Sunday, July 25, 2021

நீங்கா நினைவலைகள் - 31

 நீங்கா நினைவலைகள் - 31

- பாலசாண்டில்யன் 

எங்கள் பயிற்சி நிறுவனத்தில் ஒரு பாட்ச் மாணவர்கள் சேர்ந்து பயிற்சி தொடங்கி விட்டது என்றால் எனது வேலை என்பது சற்று ரொடீன் தான். ஏனெனில் அந்தந்த டிபார்ட்மென்ட் தலைவர்களுக்கு எல்லாம் அடுத்தடுத்த வாரங்களில், தினங்களில் என்ன செய்ய வேண்டும் என்று ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட சிஸ்டெம் மிகத் தெளிவாக அழகாக தீர்மானமாக இருந்தது. அதில் யாரும் நுழைந்து பார்க்க வேண்டியது இல்லை என்றாலும், எனது ரெவியூ மீட்டிங் அது பற்றிய தெளிவைத் தந்து விடும். கூடுதலாக வேறென்ன  செய்து புதிய பயிற்சி வாய்ப்புகளை உருவாக்கலாம் என்று மட்டும் சிந்திக்க வேண்டிய நிலை. 

தவிர, எக்ஸாம் சமயத்தில் எனது உதவி தேவை என்றால் அங்கே ஒரு டிஸ்கஷன் நடக்கும். மேனேஜ்மென்ட் பற்றிய எக்ஸாம் நானே நடத்துவேன். அந்த பேப்பரும் நான் கரெக்ட் செய்வேன். அதே போல காலணி பிரிவு மாணவர்களின் பிளேஸ்மென்ட் பற்றி எனக்கு ஒரு போதும் கவலை இருந்ததில்லை. ரெஜிஸ்திரார் சுகுமார் அதனை மிகத் திறம்பட செய்தார். மேலும், கார்மெண்ட், மற்றும் லெதர் குட்ஸ் நிறுவனங்களுக்கு மட்டும் சில நேரம் எனது போன் கால் அல்லது லெட்டர் தேவைப்படும். நிச்சயம் 100% வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிற வகையில் எங்கள் நிறுவனமும் அதன் பாடத்திட்டமும் இருந்தது.

பயிற்சித் துறையில் நான் நுழைவேன் என்று தெரிந்ததாலோ என்னவோ நான் முன்கூட்டியே ISTD வழங்கிய டிப்ளமோ இன் 'ட்ரெயினிங் அண்ட் டெவெலப்மென்ட்' படித்து வைத்திருந்தேன். நிச்சயம் எனக்கு பெரிய அளவில் இந்த துறையில்  பயன்பட்டது எனலாம்.

ஒரு சனிக்கிழமையை ஞாயிறை  கூட நான் வீணடித்ததில்லை. ரொம்ப அவசியம் என்றால் மட்டும் வெள்ளி அன்று விடுமுறை எடுத்துக் கொள்ளுவேன். 

எனக்கு இந்த நிலையில் (தந்தையைப் போல் ஒருவர்) டாக்டர் நடராஜன் (ஜாயிண்ட் டைரக்டர் ஆப் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் காமெர்ஸ் - சுமார் 35000 பெண் தொழிலதிபர்களை உருவாக்கி சரித்திரம் படைத்தவர்), (அன்னையைப் போல் ஒருவர்) டாக்டர் வசந்தி ரங்கநாதன் - மிக மிக சீனியர் கார்பொரேட் டிரைனர் - பல மேலாண்மை அமைப்புகளில் முக்கிய உறுப்பினர், 'ஆலோசனை நேரம்' உட்பட பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பிரபலமானவர். இன்னொருவர் (எனது சகோதரன் போன்றவர்) திரு கிருஷ்ணபிரசாத் செரலா - மனநல ஆலோசகர், மிகப் பிரபல மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் மற்றும் NLP நிபுணர் - இப்படி இந்த மூவரும் பயிற்சியில் எந்த முன்னனுபவமும் இல்லாத என்னை தேர்வு செய்து பெரிய பெரிய வாய்ப்புகளை வழங்கி எனது வாழ்க்கையை மாற்றினார்கள். 

டாக்டர் வசந்தி ரங்கநாதன் அவர்கள் என்னை மதுரா கோட்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பயிற்சி தர தூத்துக்குடி அழைத்துச் சென்றார். பிறகு ராம்கோ சிமெண்ட் நிறுவனம், விருதுநகர் அழைத்துச் சென்றார். அங்கேயே அவர்களின் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி, பிறகு இதயம் நல்லெண்ணெய் முத்து அண்ணாச்சி ஏற்பாட்டில் பள்ளி சிறுவர்களுக்கு பயிற்சி என்று மூன்று இடங்களுக்கு அழைத்துச் சென்று (பிள்ளையார் சுழி போட்டு), எனக்கு மிக நல்ல டிரைனர் பீஸ் கொடுத்தார். என்னை செகண்ட் கிளாஸ் ஏசி ட்ரெயினில் அழைத்துப் போனார். அதனை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. அதற்கு முன்பு அவர் என்னை அதிகம் அறிந்ததில்லை. இன்றும் எனது வெற்றிகளில் மகிழக் கூடிய மிக நல்ல உள்ளம் அவர். 

