Friday, July 16, 2021

நீங்கா நினைவலைகள் - 22

 நீங்கா நினைவலைகள் - 22

- பாலசாண்டில்யன் 

பாம்பே வந்ததும்  நான் செய்து முடிக்க வேண்டிய சில பணிகளுக்காக ஜோகேஸ்வரி சென்றேன். பாக்டரிக்குள் போகவில்லை. யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. பிறகு எனது பாட்டு டீச்சர் லட்சுமி கணபதி அவர்களுக்கு  ஒரு புடவை வாங்கி இருந்தேன். அதை எடுத்துக் கொண்டு மாதுங்காவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று கொடுத்து அவர் ஆசி பெற்றேன். அவர்கள் உடல்நிலை காரணமாக பாட்டு சொல்லித் தருவதை நிறுத்தி விட்டதாக சொன்னார்கள்.  மறக்காமல் நான் எழுதிய அந்த 'சரணம் சரணம் குருவே' பாட்டை பாடிக் காட்டினேன். மனதாரப் பாராட்டி ஆசி வழங்கினார். 'பாட்டை விட்டுடாதே' என்று வழி அனுப்பினார்.  இனி எப்போது வருமோ என்று எண்ணி மாதுங்கா சென்று ஹோட்டல்  மெட்ராஸ் கபே சென்று  டிபன் சாப்பிட்டேன். நிறைய குஜராத்திகள் காணாது கண்டது போல சாம்பார் கப்பில் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தனர். பிறகு மாலையில் கரும்பு ஜூஸ் குடித்தேன். குறிப்பிட்ட சில நண்பர்களை மட்டும் தொடர்பு கொண்டேன். மூட் அவுட் ஆன மனதை ஒன்றும் செய்ய முடியவில்லை. 

அடுத்த நாள் காலையில் சென்னை பிளைட். பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். வீடு ஏற்கனவே கல்யாணக்களை கட்டி இருந்தது. நெருங்கிய உறவினர்கள்,  பாட்டிகள், அம்மா, அப்பா, தங்கைகள், தம்பிகள் என்று வீடு முழுக்க மனிதர்கள். நான் நுழைந்தது தான் தாமதம். எனது குட்டி யானை முழுதும் திறக்கப்பட்டு வீடே பொருட்களால் நிரம்பியது. 'இப்போது ஏன் திறந்தார்கள் என்று நானும் அம்மாவும் நினைத்தோம்'. நான் உஷாராக எல்லா பொருட்களிலும் ஸ்டிக்கர் ஒட்டி பெயர் எழுதி இருந்தேன். அதைப் பார்த்து பல பொருட்கள் பெட்டி திரும்பின. 

அடுத்த நாள் முதல் கல்யாண அமர்க்களம் தான். தங்கை கல்யாணம் பாரீசில் ஒரு முட்டுச் சந்தில் ஏற்பாடு செய்திருந்தனர். எல்லாப் பொருட்களும் ஓடி ஓடி வாங்கிக் கொடுக்கும் படி கான்ட்ராக்ட் . சரியான அலைச்சல். திருமணத்தில் நல்ல கூட்டம். அப்பாவின் நண்பர் எம் சந்திரசேகர் சாரின் வயலின் கச்சேரி வேறு இருந்தது ரிசப்ஷனில். 

என்னிடம் எப்போது திரும்பிப் போக வேண்டும் என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. எல்லோரிடமும் ஒரே மாதிரியான 'நிறைய லீவ் இருக்கிறது' என்றே சொன்னேன். சிலர் எனது வேலை எப்படி இருந்தது என்று விசாரித்தனர். எனது அத்திம்பேரைத் தவிர யாரிடமும் நான் திரும்பிப் போக வேண்டாம் என்று சொல்லவில்லை. கூத்தில் கோமாளிகள் சிலர் நடுநடுவே வந்து 'என்ன பாலா (சிலர் வீட்டுப் பெயராகிய 'ரமணி' என்று) 'உனக்கு இப்போ லைன் கிளியர். அடுத்தது உனக்கு தான். எப்போ சாப்பாடு' என்று கேட்டு விட்டுப் போயினர். எனது பதில் ஒரு அசட்டுப் புன்னகை தான். 

