Tuesday, July 27, 2021

நீங்கா நினைவலைகள் - 33

 நீங்கா நினைவலைகள் - 33

- பாலசாண்டில்யன் 

1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் லெதர் ப்ரொடக்ட்ஸ் நிறுவனத்தில் நான் 1997 ஆம் ஆண்டு இணைந்தேன். தோல் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. டாலர் ரேட் ஏற்றுமதியை மிகவும் பாதித்தது. தவிர, நிறைய நிறுவனங்களுக்கு பல வகையில் நஷ்டங்கள் ஏற்பட்டது. பல நிறுவனங்கள் நலிவு காரணமாக மூடத் தொடங்கினர். பிற துறையோடு ஒப்பிடும் போது சம்பளமும் தோல் துறையில் குறைவு என்றான நிலையில் இளைஞர்கள் பிற துறைக்கு செல்லும் முடிவெடுத்தனர். தோல் துறையைத் தேர்வு செய்து படித்து வேலை தேடும் இளைஞர்கள் குறைய ஆரம்பித்தது என்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. 

BC/MBC/Minorities (பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்) துறை வழங்கும் இலவச படிப்பு, மற்றும் உறுதியான வேலை வாய்ப்பு தருகிற முக்கிய பயிற்சி நிறுவனமாக எங்கள் நிறுவனம் இருந்தது. 5000 க்கும் மேற்பட்டோர் அப்படி பயனடைந்தனர். அதே போல SC/ST (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்) பிரிவுக்கு தாட்கோ நிறுவனத்தின் மூலமாக சுமார் 10000 பேருக்கு எங்கள் நிறுவனத்தின் மூலம் மாத உதவித்தொகையுடன் கூடிய இலவச பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. அரசுத் திட்டங்களுக்கு செய்து முடித்த பிறகு பேமெண்ட் வாங்குவது எப்போதும் கடினமான ஒன்று. நானும் சுகுமாரும் கஜினி முகமது போல படை எடுப்போம். நல்ல வேளையாக தாட்கோ (SC/ST பயிற்சிகளுக்கு) நிறுவனத்தின் ஜி எம் ஆக பொறுபேற்று எங்களுக்கு மிகவும் உதவியது எனது நண்பர் திரு மாரிச்சாமி அவர்கள் தான் என்பதை இங்கே பதிவு செய்தே ஆக வேண்டும்.

அப்படி 2004 ஆம் ஆண்டு எங்கள் நிர்வாகம் எங்களது தொடக்க நிறுவனம் 'அனைத்திந்திய தோல் பதனிடுவோர் சங்கத்தின்' சொந்த நிலம் குரோம்பேட்டை, திருநீர்மலை ஹை ரோட்டில் பயிற்சி நிறுவனத்தை மாற்றிடும் முடிவை எடுத்தது. அதற்கேற்ப புதிய இடத்தில் லே அவுட், லைட்டிங், ஜெனெரேட்டர் என்று பல விஷயங்களை ஏற்பாடு செய்து அதிக ரூபாய் செலவில் மொத்த இயந்திரங்களையும் தளவாடங்களையும் மாற்றினோம். (எனக்கு கந்தன் சாவடி பாக்டரி நினைவுக்கு வந்தது). அங்கே சென்ற பிறகு தோல் துறை நிறுவனங்கள் எங்களிடம் ஆட்களை அனுப்பி பயிற்சி பெறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதில் எங்கள் டீமுக்கும் எங்கள் நிர்வாகத்திற்கும் பெருத்த ஏமாற்றம் தான். அந்த இடம் மெயின் ரோட்டில் இருந்து 2 கி மீ  தூரம். ஒரே ஒரு பஸ் எப்போதாவது வரும். ஆக எங்கள் நிறுவனத்தை அடைவது மிகவும் சிரமம். வழக்கம் போல அரசுத் திட்டத்தின் கீழ் மாணவர்கள், சிற்சில நிறுவனங்களின் பயிற்சி இவை மட்டுமே நடந்தான. வழக்கம் போல வாடகை, மின்சாரம், ஊழியர்களுக்கு சம்பளம் என்று செலவுகளை மிகவும் நெருக்கடியில் சமாளிக்க வேண்டிய மிகவும் கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டோம். 