அதே போல திரு கிருஷ்ணபிரசாத் சார் என்னை விஜயவாடா தெர்மல் பவர் நிறுவனத்தில் வேலை பார்த்த இன்ஜினியர்களுக்கு பயிற்சி தருவதற்கு மிகவும் நம்பிக்கையுடன் அழைத்துச் சென்றார். (எனது பயிற்சி நன்றாக இருக்கவே இரண்டு மூன்று முறை என்னை அழைத்துச் சென்றார்). மிக நல்ல பீட்பாக் வரவே, என்னை விஜயவாடா அருகே ITDA - Tribal Welfare Department - மலைவாழ் மக்களின் நல்வாழ்வு தருகிற அரசு நிறுவனம் உள்ள பாடேறு எனும் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே நான் சில  IAS அதிகாரிகளுக்கு பயிற்சி தரும் வாய்ப்பைப் பெற்றேன். எப்படி நான் பயந்து போய்க் கிடந்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். பிறகு ஹைதராபாத், ராஜமுந்திரி, போன்ற இன்னும் சில இடங்களுக்கு என்னை அழைத்துப் போய் அரிய வாய்ப்புகள் வழங்கினார். நிச்சயம் மறக்கவே முடியாது அந்த பயணங்களை.

அதற்கு அடுத்தபடி, டாக்டர் நடராஜன் எங்கள் நிறுவனம் NLDP மூலம் முழுக்க முழுக்க இலவசமாக 30 பட்டதாரி பெண்களுக்கு மாத உதவித் தொகை, ப்ராஜெக்ட் ரிப்போர்ட், மற்றும் லோன் வசதி உட்பட செய்யக்கூடிய 'தொழில் முனைவோர் பயிற்சி' செய்யும் சமயத்தில் அறிமுகமாகி பிறகு எனது 'காட் பாதர்' ஆகவே மாறினார் என்பதே வரலாறு. (கொரோனா காலத்தில் அவர் மறைந்து போனார்). பிறகு IOB (டாக்டர் கோமதிநாயகம், டாக்டர் இளங்கோவன், சங்கரி 
மேடம், மனோரமா மேடம், இவர்கள் ஆசியுடன்) வங்கிக்கு (தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு சக்தி டிரஸ்ட் மூலம்) பற்பல ஒரு மாத இலவச 'தொழில் முனைவோர் பயிற்சி' செய்து கொடுத்தோம். அதைத் தொடர்ந்து கனரா வங்கிக்கு (இன்டர்நேஷனல் கிரிக்கெட் பிளேயர், மற்றும் சர்வதேச அம்பயர் சுமதி அய்யர், பிறகு சுதா ஷா அவர்கள் மூலம்) அதே போன்ற பயிற்சி செய்தோம். பிறகு லட்சுமி என்ற அதிகாரி அழைக்க இந்தியன் வங்கிக்கு செய்து கொடுத்தோம். பிறகு வானொலியில் தொடர்ந்து இணைந்த தொடர் நிகழ்ச்சிகள் செய்தோம். பிறகு தூர்தர்ஷனில் எங்கள் தொடர் நிகழ்ச்சிகள் வந்தன.

அவர் ஓய்வு பெற்று Entrepreneur Promotional Institute of Chennai - EPIC என்று ஒரு நிறுவனம் தொடங்கி அதில் என்னை கௌரவ இயக்குனர் ஆக்கினார். அதில் நாங்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச பயிற்சி ஆண் மற்றும் பெண்களுக்கு அளிக்கத் தொடங்கினோம். அதைத் தொடர்ந்து டாக்டர் நிர்மலா பிரசாத் அவர்களின் அறிமுகத்துடன் அவர்களின் MOP வைஷ்ணவா கல்லூரியில் EDP cell (தொழில்முனைவோர் மையம்) தொடங்கிட உதவி செய்தோம். பிறகு அவர்கள் ஆண்டு தோறும் MOP Baazaar நடத்தி கல்லூரி மாணவிகள் தொழிலில் முனைந்து பல ஆயிரம் சம்பாதிக்கும் திட்டங்கள் உருவாயின. இவை எல்லாமே டாக்டர் நடராஜனின் கனவுத் திட்டங்கள். அதில் நான் மட்டும் அல்ல, சுமதி அய்யர், டாக்டர் ஆறுமுகம், திரு சந்திரமோகன், டாக்டர் வசந்தகுமாரி என்று ஒரு பட்டாளமே செயல்பட்டோம். எங்களுக்கு டாக்டர் ரோஸி பெர்னாண்டஸ் மற்றும் டாக்டர் லலிதா பாலகிருஷ்ணன் உதவிகள் செய்தனர். அதைத் தொடர்ந்து சுமார் 75 இன்ஜினியரிங் கல்லூரிகள் , ஆர்ட் அண்ட் சயின்ஸ் கல்லூரிகள்,  சில பாலிடெக்னிக் கல்லூரிகள் சென்று இதே போல  EDP cell (தொழில்முனைவோர் மையம்) தொடங்கிட உதவினோம். எல்லாமே மத்திய மாநில அரசின் திட்டங்களாக இருந்தன.

