Thursday, July 8, 2021

நீங்கா நினைவலைகள் - 14

 நீங்கா நினைவலைகள் - 14

- பாலசாண்டில்யன் 

எங்கள் அத்தை வீடு ஒரு அபார்ட்மெண்ட். வீட்டு மூன்றாவது மாடியில் இருந்தார் வீட்டு ஓனர். அவர் நம்ம ஊர் வாலி சார் போல. பிரபல மராத்தி பட திரையிசைப் பாடல்கள் மற்றும் கவிதைகள் எழுதும் கவிஞர் மங்கேஷ்  பாட்கோங்கர். ஏற்கனவே அவர் குடியரசுத் தலைவரிடம் பத்ம விருது பெற்றவர். (இப்போது அவர் உயிரோடு இல்லை). அவரது கவிதைகள் இப்போதும் பள்ளியில் மராத்தி பாட புத்தகத்தில் உள்ளன. அவர் என் அத்திம்பேரிடம் வாரம் இரு முறை தமிழ் கற்றுக்கொண்டார் என்பது வரலாறு. அவர் பையன் அபய் எனது அத்தை பையன் சேகருக்கு மிகவும் நெருக்கமானவன். ஒரு முறை என்னை மாடிக்கு அழைத்துப் போய் "இது என் கசின் பாலா மதராஸி, அப்பொப்போ கொஞ்சம் கவிதை எழுதுவான், நான் மட்டும் தான் வாசிப்பேன். பஸ் டிக்கெட்டில் கூட கவிதை எழுதுவான். வாசிக்கா விட்டால் விடமாட்டான் என்று சொல்லி சிரித்து அறிமுகம் செய்தான். நானும் அவரை காலைத் தொட்டு கும்பிட்டு சில கேள்விகள் கேட்டு பேட்டி எடுத்தேன். அவர் பார்க்க குறுந்தாடியுடன் ஒரு விஞ்ஞானி போல இருந்தார். 

எனது அத்தை சமையலில் கில்லாடி, தவிர வீட்டு நிர்வாகம், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், புத்தகம் வாசித்தல், தேவை இல்லாமல் அக்கம் பக்கத்தில் அரட்டை அடிக்காது இருத்தல் என்று சிறப்பான செயல்பாடுகளில் மிளிர்ந்தார். என் மீது பாசமாக இருப்பார்.

அத்திம்பேர் எதுவுமே சொல்லித்தரும் தலைவர் அல்ல. ஒரு நல்ல செய்து காட்டும் இன்ஸ்பிரஷனல் லீடராக இருந்தார். தினம் விடியற்காலை எழுந்து கைகால் சற்று அசைத்து உடற்பயிற்சி செய்து விட்டு, பால் காய்ச்சி டீ போட்டு பிறகு அத்தையை எழுப்புவார். கிச்சனில் உட்கார்ந்து படிக்கும் எனக்கும் டீ போட்டுத் தருவார். சிங்க்கில் இருக்கும் பாத்திரங்களை குழப்பிப் போடுவார். பிறகு வெகு நேர்த்தியாக காய்கறிகள் கத்தியால் நறுக்குவார். நான் பார்த்து அசந்து போவேன். குளித்து விட்டு வரும் போது பாத்ரூமில் இருக்கும் எல்லா துணிகளையும் எடுத்து பளிச்சென்று தோய்த்து மடிக்கோலால் பால்கனி கொடியில் அழகாக உலர்த்துவார். தினமுமே குளித்தவுடன் பாத்ரூம் டைல்ஸ் தேய்த்து பளிச்சென்று வைத்து விட்டுத் தான் வெளியே வருவார். 

சில நேரம் அடுத்தவர் குளிக்க பக்கெட்டில் வெந்நீர் பிடித்து வைப்பார். பிறகு சப்பாத்தி மாவு பிசைந்து அவரே சப்பாத்தியும் இட்டுத்தருவார். அத்தை அதை எடுத்து புல்கா (உப்பி வரும் போது அதன் மண்டையில் ஒரு சொட்டு நெய் விட்டு தடவுவார்) செய்வார். பிறகு எல்லோருக்கும் டப்பா ரெடி ஆகும். அத்திம்பேர் சாப்பாடு எடுத்துச் செல்ல டப்பாவாலா வருவார். இடையில் அவர் நெற்றியில் சந்தனம் அழகாக இட்டுக்கொண்டு சுவாமி முன்னால் அமர்ந்து பூஜை அபிஷேகம்  செய்வார். மிக நேர்த்தியாக உடை அணிந்து ஆபிஸ் கிளம்புவார். மாலை வந்ததும் அத்தையை கூட்டிக் கொண்டு சின்ன வாக்கிங் போய் வருவார்.

ஞாயிறு என்றால் காலையில் சமையல் அறைக்கு விடுமுறை. நானோ என் அத்தை பையன் சேகரோ மாதுங்கா சென்று சவுத் இந்தியன் சொசைட்டியில் சாம்பார் ரசம் கூட்டு கறி அப்பளம் ஊறுகாய் எல்லாமே டிபின் காரியரில் வாங்கி வருவோம். அது நான்கு பேருக்கு போதுமானதாக இருக்கும்.  சாதம் மட்டும் வைத்துக் கொண்டால் போதும். சில சமயம் நான் ஆசைப்பட்டால் எனக்கு குக்கர் வைப்பது, பால் காய்ச்சுவது எல்லாம் அத்தை சொல்லித்தருவார். (காலையில் வாங்கி வந்த ரசம் அத்தை கைமணத்தில் ரிப்பேர் ரசமாக மணக்கும்.) எனக்குத் தான் வீட்டில் பாட்டிகள் இருந்தபடியால் சமயக்கட்டுக்குள் ஆம்பளைக்கு அனுமதி கிடையாதே.

