Sunday, July 18, 2021

நீங்கா நினைவலைகள் - 24

 நீங்கா நினைவலைகள் - 24

- பாலசாண்டில்யன் 

முகமும் முகவரியும் தந்து பலருக்கு எண்ணிப் பார்க்க முடியாத பெயரையும் புகழையும் பெற்றுத் தந்துள்ள உரத்த சிந்தனை அமைப்பு என்னையும் ஒரு எழுத்தாளராக, பேச்சாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, பாடலாசிரியராக, டிவி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக ஆக்கி பன்முகத் தன்மை தந்துள்ளது என்பது சாயம் பூசப்படாத உண்மை. அன்று நான் கவிதை எழுதியதை விரும்பாத எனது தந்தை பின்னாளில் நான் கவிஞர் எழுத்தாளர் பாலசாண்டில்யனின் தந்தை என்றே தன்னை அறிமுகம் செய்து கொண்டார் (அவர் பப்ளிக் ஹெல்த் சென்டரின் துணைத் தலைவர் என்றாலும்)

 

‘பாலசாண்டில்யன்’ ஆன பிறகு, வளர்தொழில், ஏற்றுமதி உலகம், தொழில் முன்னேற்றம், பொருளாதாரம், ஆனந்த விகடன், லேடீஸ் ஸ்பெஷல், தினத்தந்தி, தினமலர், அமுதசுரபி, கலைமகள், மங்கையர் மலர், இயக்கியப்பீடம், குமுதம் சிநேகிதி, வானொலி, பொதிகைத் தொலைக்காட்சி எல்ல்லாவற்றிலும் எனது கவிதை, கட்டுரைகள், தொடர்கள், சிறுகதைகள், எல்லாமே வெளிவந்தன. (உயர்திரு கீழாம்பூர், டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன், கல்பலதா மோகன், கிரிஜா ராகவன் மேடம், லோகநாயகி மேடம், சேயோன் சார் என்று ஒவ்வொருவருக்கும் இந்த தொடர் மூலம் நன்றியறிதலை தெரிவித்து மகிழ்கிறேன். 

நிச்சயம் ஆரம்பத்தில் என்னை ஊக்கப்படுத்திய அண்ணா ஜெயகிருஷ்ணன் (வளர்தொழில் ஆசிரியர்), திரு மற்றும் திருமதி செல்வம் (ஏற்றுமதி உலகம்), தொழில் முன்னேற்றம் பத்திரிகையின் மெய்யப்பன் சிதம்பரம் போன்றார் தான் எனது தொடரக்ளை எழுத்துலகில் யாருக்கும் தெரியாத சமயத்தில்  எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தினர். 


பிறகு மணிமேகலை பிரசுரத்தின் பிரபலமானவர் புத்தகத்தில் எனது பெயர், முகவரி அச்சில் வந்தது (Appearing for the past 30 years – one among 6000 people in Tamilnadu). அது மட்டுமா? உலகநாயகன் கமல்ஹாசன், விசு சார், டெல்லி கணேஷ் சார், எஸ்பிஎம் சார், எஸ்வி சேகர், கிரேசி சார், மற்றும் பல பிரபலங்கள் பத்திரிகைத்துறை, சினிமாத்துறை, எழுத்தாளர்கள் என  எல்லோரிடமும் பாலசாண்டில்யன் என்ற பெயர் பரிச்சயம் ஆனது. 


தீபாவளி மலர்களில் எனது படைப்புகள் வெளிவந்தன. உரத்த சிந்தனை அமைப்பில் பொறுப்பு, பத்திரிகையில் பொறுப்பு என்று என்னை சிறு சிறு உளி கொண்டு செதுக்கிய பெருமை உடன் பிறவா சகோதரர் உதயம் ராம் அவர்களுக்கும், அவருடன் மெளனமாக என்னை எல்லாப் பணிகளிலும் சேர்த்துக் கொண்ட தலைவர் எஸ்விஆர் இருவருக்கும் 'நன்றி' என்று மட்டும் சொல்லி விட முடியாது. இருப்பினும் சில நேரங்களில் வார்த்தைகளுக்கு நம்மால் வலு சேர்க்க முடிவதில்லை. 