ஒரு சிலர் 'நீ ஹூம் என்று ஒரு வாரத்தை சொல்லு நம்ம சொந்தத்திலேயே அழகான பெண்கள் காத்துக்கொண்டு இருக்கிறது' என்றனர். நான் 'ஹும் ஹும்' அலறி ஓடித் தப்பித்தேன். 'இன்னும் செட்டில் ஆகவில்லை. தம்பி தங்கையெல்லாம் படிக்கிறார்கள். இவ்வளவு பொறுப்புகளை வைத்துக் கொண்டு எனக்கென்ன இப்போ கல்யாணம்' என்றேன் (Husband's job is a full time job - கணவனின் வேலை தான் வேலை இல்லாதவனுக்கு என்பது முழுநேர வேலை என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்). ஆஹா படத்து ஹீரோ போல முகத்தில் எந்த சோகமும் இல்லை என்பதை எல்லா சமயமும் உறுதிப் படித்திக் கொண்டேன். அதற்கு போகவர முகம் கழுவி பவுடர் போட்டு ட்ரெஸ் மாற்றினேன். 

வீடு திரும்பி இரண்டொரு நாட்கள் கழித்து வீட்டில் கூட்டம் குறைந்தது. அம்மா அப்பா இருவரையும் அழைத்து நிதானமாக எனக்கு விசா கான்செல் ஆன விஷயத்தை சொல்லி இனி புதிய வேலை தேட வேண்டும் என்று விளக்கினேன். அப்பா முகத்தில் எந்த ஏமாற்றத்தையும் காட்டவில்லை. இருவரும் ஒரே குரலில் உனக்கு இருக்கும் படிப்புக்கு அனுபவத்துக்கு நிச்சயம் நல்ல வேலை சீக்கிரம் கிடைக்கும் என்றனர்.

திருமண செலவிற்கு பெருந்தொகை அப்பாவிடம் கொடுத்தேன். ஏற்கனவே பெருந்தொகை அனுப்பி இருந்தேன். தவிர மாதாமாதம் பாம்பே போனது முதல் அனுப்பிக் கொண்டு இருந்தேன். மூத்த பையன் எனும் போது வேறு யார் செய்வார்.? வங்கி இருப்பில் வாழும் நிலையில் நான். வீட்டு செலவிற்கு என்னால் ஏதும் செய்ய முடியவில்லை. நானும் பாம்பே, ஹைதராபாத், டில்லி, பெங்களுர் என்று பல ஊர்களுக்கு இன்டெர்வியூ போய் வந்தேன். பேட் லக், எல்லாமே 'நோ' ஆனது. சுமார் ஐந்து மாதங்கள் அப்படியே வெட்டியாக கடந்து போனது. மனம் தளராமல் யார் உதவியும் இல்லாமல் சென்னையில் தோலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் 'சீப் அக்கவுண்ட்டண்ட்' வேலைக்கு அப்ளை செய்து இருந்தேன். 

அது ஒரு ஜூலை மாதம். இன்டெர்வியூ லெட்டர் வந்தது. அயனாவரத்தில் குன்னூர் ஹை ரோட்டில் இருந்த 152 ஆம் எண் பாக்டரிக்கு போனேன். அங்கே ஹிந்தி நடிகர் போல ஒருவர் 'சுரேஷ் கல்யாண்பூர்' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது காரில் என்னை ஏறச் சொன்னார். அவர்களுக்கு அதே ரோட்டில் நம்பர் 11 இல் இன்னொரு பாக்டரி இருந்தது. இந்த இடைப்பட்ட 141 கட்டிடங்கள் வருவதற்குள் எனது இன்டெர்வியூ முடிந்தது வினோதமாக. அவர் சொன்னார் 'நீ நன்றாக படித்து இருக்கிறாய், நன்றாக ஹிந்தி பேசுகிறாய், இந்த அக்கௌண்ட்ஸ் வேலை உனக்கு வேண்டாம், உன்னை பாக்டரி அட்மின் மேனேஜர் போஸ்டுக்கு எடுக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் எங்கள் எம் டி திரு லோடாஜி  அவர்களை நாளை மறுநாள் பாரிஸ் கார்னர் சுங்குராமா தெருவில் சந்திப்போம். சரியாக காலை 11.30 மணிக்கு வந்து விடு" என்று சொல்லி என்னை இறக்கி விட்டு போகச் சொன்னார்.

