Tuesday, July 20, 2021

நீங்கா நினைவலைகள் - 26

 நீங்கா நினைவலைகள் - 26

- பாலசாண்டில்யன் 

இந்த நினைவலைகள் பகுதியில் நேற்றைய 'திருமணப் படலம்' பகுதிக்கு எதிர்பாராத அளவிற்கு அன்பு, ஆதரவு, ஆசிகள் கிடைத்தது சென்னை பூமி மழையால் குளிர்ந்ததை விட மனம் சற்று அதிகமாகவே குளிர்ந்து போனது என்பதே உண்மை. அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. இன்றும் நாளையும் தொடர்வது 'நன்மக்கள் (மழலையர்) படலம்'. 


எங்களுக்குத் திருமணம் ஆகி ஓராண்டிலேயே பிறந்த பெண் குழந்தை. எனது மனைவியின் பெயரில் (சுகீர்த்தி) முதல் எழுத்து சு. எனது பெயரில் முதல் எழுத்து (பாலசுப்ரமணியன்) பா. இரண்டையும் இணைத்து சுபா என்று அழைப்பது, சுபாஷிணி என்று வைப்பது. இரண்டுமே முடிவு செய்து வீட்டுப் பெரியவர்களையும் ஒத்துக்கொள்ள வைத்தோம்.

 

அவள் பிறந்த சமயம் எங்கள் இல்லத்தில் எனது சகோதரர்கள், சகோதரி, மற்றும் எனது மனைவியின் தங்கை, தம்பி, யாருக்குமே திருமணம் ஆகவில்லை என்பதால் அனைவருக்குமே சுபா தான் செல்லக்குட்டி

 

அவளுக்கு ஒன்றரை வயது இருக்கும் பொழுதே ஆங்கிலத்தில் ஆப்போசிட் வார்த்தைகள் விளையாட்டு கார்டு வாங்கிக் கொடுத்து இருந்தான் எனது சித்தப்பா பையன். இவள் அதில் இருந்த 30 ஜோடி வார்த்தைகளை எளிதாக கண்டுபிடித்து எல்லோரையும் வியக்க வைப்பாள் . அவளுக்கு சுமார் மூன்று வயது இருக்கும் போது  கிட்டத்தட்ட  200 பாடல்கள் நான் முணுமுணுத்தால் அல்லது விசில் செய்தால் அந்தப் பாடலை கண்டுபிடித்து விடுவாள். ஆனால் அவள் மழலைச் சொற்களில் அந்தப் பாட்டு வித்தியாசமாக இருக்கும். "லவுக்கை லவுக்கை லவ்வு மனசு" என்று பாடுவாள். அது "கையளவு கையளவு மனசு' சீரியலின் டைட்டில் பாடல் என்று பிறகு தான் எங்களுக்குப் புரிந்தது. 

 

அவள் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளியின் ஆண்டு மலர் அட்டையை டிசைன் செய்து தருவாள். கன்ஸ்யூமர் செல், சைன்ஸ் கிளப் இவற்றில் மெம்பர். தவிர பள்ளி நிகழ்வுகளை இவள் தொகுத்து வழங்குவாள். அப்போதே பிரெஞ்சு வகுப்பு, கம்ப்யூட்டர் வகுப்பு, வாய்ப்பாட்டு, கீபோர்டு வகுப்பு என்று எல்லாவற்றிலும் கலந்து கொள்ளுவாள். முறையான கர்நாடக சங்கீதம் மற்றும் பிராசீன சம்பிரதாய பஜனைப் பாடல்கள் கற்றுக் கொண்டாள். 


எங்கள் வீட்டில் டெஸ்க்டாப் வாங்கினோம். எனக்கு அலுவலகத்திற்கு தேவையான பவர் பாயிண்ட் ப்ரேசெண்டேஷன் செய்து தந்து உதவுவாள். அவளை விட ஐந்து வயது சிரியவளாக அவளுக்கு தங்கை சுபீக்ஷா பிறந்து விட்டாள் . அப்போதே அவள் தனது தங்கைக்கு ஒரு தாய் போல நடந்து கொள்ளுவாள்

 

சுபீக்ஷா, சுபாஷிணியை பார்த்து பார்த்து வளரும் மற்றொரு அறிவாளியாக இருந்தாள். அவளும் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளியின் விளையாட்டு, பாடல், ஆங்கிலக் கவிதை, ஆங்கில நாடகம், நிகழ்ச்சி தொகுப்பு, பள்ளி ஆண்டு மலரில் கட்டுரை என்று ஆச்சரியப்படுத்துவாள்.

 

சுபாஷிணி தனது கல்லூரிப் படிப்பில் எல்லா சப்ஜெக்ட்களிலும் யூனிவர்சிட்டி டாப்பர், கோல்ட் மெடலிஸ்ட். அக்காவை விஞ்சி விடும் வேகம் காரணமாக, அதே கல்லூரி, அதே படிப்பு என்று தொடர்ந்தாள் சுபீக்ஷா. தவிர, கல்லூரியில் பெரியவள் பார்லிமென்ட் அமைச்சராக இருந்தாள். இளையவள் துறைச் செயலாளர். தவிர, கல்லூரி பாட்டுப் போட்டிகளில் இளையவள் மூன்று ஆண்டுமே முதல் பரிசு. இருவருமே வாய்ப்பாட்டு, கீபோர்டு, ஹார்மோனியம் எல்லாம் கற்றுக் கொண்டார்கள்.

