Saturday, July 3, 2021

நீங்கா நினைவலைகள் - 9

 நீங்கா நினைவலைகள் - 9

- பாலசாண்டில்யன் 


பள்ளி வாழ்க்கை வேறு. கல்லூரி வாழ்க்கை வேறு. இப்போது ஐயா முழு பாண்ட். ஆனால் கைவசம் இரண்டு தான் ஒன்று லைட் ப்ளூ கலர் இன்னொன்று காக்கி கலர். கொஞ்சமும் மாட்ச் ஆகாத இரண்டு அரைக்கை சட்டைகள். யாரும் நம்ப மாட்டார்கள் நான் காலேஜில் படிக்கிறேன் என்றால். உயரம் ஐந்து அடிக்கும் கீழ். எடை ஐம்பது கிலோவிற்கும் கீழ். மாநிறம்.  அந்த பழைய விதவிதமா போட்ட அரை நிஜார் எல்லாம் இப்போது அடுத்த வாரிசுக்கு சென்றது. சிலவற்றை மட்டும் வீட்டுக்கு  போட்டுக் கொள்ள வைத்துக் கொண்டேன். விதவிதமாக டிரெஸ் போடும் பந்தா காலம் நிறைவுக்கு வந்தது. 

கல்லூரியில் எல்லோரும் என்னை விட உயரமாக, பருமனாக இருந்தனர். வாத்தியார் எல்லாம் ஆங்கிலத்தில் பொளந்து கட்டினர். பள்ளிக்கூடம் தமிழ் மீடியம். பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை பார்ப்பது போல பேந்த பேந்த முழித்தேன். அங்கேயும் இடை இடையே சொல்லித்தர சில நண்பர்கள் கிடைத்தனர். சில நாட்கள் ட்ரெயினில் போனேன். ஒரே ஸ்டேஷன். பிறகு நடக்க வேண்டும். சில நாட்கள் புதூர் ஹை ஸ்கூல் பஸ் ஸ்டாப் சென்று பஸ்ஸில் போனேன். கையில் அம்மா சாப்பாடு கட்டிக் கொடுப்பார். காலேஜில் கான்டீன் சிறியதாக இருந்தது. இருந்தாலும் நான் போனதில்லை. 

ஒரு நாள் நான் எனது டிபன் டப்பாவை திறந்து சாப்பிட ஆரம்பித்தேன். பக்கத்தில் ஆறடி உயரம் ஆராமுதன் வந்து "என்ன சாப்பாடு டா" என்று என் டப்பாவை எட்டிப் பார்த்தான் . "ரசம் சாதம், பொரியல்" என்றேன். அவன் "உவ்வ " என்று ஒமட்டிக் காட்டினான். வந்ததே எனக்கு கோபம்.  என்னடா என் சாப்பாடு அவ்வளவு கேவலமா ? அப்படியே  எச்சைக் கையோடு அவன் கன்னத்தில் ஒன்று விட்டேன். அவ்வளவு தான். பாலு அடித்து விட்டான் என்று ஒரு கூட்டமே கூடி விட்டது. என் நண்பன் மைக்கேல் எனக்கு சப்போர்ட். டேய், இந்த லூசு தாண்டா அவனை உசுப்பி விட்டான். தப்பு பாலு மேல இல்ல என்று சொன்னதும் "அப்பாடா தப்பித்தோம், இல்லாவிட்டால் காலேஜ் பிரின்சிபால் முன்னால் போய் நின்று இருப்பேன்" என்று கடவுளுக்கு நன்றி சொன்னேன். ஒரு சின்ன ஹீரோ ஆனேன். டேய் அவன் பார்க்க தான் பொடியன், கோபம் வந்தா அவ்வளவு தான் என்று சிலர் பேசினர். பிறகு நானும் ஆராமுதனும் நல்ல நண்பர்களானோம். அவன் என் வீட்டுக்கு வந்து என் அம்மா சமையலை ரொம்ப சிலாகித்தான்.