சுங்குராமா குறுகிய தெருவில் தேடிக் கண்டுபிடித்து முதல் மாடியில் இருந்த 'இண்டோ இன்டர்நேஷனல்' ஆபீசுக்குள் நுழைந்தேன். சில நிமிடங்களில் சிங்கத்தின் முன்பு நிற்கும் சிறு முயலாக ஆனேன். ஆம் அவர் அத்தனை உயரம், அவ்வளவு பருமன். உள்ளே ஏற்கனவே சுரேஷ் இருந்தார். டீ கொடுத்தார்கள். அருமையான பாம்பே டீ போல. "நீ தானா அது? சின்ன பையனாக இருக்கியே. கல்யாணம் ஆகி விட்டதா ?அந்த பாக்டரியில் எல்லோரும் ஏமாத்துப்  பசங்க, உன்னை தூக்கி சாப்பிட்டு விடுவாங்க, உன்னால் சமாளிக்க முடியுமா? உனக்கு வேலை வேற தெரியாது" என்றார் ஹிந்தியில். நானும் பதிலுக்கு "ஒன்றும் கவலை வேண்டாம், நான் சீக்கிரம் வேலை கற்றுக் கொண்டு உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன்' என்றேன். "சரி நாளை முதல் அயனாவரம் 152 போய் விடு" என்றார். அவ்வளவு தான் இன்டெர்வியூ. இது ஒன்றும் நமக்கு புதிதல்லவே. இதற்கு முந்தைய இன்டெர்வியூக்கள் கூட இப்படி மொக்கையாகத் தானே இருந்தன. 

மறுநாள் போனேன். வாசலில் என்னைத் தடுத்தி நிறுத்தி சைன் வாங்கினார் செக்யூரிட்டி ஆஃபீசர் சின்னப்பிள்ளை (பின்னாளில் நான் அவரை பேக்டரி பர்சானல் மானேஜராக அப்பாய்ண்ட் செய்தேன்) சுரேஷ் சார் வரவில்லை. அவர் ரூமில் உட்கார்ந்து இருந்தேன். நிறைய பேர் வந்து வந்து என்னை நோட்டம் இட்டு விட்டு போனார்கள். ஹேமந்த் சேத்தியா என்ற இளைஞன் வந்து "நீங்கள் தான் மிஸ்டர் பாலாவா? வாருங்கள்" என்று என்னை பாக்டரிக்குள் கூட்டிக்கொண்டு ஒரு சிறிய கேபினில் உட்கார்த்தி வைத்து டீ வரவழைத்தான். பிறகு பாக்டரி சுற்றிக் காட்டினான். (எனது தலையும் சேர்ந்து சுற்றியது) ஒரு சிறிய பாக்டரியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் என்று வேலை பார்த்தனர். அங்கே தையல் மிஷின் காதை பிளந்தது. எல்லோரும் மிகவும் மும்மரமாக வேலை பார்த்தனர்.