 

உதயம் ராம் அவர்கள் எனக்கு கொடுத்தது புதிய பொறுப்புகள் மற்றும் பரிமாணங்கள், சன் டிவியில் திரு சோ சாருடுடைய 'சோவின் பஞ்சாயத்து' மற்றும் ராஜ் டிவியில் 'துக்ளக் தர்பார்' (சோ சாரின் நினைவாற்றல், அவரது நேர மேலாண்மை, யாருக்கும் அஞ்சாத நேர்மை என்று தனியாக பல பாராக்கள் எழுதலாம்.) மற்றும் டிஎன் சேஷன் அவர்கள் (அவரது எளிமை, பன்முகத்தன்மை யாருமே வியந்து போவர்) கலந்து கொண்ட 'சென்சேஷன்', சிவசங்கரி அம்மாவின் நேற்று இன்று நாளை, விசு சாரின் 'அரட்டை அரங்கம்' (சில சென்னை நிகழ்வுகள்) மற்றும் மறைந்த திரு ஜெயகாந்தனின் 'ஒரு பிரஜையின் குரல்', மற்றும் எஸ்வி சேகர் அவர்களின் 'இனிமே நாங்க தான்', பிறகு அபஸ்வரம் ராம்ஜி அவர்களின் 'பேச்சுக் கச்சேரி' போன்ற அனைத்து டிவி நிகழ்வுகளிலும் என்னை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இணைத்துக் கொண்டு எனது பெயர் டைட்டில் கார்டில் வரவழைத்து பார்த்து பெருமைப்பட்டார், பெருமைப் படவைத்தார். 


பிறகு வேந்தர் டிவியில் 'யுவா' என்ற பிரத்யேக காலை நிகழ்வு என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அதே போல பொதிகை தொலைக்காட்சி திரு சௌமியநாரயணன் அவர்கள் எனக்கு 'மனக்கவலை மாற்றல் எளிது', இளமை இனிமை, ஹலோ உங்களுடன் போன்று பல தொடர் நிகழ்வுகளில் 200 முறைக்கு மேலாக பங்கு பெறச் செய்தார். ரேடியோ மிர்ச்சியில் நண்பர் ஷா மூலம் 32 நிகழ்வுகள், ஜெயா டிவியில் 'அருள் நேரம்' நிகழ்வு மூலம் என்னை வரவழைத்து அழகு பார்த்தவர் திரு ஸ்ரீகவி அவர்கள். பிறகு 'மனமே மனமே' நேரலை நிகழ்ச்சியின் மூலம் ராஜ் நியூஸ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் என்று இது வரை 400 முறைக்கு மேலாக நான் எல்லா டிவி சானல்களிலும் வந்துள்ளேன். இந்த மன மகிழ்வு தரும் நினைவுகளை மறக்க இயலாது. 

 

பாலசாண்டில்யன் என்று பெயர் வைத்துக் கொண்டதால் அன்று முதல் முதல் விக்கிரமன் அவர்கள் சொன்னது போல பல பேர் என்னைக் கேட்காமலே நான் திரு சாண்டில்யன் அவர்களின் மகன் என்றே நினைத்து யூகித்தார்கள். நானே வலியச் சென்று நான் அவர் மகன் இல்லை என்று விளக்கம் சொல்லுவேன். 

 

என்னை சன் தொலைக்காட்சியில் 'வணக்கம் தமிழகம்' நிகழ்வில் நேர்முகம் கண்ட  கிரி ட்ரேடிங் திரு சுரங் டிஎஸ் ரங்கநாதன் அவர்கள் முதல் சந்திப்பில் இருந்து மிக நல்ல நண்பராக மாறினார். பின்னாளில் அவரது  குரலில், கண்ணன் (தமிழ்ப்படம் எனும் படத்தின் இசை அமைப்பாளர்) இசையில், எனது பாடல் வரிகளில், 'சாய் சுமிரன்' எனும் ஷீர்டி பாபா பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை (திரு அனூப் ஜலோடா அவர்கள் ஹிந்தியில் பாடிய பாடல்களை உரிய அனுமதியுடன் நான் மொழிபெயர்த்து எழுதியவை) திருமதி சிவசங்கரி அம்மா அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டு திரை இயக்குனர் திரு வசந்த் சாய் அவர்கள் பெற்றுக் கொண்டார். 


