Thursday, July 15, 2021

நீங்கா நினைவலைகள் - 21

 நீங்கா நினைவலைகள் - 21

- பாலசாண்டில்யன் 

இது ப்ராஜெக்ட் 'சேல்ஸ் லீக்' என்று சில திரைப்படங்களில் வருவது போல சொல்லலாம். எங்கள் நிறுவனத்தின் சேல்ஸ் வாகனங்கள் மஸ்கட்டில் சற்று உள்ளடங்கி இருந்த பல டவுன்களுக்கு சென்று எங்கள் பொருட்களை சப்ளை செய்வார்கள். தனியார்களுக்கு செய்யும் ரீடைல் வணிகம் கிடையாது. எல்லாமே நேரடியாக கடைகளுக்குத் தான். சில வண்டிகள் டார்சைத், அல் குவைர், சலாலா, முத்தரா, அல் ஹம்ரா, அல் புரைமி (இப்படித் தான் எனக்கு நினைவு) போன்ற இடங்களில் இருந்த கடைகளுக்கு கூடப் போகும். அங்கே எங்கள் போபாக் மற்றும் ஜூஸ், சோடா போன்ற பொருட்களுக்கு ரொம்ப கிராக்கி. குழந்தைகளுக்கு அது மிகவும் பிடித்த உணவாக இருந்தது. 

சில நேரம் சேல்ஸ்மேன் தனது சொந்த முடிவில் சில கடைகளுக்கு கிரெடிட் தருவார்கள் போலும். இருந்தாலும், காலை சரக்கோடு கிளம்பிய அவர்கள் மாலை திரும்பியதும் ஸ்டோர்ஸ் சென்று விற்காத பொருட்களை திரும்ப ஒப்படைத்து அதற்கு கிரெடிட் நோட் வாங்கிக் கொண்டு பிறகு பணிக்கர் ஆபிஸ் வந்து அன்று வசூலான பணத்தை கிரெடிட் நோட்டை கொடுக்க வேண்டும். கிரெடிட் கொடுத்த பணத்தை கை விட்டு கட்ட வேண்டும். பிறகு சாப்பிட்டு விட்டு மறுநாள் காலை கிளம்பத் தேவையான (அவரவருக்கு கிடைத்த ஆர்டர் அடிப்படையில்) பொருட்களை நிரப்பி வண்டியை பூட்டி விட்டு பிறகு தான் உறங்கச் செல்லுவது வழக்கம்.

மேற்சொன்ன சில உள்ளடங்கிய ஊர்களுக்கு என்னை ஒரு சேல்ஸ் மேனேஜருடன் - தமிழ்க்காரர் தான் (அவரை நான் பார்த்ததில்லை, சத்யராஜ் போல இருந்தார்). ஒரு நாள் டூர் போல இரண்டு மூன்று முறை போகச் சொன்னார்கள். அப்போது சில ரோடுகள் மலையை ஒட்டி இருக்கும். நீர்நிலையை ஒட்டி இருக்கும். மிகவும் உயரமாக, அல்லது வளைந்து வளைந்து குறுகலாக இருக்கும் நம்ம ஆளு ரொம்ப ஜாலியாக பாட்டு பாடிக் கொண்டு அதிவேகமாக வண்டி ஓட்டுவார். நான் பயப்படுகிறேன் என்று தெரிந்தால் இன்னும் வேகமாக ஓட்டுவார். நான் உசுரைக் கையில் பிடித்துக் கொண்டு (வாய் நிறைய 'புத்திர் பலம் யசோ தைர்யம்' ஸ்லோகத்தை முணுமுணுக்கும்). இவன் என்னை போகிற வழியில் 'போட்டுத் தள்ளி விடுவானோ' என்று கூட தோன்றியது.  எனக்கு இந்த அட்வென்ச்சர் விஷயங்கள் சிறு வயது முதலே பிடிக்காது. (அந்த விஷயத்தில் பயந்த சுபாவம் என்றும் சொல்லலாம்). 26 வயது இளைஞனுக்கு என்ன பயந்த சுபாவம் என்று நீங்கள் கேட்கக் கூடும். வளர்ப்பும் வளர் சூழலும் அப்படி. 