11.30 க்கு மேல் சுரேஷ் வந்து அவர் ரூமுக்கு அழைத்தார். "என்ன பிடித்திருக்கிறதா?" உனக்கு சம்பளம் 3000 ரூபாய் என்றார். (என்னது நான் எனது பாம்பேயில் ஒர்லி கம்பெனியில் கூட அதை விட அதிகம் வாங்கினேன்...என்ன இது சோதனை என்று நினைத்தேன்). என் முகபாவத்தை பார்த்த அவர் "இங்கே உனது எதிர்காலம் உன் கையில். உன் உழைப்பு தான் உன்னை எதிர்பாராத அளவிற்கு உன்னை எடுத்துப் போகும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பணத்தைப் பார்க்காதே. வேலையைக் கற்றுக் கொள்" என்று அறிவுரை அன்பாக வழங்கினார். சரி, நிச்சயம் இங்கு தான் என் எதிர்காலம் உருவாகப் போகிறது என்று என் உள்மனம் சொன்னது. 

பிறகு நோ லுக்கிங் பாக். இரவெது பகலெது என்று பாராது, அங்கே இருந்த யூசுப் பாய், ஜாஹித், ஹேமந்த்குமார், மற்றும் ஹேமந்த் சேத்தியா அனைவரிடமும் தோல் எப்படி வருகிறது ? அது எப்படி தோலாடை ஆகிறது? அதில் என்னென்ன பிராசஸ் இருக்கிறது என்று ஒரு அடிமட்ட ஊழியர் வரை சென்று கற்றுக் கொண்டேன். சில நேரம் இரவு தங்கி பேக்கிங் கூட செய்தேன். தோல் இன்ஸ்பெக்ஷன் செய்தேன். கொஞ்சம் லெதர் ஹாண்ட் கட்டிங் செய்து பார்த்தேன். சில கார்மெண்ட்ஸ் இன்ஸ்பெக்ஷன் செய்தேன். இப்படி தையல் தவிர எல்லாமே கற்றுக் கொண்டேன். போனில் நான் அளித்த ரிப்போர்ட் எல்லாம் பார்த்து மிகவும் மகிழ்ந்து போனார் எம் டி லோடா சார்.  

ஒரு தோலை எடுத்து முகர்ந்து பார்த்தால், தொட்டுப் பார்த்தால் கூட என்னால் சொல்லி விட முடியும் அது என்ன வெரைட்டி என்று. அந்த அளவிற்கு வேலை கற்றுக் கொண்டேன். லோடா சாரின் நண்பர் (கே சி பி நிறுவனத்தின் உயர் அதிகாரி திரு ராமன்) அவர்களின் மகன் ரவி எனது மாணவன் ஆனான் (பிறகு ஆர் ஆர் இண்டஸ்ட்ரீஸ் தொடங்கினார் - அது வரலாறு).  அதற்குப் பிறகு சில நாட்களில் எம் டியின் ஒரே  மகன் திரு ராஜேஷ் லோடா (லண்டன் படிப்பு படித்து திரும்பி)  எனது மாண்புமிகு மாணவன் ஆனான்(ர்). நிறைய ரிப்போர்டிங் சிஸ்டெம் (டைலி, வீக்லி, மன்த்லி )  உருவாக்கினேன்.

காஸ்ட் கட்டிங் செய்து செலவைக் குறையச் செய்தேன். கட்டிங் மற்றும் டைலரிங் செய்யும் போது தவறுகள் நடந்தால் அசால்ட்டாக அடுத்த லேதரை எடுத்து தருவதைப் பார்த்து அதற்கு தவறு செய்தவரின் ஓ டி சம்பளத்தில் பிடித்தம் செய்யும் விஷயத்தை உருவாக்கினேன். பிறகு தவறுகள் சற்று குறைய ஆரம்பித்தது. சுரேஷ் சார் கம்பனிக்கு இருந்த 11 ஆம் நம்பர் பாக்டரி, மற்றும் பெரம்பூர் பாக்டரி என்று நிற்காமல் சுற்றிக் கொண்டு இருப்பார். தவிர, கம்பெனிக்கு வரும் வெளிநாட்டு பையர்களை  (வெள்ளைக்காரன்) கூட்டிக் கொண்டு வருவது, பாக்டரி சுற்றிக் காட்டுவது, பிறகு அவர்களோடு ஹோட்டலில் அமர்ந்து பேசி ஆர்டர் வாங்குவது என்று எப்போதும் பிசி. ஆக, இந்த பாக்டரி ஓரளவுக்கு எனது கட்டுக்குள் வந்தது.