அப்படி 2007 வரை நான் மற்றும் எங்கள் ரெஜிஸ்திரார் திரு சுகுமார் மிகப்பெரிய முயற்சிகள் மேற்கொண்டோம். இனி நிச்சயம் கஷ்ட காலத்தின் தொடக்கம் என்று புரிய ஆரம்பித்தது. அடுத்த போர்ட் மீட்டிங்கில் என்னை பெரிய அளவில் கேள்விகள் கேட்டு அழுத்தம் கொடுத்தது போர்ட். நான் வேறு வழியின்றி எனது தோல்வியை இயலாமையை ஒத்துக்கொண்டு  ராஜினாமா கடிதம் கொடுத்தேன் 10 ஆண்டுகளுக்கு பிறகு. அந்த கஷ்டத்திலும் எனக்கு செட்டில்மென்ட் கொடுத்து அனுப்பினர். வயது 47, இரண்டு குழந்தைகள், வழக்கமான பிபி, சுகர் எல்லாம் வேறு வந்து விட்டது. எல்லாமே இந்த பணி அழுத்தம் காரணமாகத் தான். அப்பா, என் மனைவி, என் மகள் எல்லோருக்கும் டென்க்ஷன் தான். அந்த முக்கிய தருணத்தில் எனக்கு உடனடியாக வலுவில் வந்து உதவியது எனது மிக நெருங்கிய நண்பர் ஆடிட்டர் NRK அவர்கள் (உடன்பிறவா சகோதரர்). நான் வேலையை விட்ட அடுத்த வாரமே ஒரு IT நிறுவனத்தில் வைஸ் ப்ரெசிடென்ட் வேலையை எளிய நேர்முகத் தேர்வின் மூலம் பெற்றுத் தந்தார். ஆபர் லெட்டரை மீண்டும் பெற்றோரிடம் கொடுத்து காலில் விழுந்து ஆசி பெற்றேன். என் தந்தைக்கு பெரிய மன நிம்மதி. வேளச்சேரியில் எனது ஆபீஸ். எனது டீமில் சுரேந்தர், ஜெயஸ்ரீ போன்ற சுமார் 10 இளைஞர்கள் இருந்தனர். 

இதற்கிடையில் நான் அந்த ஐ டி கம்பெனியில் இருந்து வீடு வர தினமுமே நேரம் ஆனது. நான் வரும் வரை அப்பா தூங்க மாட்டார்.. என் மனைவி சாப்பிட மாட்டார். அப்படி ஒரு நாள் லேசாக மழை பெய்யும் அந்த அக்டோபர் 24, 2007  இரவு வழக்கம் போல நானும் எதிர் வீட்டில் வசித்த (அம்மா அப்பா) அப்பா எனக்கு குட் நைட் சொல்லி கதவைத் தாளிட்டார். மணி இரவு 10.45 இருக்கும். நான் படுக்கைக்கு சென்று வழக்கம் போல மெடிடேஷன், பிரார்த்தனை எல்லாம் செய்து கொண்டு மெத்தையில் அமர்ந்து கொண்டு இருந்தேன். மணி 11.10 இருக்கும். 'தட தட' என்று கதவு இடிக்கப்படும் சத்தம். நானும் எனது மனைவியும் ஓடிப்போய் கதவைத் திறந்தால் எதிர் பிளாட்டில் அப்பா அப்படியே மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் வந்து அப்பாவுக்கு கை கால் தேய்த்தனர். நான் எனது மடியில் அவரை படுக்க வைத்துக் கொண்டேன். அவர் வாயில் இருந்து 'புஸ் புஸ்' என்று இரண்டு மூன்று முறை காற்று வந்து அடங்கிப் போனது. உடல் சில்லென்று ஆக ஆரம்பித்தது.

இந்த அகால சம்பவம் நடைபெறும் ஒரு வாரம் முன்பு (எப்போதும் மனதுக்கு புலப்படாத அந்த இன்விசிபிள் வால் எனும் மனப்போர் அப்பாவுடன் இருந்து கொண்டே இருந்தது வெகுநாளுக்கு - அவர் என்னை சிறு வயதில் பாம்பே அனுப்பியது குறித்து - பிறகு தான் புரிந்தது அது எனது நனமைக்கு. அதனால் தான் இவ்வளவு தூரம் வளர முடிந்தது என்று) நண்பர் தமிழினியன் கொண்டு வந்த 'அன்புள்ள அப்பா' எனும் கவிதை நூலில் எனக்கு எனது அப்பா பற்றி எழுத இரண்டு பக்கம் ஒதுக்கி இருந்தார். எனது கவிதையின் கடைசி வரிகள் இப்படி இருந்தன - "அப்பா உன்னை தாமதமாகத் புரிந்து கொண்டேன். அதனால் என்ன ? எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு நீயே அப்பா" என்று. அந்தக் கவிதையை அவர் படித்து மிகவும் சிலாகித்து என் அம்மாவிடம் மிகவும் அழகாக எழுதி இருக்கிறான் என்று சொல்லி இருக்கிறார். அவரது இறுதிச் சடங்குக்கு வந்த சுமார் 300 பேருக்கு அந்த கவிதையின் நகல் எடுத்து வழங்கினேன். எல்லோரும் படித்து விட்டு கண்ணீர் சிந்தினர். சிலர் என் தோளைத் தொட்டு பரிவுடன் அமுக்கினர் " நீ மிகவும் அதிர்ஷ்டம் செய்தவன்" என்று சொல்லி. 