காலேஜில் என்னுடைய முந்திய பாட்ச்சில் மறைந்த ராமசாமி (அயோத்யா மண்டபத்தின் செயலர் மற்றும் ஸ்டெனோகிராபர் கில்ட் தலைவர்) அவர்களின் தம்பி சங்கர் தான் தமிழ் இறை வணக்கம் பாடுவார். அதாவது "ஓம் நமோ அரிஹந்தானம்" எனும் ஜெயின் பாடலுக்கு பிறகு பாடப்படும் பாடல் பாரதியின் "வெள்ளைத்தாமரை பூவில் இருப்பாள்". அந்த பாடலை நான் படித்த ஆண்டு முழுதும் பாடும் வாய்ப்பை சங்கர் ஏற்படுத்திக் கொடுத்தார். அதனால் கல்லூரியில் எந்த நிகழ்வு என்றாலும் நிச்சயம் அங்கே நான் உண்டு. பலருக்கு என்னைத் தெரிந்தது. கல்லூரி தாண்டி அனைத்து கல்லூரி பேச்சு போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று போய் சில பல பரிசுகள் வாங்கினேன். 

எனது தமிழ் ஆசிரியர் சுந்தர் சார் (சுட்டி பத்திரிகை ஆசிரியர் என்று பின்னால் தான் அறிந்தேன். அதுவும் எனது வகுப்புத் தோழன் சிறந்த கவிஞன் மறைந்த திருநின்றவூர் பாண்டுரங்கன் சொல்லித் தான் எனக்குத் தெரியும்) என்னுடைய மிகவும் பிடித்த ஆசிரியர் என்பேன். அப்போதைக்கு எனக்கு எகனாமிக்ஸ், ஜியோகிரபி தான் மிகவும் கடினமாக இருந்தது. ஈகுவேட்டர் என்றால் பூமத்திய ரேகை என்று கூட நான் அறிந்திருக்கவில்லை. 

எப்படியோ கல்லூரி வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் ஒரு பிப்ரவரி மாதம் எனக்கு டைபாய்டு ஜுரம் வந்து படுத்த படுக்கையானேன். அம்மா அப்பாவால் என்னை சமாளிக்க முடியவில்லை. வீட்டில் மற்ற குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். பாட்டியை பார்த்துக் கொள்ள வேண்டும். எனது பெரியப்பா "கவலைப்படாதே நான் கூட்டிண்டு போய் அவனை வெச்சுக்கிறேன்" என்று  அவர் இருந்த நுங்கம்பாக்கம் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனார். சுமார் ஒரு மாதம் கம்ப்ளீட் ரெஸ்ட். காலேஜ் லீவ். இளைத்துத் துரும்பானேன். உடம்பு தேறிட டானிக் கொடுத்தார்கள். ஏற்கனவே படிப்பில் புலி. இப்போது கேட்கவும் வேண்டுமோ? இன்னும் ஒரு மாதத்தில் பி யு சி பரீட்சை. நான் டிகிரி படிப்பு தேர்வு செய்ய வேண்டிய முக்கிய பரீட்சை என்று இங்கே சொல்லவும் வேண்டுமோ? வழக்கம் போல வீட்டில் விவாதம். இந்த ஆண்டே எழுதலாமா அல்லது ஆறு மாதம் கழித்து எழுதலாமா ? ஒரு ஆண்டு வேஸ்ட் ஆகி விடுமே என்று பல்வேறு கருத்துக்கள்.

என் நண்பர்கள் இருவர் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் பேசினர்  "அங்கிள் பாலு வந்து எழுதட்டும், நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம்". ஆனால் நான் ரொம்ப வீக் ஆகி இருந்தேன். முடிவெடுத்த படி பரீட்சை எழுதினேன். ரிசல்ட் வந்தது. நான் செகண்ட் கிளாஸ் (அப்படித்தானே சொல்லி சமாளிக்க வேண்டும்) அதாவது 57.5% சதவீதம். இது பி காம் சீட்டு பெற போதுமா ? எந்த காலேஜில் இடம் கிடைக்கும் ? மறுபடியும் வீட்டில் களேபரம். அப்பாவுக்கு ஆயிரத்தெட்டு டென்சன். அப்போது அவர் ஹிந்தி பரீட்சை எழுதி பாஸ் செய்ய வேண்டும். அது மிக அவசியம். தவிர, அவர் ப்ரோமோஷனுக்கு வேற முயற்சி செய்து கொண்டிருந்த சமயம் அது. தம்பி தங்கைகளுக்கு பீஸ் கட்ட வேண்டும். அதெல்லாம் எனக்கு பெரிதாக ஒன்றும் புரியவில்லை. 