திடீர் என்று எம் டி சாரிடம் இருந்து ஒரு போன் கால் (அப்போது எங்களிடம் டயல் செய்யாமல் எடுத்த எடுப்பில் பேசும் வசதி கொண்ட ஹாட் லைன் இருந்தது). வந்தது. "பாலா நீ எங்கே இருக்கிறாய்?", "பாக்டரியில் தான் சார்". "சரி வண்டி இருக்கா ? உடனே கிளம்பி ஹெட் ஆபீஸ் வா" என்றார். அப்போது நான் அப்பாவின் டிவிஎஸ் வைத்திருந்தேன். உடனே பறந்தேன் பாரீஸ். எம் டி எனக்காக காத்துக் கொண்டு இருந்தார். அவர் எப்போதும் ஒரு வெள்ளை அம்பாசிடர் வைத்து இருப்பார். அதில் இருவரும் ஏறினோம். நான் முன் சீட்டில் ஏறப் போனேன். 'இங்கே என் பக்கத்தில் உட்கார்' என்று ஏற்றுக் கொண்டார். நாங்கள் எங்கே போகிறோம் என்று மெதுவாக கேட்டேன். 'உனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் இருக்கிறது' என்றார். அதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய அந்த இடம் வந்தது. மிகப்பெரிய கேட். ஒரு கூர்க்கா ஓடி வந்து சலாம் [போட்டு கதவைத் திறந்தான்.உள்ளே போனால் சுமார் 9000 சதுர அடி காலி ஹால், பால்கனி, பின்னால் ஸ்டோர்ஸ் ஏரியா, மேலே முதல் மாடியில் ஆபீஸ் ரூம் என்று இருந்தது. அது கந்தன்சாவடி (ஓ எம் ஆர் ரோட்டில்).  "வா போகலாம்" என்றார்.

காரில் ஏறியதும் "எப்படி இருக்கிறது? பிடித்திருக்கிறதா?" என்று கேட்டார். என்னை ஏன் கேட்கிறார் ? "நான் இதை வாங்கி விட்டேன், 150 மெஷின் போடலாம் என்று பிளான் செய்துள்ளேன்'  என்றார். அது மட்டுமா? "நாளை நாம் மார்ஷல் ரோட்டில் ஏர் இந்தியா பில்டிங் மூன்றாம் மாடியில்  சந்திப்போம். நான் சொல்லும் வரை யாரிடமும் மூச்சு விடாதே" என்று சொல்லி என்னை மீண்டும் பாரீஸ் ஆபீஸில் இறக்கி விட்டு அவர் கிளம்பினார். இப்போது நான் வேலைக்கு ஓராண்டுக்கு சற்று மேலாகி இருந்தது. எனக்கு 'கைனடிக் ஹோண்டா' புது வண்டி (அப்போது ராணி சீதை ஹாலில் திறந்திருந்த புதிய ஷோ ரூமில் பர்ஸ்ட் எடிஷன் வண்டி) வாங்கி கொடுத்தார்  எம் டி. அதை எப்போதும் எங்கள் பேக்டரி கூர்க்கா தான் ஸ்டாண்ட் போடுவார். அது அவ்வளவு வெயிட். (அந்த வண்டி ஒரு சென்டிமெண்டாக இன்னும் வைத்திருக்கிறேன் பெயிண்ட் செய்து, நன்கு சர்வீஸ் செய்து)

மறுநாள் அவர் சொன்னது போல மிகப் பெரிய ஆச்சரியம் காத்து இருந்தது எனக்கு.

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

1 comment:

  1. Very nice, Ramani.As I know some of the happenings written by you, it was very interesting to read. From one more Sekar Anna.

    ReplyDelete