சில இடங்களில் நிறுத்தி என்னை அங்கே இருந்த கடைகளில் விசாரிக்க அழைத்துச் செல்லுவார். நான் பணம் வர வேண்டிய பில் லிஸ்ட் மற்றும் பில் காப்பி வைத்திருந்தேன். சில இடங்களில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த கடைகளில் இருந்த பில்லே வேறு. சிலர் பணம் தந்து ரசீது வைத்துக் கொண்டு இருந்தார்கள். சில இடங்களில் வாராக் கடன்களை ஒரு பதான் போல வசூல் செய்தேன். (எனக்கு பாம்பேயில் நான் செய்த வசூல் வேட்டை நினைவுக்கு வந்தது). இதெல்லாம் ஏற்கனவே அறிந்த அவர் வண்டிக்குள்ளேயே அமர்ந்து இருப்பார். ஏதும் கேட்க மாட்டார். ஒரு முறை மட்டும் 'நீங்கள் சரியான ஆளு சார்' என்றார்.

இந்த கடினமான சவால்கள் நிறைந்த வேலையை முடித்து நான் மேலதிகாரிகளுக்கு அளித்த ரிப்போர்ட் அடிப்படையில் இரண்டு மூன்று பேருக்கு வேலை பறிபோய் ஊருக்கு திரும்பும் கட்டாயம் ஏற்பட்டது. எல்லாமே அதிரடியாகவும் ஆர்ப்பாட்டம் இல்லாமலும் நடந்தது. நான் ஒரு சிறு வில்லனாகவும் ஹீரோவாகவும் இரு மாதிரியாக சித்தரிக்கப்பட்டு நின்றேன் அது பற்றித் தெரிந்த சேல்ஸ்மேன் மக்கள் மத்தியில்.  இப்படி என்னை அடிக்கடி நிறுவனம் போகச் சொல்லுமா என்று செல்லையா சாரிடம் பயந்து பயந்து கேட்டேன். 'அப்படி இருக்காது' என்றார் அவர் உறுதியாக.

இந்த வெள்ளிக்கிழமை ரூவி மார்க்கெட்டில் பர்ச்சேஸ் என்பதை அதிகரிக்கும் நேரம் வந்தது. எனது பெரிய தங்கையின் திருமணம் நிச்சயமான செய்தி வந்தது. அது பிப்ரவரி மாதம் (1987) இரண்டாவது வாரத்தில் என்று முடிவாகி இருந்தது. நான் உடனே லீவ் அப்ளை செய்தேன். 35 நாட்கள் வரை சம்பளத்தோடு கூடிய லீவு உண்டு என்று தெரிய வந்தது. 

தங்கைக்கு புடவை, மாப்பிள்ளைக்கு சில பொருட்கள், கல்யாண ஆல்பம் (அங்கே விலை குறைவு), வீடியோ காசெட்டுகள், காமெராவுக்கு பிலிம், என்று தோன்றியதை எல்லாம், நண்பர்கள் சொன்னதை எல்லாம் வாங்கி வாங்கி ரூமில் குட்டி யானையில் நிரப்ப ஆரம்பித்தேன். என் நண்பர் நாயக் 'உன்னை குருவி என்று கஸ்டம்ஸ் பிடித்து விடப் போகிறார்கள், டியூட்டி இல்லாத ஐட்டம் என்ன என்று விசாரித்து வாங்கு' என்று அறிவுரை வழங்கினார். 