நான் ஹிந்தி கிளாஸ், டைப் ரைட்டிங் என்று சில வகுப்புகளுக்கு வேறு சேர்ந்து இருந்தேன். எல்லாம் அப்போது எல்லோரும் செய்த விஷயம் தான். நல்ல வேளை ஷார்ட் ஹாண்ட் கிளாசுக்கு போகவில்லை. தவிர, கொஞ்சம் கவிதைப்  பைத்தியமும் சேர்ந்து கொண்டது.  

நான் டைப் ரைட்டிங் கிளாஸ் போன 'முருகன் டைப் ரைட்டிங்" (இப்போது இருக்கும் சாரதா ஸ்டோர்ஸ் மேல் மாடியில்) சொல்லிக்கொடுக்கும் இன்ஸ்ட்ரக்டர் சொர்ணவேலு மிகச் சிறந்த கவிஞர். தவிர, நான் எனது கல்லூரி தோழன் ஸ்ரீனிவாசன், வேணுகோபாலன் (இந்தியன் வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்), எங்களை வழி நடத்த சந்திரமௌலி (கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக புகழ் பெற்ற எழுத்தாளர் கவிஞர் சிறுபத்திரிகை ஆசிரியர் - விருட்சம், நவீன விருட்சம், விருட்சம் வெளியீடு நடத்தும் திரு அழகியசிங்கர்) என்று ஒரு பட்டாளமே அடிக்கடி கூடி 'இளங்கவிஞர் இயற்றமிழ் மன்றம்' என்று வைத்து காரே பூரே கவிதைகள் வாசிப்பேன். ஒரு முறை எங்களை வ வே சு அவர்களின் (தி நகர் வீட்டு மாடியில்) வீட்டில் நடக்கும் கவியரங்கிற்கு அழைத்துப் போனார். பிடிவாதமாக நானும் ஒரு கெக்கே புக்கே கவிதை வாசித்தேன். ரொம்ப சுமார். பொறுத்துக் கொண்டனர் வானவில் ரவி அண்ணா மற்றும் வ வே சு சார் போன்றவர்கள்.

அப்பா இதனை கவனித்து விட்டு சொன்னார்," இந்த கவிதை உனக்கு சோறு போடாது, குளித்தலையில் செய்தது போல வேண்டாம். ஒழுங்காக படிப்பில் கவனம் செலுத்தினால் உனக்கு நல்லது" என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். அது காதில் விழுந்தாலும், ஒன்றும் பெரிதாக மனதில் ஏறவில்லை எனக்கு. மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டேன்.

இப்போது இரண்டொரு மாதம் எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம். ஆனால் டிகிரி படிக்க எந்த காலேஜில் அப்ளிகேஷன் வாங்க வேண்டும் என்ற கேள்விகள். பதில் ஒரே மாதிரி தான். ரயில் எங்கே போகுமோ அதைப் பார்த்து வாங்கு என்பதே அது. எனக்கு அப்போது இருந்த சாய்ஸ் லயோலா கல்லூரி, கிறிஸ்டியன் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, ஏ எம் ஜெயின் கல்லூரி. இப்போது இந்த நான்கு கல்லூரி அப்ளிகேஷன் வாங்கியாகி விட்டது. 

எங்கிருந்து நமக்கு அட்மிஷன் கார்ட் வரும் ? மனதில் படபடப்பு தொடங்கியது. எனது ஜுரம் பற்றிய விஷயம் அப்பாவிற்கு நினைவுக்கு வரவில்லை. நான் ஒரு 70% மார்க் வாங்கி இருந்திருக்கலாமே என்று மட்டுமே அவருக்கு தோன்றியது. அந்த எதிர்பார்த்த அட்மிஷன் கார்ட் வந்தது. இப்போது அடுத்த கட்டம். எந்த கல்லூரி ? என்ன படிப்பு ? சொல்லுவோம்ல. 

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும். 

No comments:

Post a Comment