அவர் வைஸ் ப்ரெசிடெண்ட் ஆக சம்பளம் இன்றி தன்னார்வத்தோடு வேலை பார்த்த (வீட்டுக்கு அருகில் உள்ள) பப்ளிக் ஹெல்த் சென்டர் அவரை எடுத்துக் கொண்டு விரைந்தோம். டாக்டர் 'சாரி, பிராட் டெட்' என்று உதட்டைப் பிதுக்கினார். இப்போது அப்பா இல்லை. எனக்கு மேலும் பொறுப்புகள் கூடின.

எனக்கு இந்த ஐ டி முழுக்க முழுக்க புதிது. எனது வேலை கார்பொரேட் கம்யூனிகேஷன், மற்றும் புதிய ஊழியர்களுக்கு இண்டக்சன் பயிற்சி தருதல். நிறுவனத்தின் 36 அலைன்ட் நிறுவனங்களின் வெப்சைட் மைன்ட்டைன் செய்வதே எங்கள் வேலை. சரியாக எட்டரை மாதங்கள் மட்டுமே இந்த வேலையில் நான். எம் டி யிடம் எப்படியோ பேசி ரிலீவ் ஆனேன். இப்போது மீண்டும் வேலை இல்லாத பட்டதாரி. 

அடுத்து எனக்கு உதவ முன் வந்தது டாக்டர் நடராஜன் அவர்கள். அவரின் EPIC நிறுவனம் தொடங்கி பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்பதால் என்னை அதில் இயக்குனராக போட்டு அந்த ஐ டி நிறுவனம் கொடுத்த அதே சம்பளம் கொடுத்தார். ஆனால் அப்போது தமிழக அரசே 'தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம்' தொடங்கியது. என்னால் 5 மாதங்கள் தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தும் பெரிய வருமானம் கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை. சாருக்கு  நம்பிக்கை குறையவில்லை. இருந்தாலும், எல்லோரையும் சொந்தமாக தொழில் தொடங்குங்கள் என்று சொல்லிய நாம் ஏன் தொடங்கக்கூடாது என்று எனக்கு மனதில் ஆழமாக தோன்றியது. 

நடராஜன் சாரிடம் ஆசி பெற்று அவர் நிறுவனத்தில் இருந்து ரிலீவ் ஆனேன். மறுபடியும் பழைய குருடி கதவை திறடி. எங்கிருந்தோ வந்த அந்த ஆன்ம பலம். எல்லாம் இறையருள். அப்பாவின் ஆசி. எனது நண்பர் கிரிதரிடம் நான் 'விஷன்' என்று ஒரு பயிற்சி மற்றும் கவுன்செலிங் நிறுவனம் தொடங்கலாம் என்று இருக்கிறேன் என்றேன். அவன் உடனே "விஷன் அன்லிமிடெட்' என்று வையேன் என்றான். செப்டம்பர் 22, 2008 அன்று எனது மனைவி சுகீர்த்தி பெயரில் தொடங்கியது எனது சொந்த பயிற்சி நிறுவனம். நோ கிளையண்ட், நோ பிசினெஸ். பழைய ஐ டி நிறுவனத்தின் நண்பர் சுரேந்தர் நல்ல வெப்சைட் செய்து கொடுத்தார். எனது மகள் நல்ல லோகோ செய்து கொடுத்தாள். முதல் சில மாதங்கள் நண்பர் கிரிதர் அவரின் நிறுவனப் பணிகளில் என்னை ட்ரையினராக இணைத்துக் கொண்டு உதவினார்.

அந்த சுய தொழில் எனும் சவால் நிறைந்த பயணம் தொடங்கியது. பெற்ற அனுபவம் மற்றும் தொடர்புகள் எப்படி இனி உதவும் என்பதே கேள்வி. 

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

No comments:

Post a Comment