடு செய்தல், மாதம் ஆனால் பயிற்றுனர்களுக்கு (ட்ரையினர்ஸ்) சம்பளம், இதர செலவு எல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் அரசு நிறுவனம் போல பேப்பர் ரெடி செய்து அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். தலை சுற்றல் தொடங்கியது. கூடவே எனக்கு அங்கே ரிஜிஸ்ட்ரார் ஆக தொடக்கம் முதல் பணி புரிந்த திரு சுகுமார் அவர்கள் (கிட்டத்தட்ட எனது வயது - மிகவும் நல்ல இணையாக எனக்கு அமைந்தார்)

கூடவே எங்கள் நிறுவனத்தை மார்க்கெட்டிங் செய்ய நான் எனது ஊடக தொடர்புகளை கொண்டு டிவியில் பேட்டி, பத்திரிகையில் எங்கள் நிறுவனத்தைப் பற்றி கட்டுரை எல்லாம் வரவழைக்க திட்டமிட்டேன்.

சனி, ஞாயிறு விடுமுறை. மாலை சரியாக 5.30 க்கு கிளம்பி விடலாம். நான் என் மனைவியிடம் சொன்னேன், "இனி நாம வாரா வாரம் ஜாலியா வெளியே போகலாம், உங்க அம்மா அப்பா வேற அம்பத்தூர்ல இருக்காங்க, அடிக்கடி அங்கே போகலாம்" என்று. 

ஆனால் நான் உதயம் ராமுடன் சேர்ந்து வாரக் கடைசிகளில் பல டிவி ஷோக்களுக்கு ஒருங்கிணைப்பாளராக கமிட் ஆனேன் . தவிர, எம் எஸ் - சைக்கோதெரபி மற்றும் கௌன்செலிங் படிப்பில் (இரண்டு ஆண்டு முதுகலை படிப்பு) சேர்ந்து மாதம் இரு ஞாயிறு கிளாஸ் போக வேண்டும். 

நினைத்தது ஒன்று. நடப்பது ஒன்று. அது தானே வாழ்க்கை. 

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

No comments:

Post a Comment