அப்போது தான் தமிழக அரசு (அம்மா ஜெயலலிதா அரசு) 5 ஆண்டுகளில் 5 லட்சம் மகளிரை சுய உதவிக் குழுக்கள் மூலம் தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டத்தை அறிவித்தது  'தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்' மூலம் அதனை செயல்படுத்த திருமதி குத்சியா காந்தி IAS அவர்களை எம் டி ஆக்கினார். திரு சந்தோஷ் பாபு IAS (இப்போது ஓய்வு) அவர்களை செயல் இயக்குனராக ஆக்கினார். திரு மாரிச்சாமி அவர்கள் பொது மேலாளர் ஆக SIPCOT நிறுவனத்தில் இருந்து மாறி வந்தார். (அவரைப் பற்றி இன்னும் சொல்லுவேன்). இந்த திட்டத்திற்கு சுமார் 22 பேர் கொண்ட கோர் கமிட்டி உருவாக்கினார்கள். அதில் டாக்டர் நடராஜன், டாக்டர் நிர்மலா பிரசாத், திரு பஞ்சாக்ஷரம் (SIPA), கனரா வங்கியின் சுமதி அய்யர், நான் என்று பல்வேறு நிபுணர்கள் இணைக்கப்பட்டனர். 

இந்த திட்டத்தின் மூலம் 10 மாஸ்டர் டிரைனர்கள் தேர்வு செய்தனர் (எங்கள் சேர்மேன் அனுமதியுடன் நானும் அதில் ஒருவனாக தேர்வு ஆனேன்.) அதனால் லெதர் சம்பந்தமான தொழில் செய்ய விரும்பும் பெண்கள் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு ஐந்து லட்சம் பெண்கள் பயிற்சி பெற பாடத்திட்டம் மற்றும் பயிற்சி கையேடு நூல் தயாரிக்கும் நான்கு பேர் கொண்ட குழுவில் என்னையும் சேர்த்துக் கொண்டனர். அதன்படி சுமார் 5 பாட்ச் (ஒவ்வொரு பாட்ச்சும் 5 நாட்கள் பயிற்சி பெறுவர்) மக்களுக்கு நான் மாஸ்டர் டிரைனர் பணியை செய்த பொழுது நான் உண்மையில் மிகப்பெரிய அனுபவம் பெற்றேன். ஒரு முறை 10,000 பெண்களை நேரு ஸ்டேடியம் வரவழைத்து அதில் டாக்டர் ஆறுமுகம், டாக்டர் ரெஜினா பாப்பா (காரைக்குடி யூனிவர்சிட்டி) மற்றும் டாக்டர் சுதா சேஷன் மற்றும் நான் ஆகியோர் ஆளுக்கு சரியாக 10 நிமிடம் பேசினோம். அந்த அனுபவம் நிச்சயம் இன்றும் மறக்க முடியாத ஒன்று என்று இங்கே நான் சொல்லவும் வேண்டுமோ ?

இன்னும் சொல்லத் துடிக்குது மனது. இருந்தாலும் எனக்குள் இருக்கும் 'நான்' கேள்வி கேட்கிறேன். அவ்வளவு பெரிய ஆளா நீ சுயசரிதம் எழுதிட? அப்படி என்ன சாதித்து விட்டாய்? எதற்கு இந்த விபரீத விஷப்பரீட்சை?  என்று கேட்கிறது எந்தன் மனம். முகநூலில் சிலர் விரும்பிப் படிக்கிறார்கள். இருந்தாலும் அவசியமான ஒரு Self-Conflict - சுய மோதல் ஏற்படுகிறது. பார்க்கலாம் எது வெல்கிறது மனம் தரும் ஞானமா அல்லது மனதின் தேவையற்ற ஆசையா ?

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

No comments:

Post a Comment