அதற்குள் ஏற்கனவே என் மீது சற்று பொறாமையில் இருந்த டேவிட் ஒரு சில்லறை விஷயத்திற்கு என்னை கன்னத்தில் அறைந்து விட்டான். (ஏற்கனவே பாம்பேயில் ஒரு முறை கொட்டும் மழையில் அடக்க முடியாமல் சுவற்றோரம் சிறுநீர் கழிக்கப் போய் அதற்கு ஒருவரிடம் பளார் அறை வாங்கினேன், இது இன்னொரு முறை)  விஷயம் தெரிந்த செல்லையா சார் மிகவும் வேதனைப்பட்டார்.  நான் அவர்  மூலம் ஓ பி எம் சாருக்கும் ஜி எம் சாருக்கும் எழுத்து மூலம் புகார் கொடுத்தேன்.

என்னை எம் டி அவர் அலுவலகம் அழைத்தார். நான் அவரிடம் "ஏற்கனவே நான் லீவ் கேட்டு இருக்கிறேன், என்னை அனுப்பி விடுங்கள், இனி இங்கே இருக்க எனக்கு பயமாக இருக்கிறது" என்றேன். அவர் "நீங்கள் நல்ல விசுவாசமான மனிதர், உழைப்பாளி, உங்களைப் பற்றி எனக்குத் தெரியும். நீங்கள் 90 நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு போங்கள், பிறகு வீட்டு விஷயங்கள் எல்லாம் முடித்து விட்டு வாருங்கள். நாம் இப்போது பாப் லெமன், பாப் சோடா, பாப் ஆரஞ்சு என்று புதிய பாக்டரி தொடங்கப் போவது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். அது முழுக்க முழுக்க லேட்டஸ்ட் டெக்னாலஜி. நிச்சயம் உங்களுக்கு நல்ல பொறுப்பு தருகிறேன். உங்களை அடித்த நபர் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். "நான் ஒன்றும் வேண்டாம். இனி அப்படி நடக்காமல் இருந்தால் போதும். இப்போது விடுமுறை மட்டும் தாருங்கள்" என்று சொல்லிக் கிளம்பினேன். 

ஜி எம் என்னை அவர் ரூமுக்கு அழைத்து அவரது லெட்டர் ஹெட்டில் மிக அழகாக ஒரு சிறப்புச் சான்றிதழ் போல அவரது அற்புதமான கையெழுத்தில் தந்தார். "யூ ஆர் அன் அஸெட் டு திஸ் கம்பெனி, வி கேன் நாட் அப்போர்ட் டு லூஸ் யூ" என்ற வரிகள் என் கண்ணில் நீரை வரவழைத்தது. இன்றும் அது எனது அலமாரியில் இருக்கிறது.

நான் கிளம்பும் பிப்ரவரி மாதம் பிறந்து விட்டது. தினம் தினம் எனது டிக்கெட் இன்று வரும் நாளை வரும் என்ற செய்தி மட்டும் வந்தது. நான் ஏற்கனவே எனது பெட்டியை பேக் செய்து விட்டேன். காத்திருந்து காத்திருந்து தேதி 5 ஆனது. மிகவும் நொந்து போனேன். ஏன் இப்படி நடக்கிறது என்று யாராலும் சொல்ல முடியவில்லை. டிக்கெட் கிடைக்கவில்லை என்று மட்டும் பதில் வந்தது. இதற்கு நடுவே எம் டி அவர்களின் தந்தை இறந்த செய்தி வந்தது ஒரு நாள் விடுமுறை ரூபத்தில். இருப்பினும் எனது டிக்கெட் ஒரு வழியாக வந்தே விட்டது. ஆனால் நான் பாம்பேயில் இருந்து வந்ததால் பாம்பேவுக்கு தான் டிக்கெட் வந்து இருந்தது. எனக்கு சேர வேண்டிய சம்பளம் மற்றும் இதர சில தொகை எல்லாமே ரெடி. எனது செலவில் பாம்பே டு சென்னை டிக்கெட் போட்டுக் கொடுத்தனர். 