 

இசையில் மற்றும் விளையாட்டில் இளையவள் பெரியவளை முந்தினாள். சுபீக்ஷா சுமார் 450 முறைக்கும் மேல் ஒரு இசைக்குழு மூலம் மேடைக் கச்சேரி (சினிமா பாடல்கள்) நடத்தி உள்ளாள். தவிர, பிரபல இசை அமைப்பாளர்கள் இசைஞானி இளையராஜா, வித்யாசாகர் போன்றோரின் இசையில் பாடி இருக்கிறாள். பஜனை, கர்நாடக சங்கீதம், சாஸ்திரீய சங்கீதம், ஹார்மோனியம் மற்றும் கீபோர்ட் வாசிப்பு, அனைத்துமே  முறைப்படி கற்று இருக்கிறாள். கேரம் விளையாட்டில் மாவட்ட சாம்பியன், மற்றும் பல டிவி சானல்களில் பாடி இருக்கிறாள்.

 

மூத்தவள் சுபாஷிணி வேலைக்கு போய் (கல்லூரி கேம்பஸ் மூலம் இவள் ஒருத்திக்கு தான் கிடைத்தது) ஐந்து வருடம் ஆகி விட்டது. இளையவள் படிப்பின் ஒரு பகுதியாக கனடா சென்று ஒரு மாதம் படிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட பொழுது, " கவலைப்படாதே நான் இப்போது சம்பாதிக்கிறேன். அவள் கனவை நிறைவேற்ற வேண்டியது எனது கடமை" என்று அனுப்பி வைத்தாள்

 

மூத்தவள் சுபாஷிணி படிப்பின் ஒரு பகுதியாக எடுத்த குறும்படத்தின் (செல்லாத்தாள்) கதாநாயகி உரத்த சிந்தனையின் பல்கலை வித்தகி திருமதி பிச்சம்மாள்.அவர்கள் தான். அந்தக் குறும்படம் கல்லூரியின் விருதுகள் பல பெற்றன. அடுத்து வரும் ஆண்டுகளில் அந்தப் படம் புது அட்மிஷனுக்கு வரும் மாணவிகள் பார்த்து விட்டு தரும் விமர்சனம் ஒரு தகுதியாக மாறியது. அதே போல இளையவள் தனது குறும்படத்தை கனடாவில் கற்றுக் கொண்டு மிகச் சிறந்த ஆங்கிலப் படமாக எடுத்தாள்.

 

மூத்தவளின் கல்லூரி நாட்களிலேயே அவள் 'சிறு தொழில் முனைவர்' எனும் தகுதி பெற்றாள். அவள் செய்த சிறு வணிகம் குறித்து 'குமுதம் சிநேகிதி' பத்திரிகை அட்டைப்படமாக வெளியிட்டது. இளையவள் படிக்க வரும் பொழுது இருவருமே இணைந்து தமது தாயார் பெயரில் 'சுகிர்த்தி மெட்ராஸ்' என்ற முகநூல் பக்கத்தை தொடங்கி செயற்கை தங்க நகைகள் விற்கத் தொடங்கினர். இருவருக்குமே 'படிக்கும் போதே இளந்தொழிலதிபர்' எனும் விருது கிடைத்தது. அதே போல இளையவளின் அட்டைப்பட கட்டுரை 'லேடீஸ் ஸ்பெஷல்' பத்திரிகை வெளியிட்டு ஊக்கம் அளித்தது

 

மூத்தவள் பிரெஞ்சு மொழியின் நான்கு லெவல் (நிலை) கற்றுக் கொண்டு இணையம் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து கூடுதல் வருமானம் பெற்றாள். இளையவள் வெறும் படிப்பு மட்டும் அன்றி கிளாஸ் பையின்டிங் கற்றுக் கொண்டு நிறைய ஓவியங்கள் செய்து பிறருக்கு அவற்றையே பரிசாக வழங்கினாள். அதற்கான கண்காட்சி கூட வைத்தாள்.

 

கூடுதலாக இளையவள் எம்பிராய்டரி, தையல், எல்லாம் கற்றுக் கொண்டாள். மூத்தவள் 'வெர்வ்' எனும் டிசைன் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி பல நிறுவனங்களின் போஸ்டர், லோகோ, பேஸ்புக் பேஜ் செய்து கொடுக்க ஆரம்பித்தாள். பல பிரபல நிறுவனங்களின் லோகோ இவள் டிசைன் செய்த ஒன்றாக இருக்கும். எனது நண்பர்கள் கிரிதர், அஷ்ரப் போன்றோரின் நிறுவன லோகோக்கள் இவள் தயாரித்துக் கொடுத்தது. 

 

2015 ஆம் ஆண்டு எங்கள் வீட்டில் (தரைத்தளம்) என்பதால் வெள்ளம் புகுந்து கொண்டது. அதனை எப்படி மிக சுலபமாக எதிர்கொள்ளுவது என்று எங்களுக்கு சவால் போல நின்று கற்றுக் கொடுத்தது அவர்கள் இருவரும் தான். பிறகு எங்கள் வீட்டை புதுப்பிக்க வேண்டும் என்ற முடிவு எடுத்த பொழுது வீட்டின் முழு இன்டீரியர் டிசைன் இவர்கள் இருவரும் தான். கான்ட்ராக்டர் முருகன் இவர்கள் இருவரின் அசிஸ்டன்ட் ஆனார். வீட்டின் பெயின்டிங், கார்பென்டரி வேலை எல்லாமே இவர்கள் சொன்ன படி நடந்தன. எங்கள் வீடே வருவோர் போவோரின் பாராட்டுக்கு உட்பட்டது என்றால் அது இவர்களால் தான்.



நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

No comments:

Post a Comment