அந்த சிடியில் எனது இயற்பெயராகிய 'பாலசுப்பிரமணியன் கல்யாணராமன்' என்று வெளியானது - பாலசாண்டில்யன் என்று அதில் இல்லை. விழாவின் போது சிவசங்கரி அம்மா, உரிமையாக கூப்பிட்டு, "என்ன இது 'பாலசாண்டில்யன்' என்று போடாமல் நீட்டி முழக்கி (Balasubramanian Kalyanaraman)  வேறு பெயர் போடப்பட்டுள்ளது.  யாருக்கு தெரியும் இந்தப் பெயர், எல்லோருக்கும் உங்களை பாலசாண்டில்யன் என்றால் தானே தெரியும், அடுத்த பதிப்பு சிடியில் சரி செய்யுங்கள்  என்று சொன்னார். அந்த விழாவில் சிவசங்கரி அம்மாவின் எனது மும்பை 1980 களில் ஏற்பட்ட சந்திப்பை, அவரது ஆசியை நினைவு கூர்ந்து பேசினேன். அவர் உடனே எழுந்து 'இப்போது சொல்கிறேன், பாலசாண்டில்யன், நீங்கள் நிச்சயம் மிகப் பெரிய அளவில் இனி அறியப் படுவீர்கள்' என்று ஆசி கூறினார். கண்கள் குளமாகின எனக்கு. 


பின்னாளில் ஜெயா டிவியில் 'காலை மலர்' நிகழ்ச்சியில் இரு முறை, கலைஞர் டிவியில் ரமேஷ் பிரபா சார் நேர்முகம் செய்யும் 'சந்தித்த வேளை', கலைஞர் டிவியில் 'விடியலே வா' நிகழ்வில் இருமுறை, நியூஸ் 7 டிவியின் 'வரவேற்பறை' பொதிகையில் காலை நிகழ்ச்சியில் இருமுறை என்று சிறப்பு விருந்தினராக பங்கேற்றது நிச்சயம் மறக்க இயலாதது. 

 

பெயரியல் நிபுணர் திரு ராஜராஜன் ஒரு முறை இந்தப் பெயர் உங்களுக்கு நிச்சயம் மிகப் பெரிய பலம் என்று வாழ்த்தினார். 


நான் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் முகநூலில் எழுதிய பல்வேறு படைப்புகள் வெற்றிப்படிக்கட்டு, ஜெயிப்பது நிஜம், நினைப்பது முடியும், புது வைரம் நீ உனக்கு, ரீசார்ஜ் நவ், வெற்றி ஒலி, தினம் ஒரு நண்பர் - கற்றதும் பெற்றதும் (2 பகுதிகள்), பிரார்த்தனை, டிப்ஸ் போர் சக்ஸஸ் இன் இன்டெர்வியூ போன்ற பல நூல்கள் வெளி வந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அவற்றில் சில பரிசுகள் மற்றும் விருதுகள் பெற்றுள்ளன. எனது சிறுகதைகள் கலைமகள், அமுதசுரபி, இலக்கியப்பீடம் பரிசுகள் வென்றுள்ளன.


அளவுக்கு அதிகமாக என்னைப் பற்றி நானே இப்படி 'நினைவலைகள்' என்று சொல்லி டாம் டாம் செய்வது எனக்கு நிச்சயம் சற்று சங்கோஜமாக இருப்பதால் மேலும் உள்ள விஷயங்களை இங்கே சொல்லாமல் விடுகிறேன்.


மீண்டும் எனது பணி  வாழ்க்கை பற்றிப் பார்க்கும் முன்பு எனது காதல் விஷயங்கள்,  திருமண வாழ்வு பற்றி எல்லாம் சொல்ல வேண்டாமா?


நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

No comments:

Post a Comment