நான் சுமார் பதினொன்றரை மாதங்கள் மட்டுமே அங்கு பணி புரிந்து விட்டு நல்ல பெயரோடு, நல்ல அனுபவத்தோடு கிளம்பினேன், தங்கை திருமணம் முடிந்த பிறகு திரும்பி வந்து விடலாம் என்று. என்னை ஏர்போர்ட் கூட்டிக்கொண்டு போக மீண்டும் சுல்தான் சார் வந்து நின்று புன்னகைத்தார். ஏர்போர்ட் வந்ததும் அவர் என்னிடம் 'வாருங்கள்' என்று ஒரு கவுண்டர் கூட்டிக் கொண்டு போனார். அங்கே என் விசா கான்செல் செய்வதை சொன்னார்கள். எனக்கு சம்மதம் தானே என்று கேட்டார் அந்த அதிகாரி. நான் 'இல்லை' என்று சொன்னால் அங்கேயே லேபர் ஆபீசர் இருப்பார். உடனே அந்த நபரை லேபர் கோர்ட்டு கூட்டிச் சென்று ஞாயம் செய்து தருவார். எனக்கு பிளைட்டுக்கு நேரமாகிக் கொண்டு இருந்தது. எனது பெயரும் அங்கே அனௌன்ஸ் செய்தார்கள். சுல்தான் எனது முகத்தையே பார்த்தார்.

நான் அவரிடம் ஒரு சிறு பிள்ளை போல "சார் எம் டி எனக்கு 90 நாட்கள் விடுமுறை தந்துள்ளார். ஏன் எனது விசாவை கான்செல் செய்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னது 'உங்கள் விசாவை கான்செல் செய்தால் தான் வேறு ஒருவரை வரவழைக்க முடியும். இது மேலிடத்து  முடிவு" என்று அவர் சொன்னார். (அது ஓ பி எம் சாரின் கட்டளை என்றும் சொன்னார்) கடைசி நிமிடத்தில் நான் என்ன செய்து விட முடியும். எனக்கு பாம்பே போய் ஒரு சில வேலைகளை முடித்து விட்டு பிறகு சென்னை போக வேண்டும். குறைந்த பட்சம் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாவது இருக்க வேண்டுமே..! மேலும் சுல்தான் சொன்னார், "எம் டி சாரின் தந்தை இறந்து விட்டார், அவரும் ஊரில் இல்லை" என்று - அதாவது நான் நோ என்றால் லேபர் கோர்ட்டுக்கு அவரால் வர முடியாது என்கிற அர்த்தத்தில். எனது டிக்கெட் கன்போர்ம் என்பதால், நான் செக் இன் செய்து விட்டபடியால் எனது பெயர் ஒலித்துக் கொண்டே இருந்தது. 

இப்போது நான் மட்டும் ஏறிச்செல்ல வந்த ஒரு பஸ்ஸில் ஏறி (பஸ் லேசாக இருந்தது, மனது தாங்க முடியாத கனத்துடன் இருந்தது) அமர்ந்தேன். கண்ணில் நீர் முட்டியது. பிளைட்டுக்குள் ஏறினேன். எனக்காகவே அது காத்திருந்தது. சிலர் என்னைப் பார்த்து கடுகடுவென ஏதோ முணுமுணுத்தனர். விமானம் கிளம்பியதும் பணிப்பெண் "சார் சாம்பேன், பீர்" என்று கேட்டார். "நோ தாங்க்ஸ் ஐ டோன்ட் வாண்ட் எனிதிங், ஜஸ்ட் லீவ் மீ அலோன்' என்றேன். என்னை வினோதமாக எதோ புரிந்தது போல ஒரு மிக்சட் ஜூஸ் கேன் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனார். அந்த விமான சத்தத்தில் நான் சற்று விசும்பினேன். யாரும் என்னை கவனிக்கவில்லை. சீக்கிரம் பாம்பே விமான தளத்தில் தரை இறங்கியது அந்த பெரிய விமானம்.  

இறங்கியது விமானம் மட்டுமா?

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

No comments:

Post a Comment