ஞாயிற்றுக்கிழமைகளில் அத்திம்பேரே ஸ்டூலில் ஏறி மின்விசிறி சுத்தம் செய்வது, சிப்பன்டைல் அலமாரி துடைப்பது, ஜன்னல்களை, பால்கனி கம்பிகளைத் துடைப்பது, பிரிட்ஜ் துடைப்பது என்று பயங்கரமாக இறங்கி வேலை செய்வார். இந்த பிஸிக்கல் வேலையே எனக்கு வராது. நான் போய் அவர் அருகில் நின்று ஸ்டூல் பிடித்துக் கொள்ளுவது, ஸ்டூல் நகர்த்திக் கொடுப்பது, கீழே துணி விழுந்தால் எடுத்துக் கொடுப்பது போன்ற அதி சில்லறை வேலைகள் பார்ப்பேன். இதற்கு நடுவில் ஒரு இசைக்களம் நடக்கும். அது தான் அவரிடம் அப்போது இருந்த ஒரு சோனி ஸ்பூல் டேப் ரெக்கார்டர், மற்றும் நூற்றுக் கணக்கில் அவரிடம் இருந்த இசை கச்சேரி ஸ்பூல்கள். ஒன்றை எடுத்துப் பாட வைத்தால் அது மூன்று முதல் ஆறு மணி நேரம் வரை பாடும். அடிக்கடி போடும் சில ஸ்பூல்களின் நம்பர்கள் (ஆம் எல்லாமே அவர் நம்பர் போட்டு அட்டவணை வைத்துக் கொண்டு இருப்பார்) எனக்கு மனப்பாடம் ஆனது. மறக்க முடியாத நம்பர் 5. அது தான் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் கச்சேரி. அதில் அவரே எழுதிய பாடல்கள், அவரே கண்டுபிடித்த ராகங்கள் கொண்ட பாடல்கள் இருக்கும்.

குறிப்பாக, 'உன்னை நினைந்திருக்கையிலே முருகா', சில தில்லானாக்கள், உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகள், சதாசிவ ப்ரம்மேந்திரா கீர்த்தனைகள் சேதக ஸ்ரீராமம், மோகன ராகத்தில் 'ஒற்றுமை சேர்வது மெய்யினையே', மஹதி ராகத்தில் 'மகனீய மதுரமூர்த்தே' எல்லாமே மறக்க முடியாதவை. அப்போதே அவர் எனக்கு அவர் அனுமதி இல்லாமல் மானசீக குரு ஆகிவிட்டார். அதே போல லால்குடி அவர்களின் தில்லானாக்கள், மகாராஜபுரம் சந்தானம் பாடல்கள், எம் எஸ் கோபிலகிருஷ்ணன் அவர்களின் வயலின் கச்சேரி என்று நாள் முழுவதும் ஓடும் அத்திம்பேருக்கு மூடு வந்து விட்டால் கல்யாணி, காம்போதி, சங்கராபரணம், பைரவி என்று ஆலாபனை செய்து அசத்தி விடுவார். ஏன் இந்த ஞாயிறு இவ்வளவு சீக்கிரம் முடிகிறது என்று தோன்றும். நான் சிறு வயதில் அயோத்தியா மண்டபத்தில் கேட்ட பாடல்கள் இன்னும் சரியாக புரிய ஆரம்பிக்கும். அத்திம்பேருக்கு மிகவும் பிடித்த இன்னொரு கலைஞர் கே வி நாராயணசாமி. அவருடைய 'மாஞ்சி' போன்ற அரிய ராகங்கள், பிறகு மதுரை மணி அய்யரின் 'சரஸ சாம கான - காபி நாராயணி' பாடல், மற்றும் காபாலி பாடலும் வீட்டில் முழங்கும். அத்திம்பேர் பாடும் போது மதுரை மணி அய்யரின் ஜாடை நிறைய இருக்கும். 

இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் பாம்பே ரஞ்சனி காயத்திரி சகோதரிகளின் தந்தை பாலு மாமா அத்திம்பேருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவர் மாதுங்காவில் இருந்தார். அவர் சில சமயம் இரவு ஏழரை எட்டு மணிக்கு இருவரையும் கூட்டிக்கொண்டு வருவார். இருவரும் மிக மிக சின்ன குழந்தைகள். ஆனால் இருவரும் மழலை மேதைகள். பாலு மாமா இசை பற்றி மட்டும் பேச மாட்டார். அவர் சில ராகங்களை முனகிக் காட்டுவார். அந்தக் குழந்தைகள் மழலையில் ராகம் பெயர்களை உடனே சொல்லும். அதிலும் காயத்ரிக்கு வாயில் கூட ராகம் பெயர் நுழையாத வயது. இன்று அவர்கள் இவ்வளவு பெரிய வித்துவான்கள் ஆனதை அருகில் பார்த்த அதிர்ஷ்டசாலி நான் என்று சொல்லிக் கொள்ளலாம். (அவர்களுக்கு முழுமையாக நினைவு இருக்குமா என்று தெரியாது). அவர்கள் இவ்வளவு தூரம் வந்தமைக்கு அவர்களின் அயராத உழைப்பு, அவருடைய அம்மா (சிறந்த பாடகி) மற்றும் அப்பாவின் உழைப்பு மற்றும் தியாகம் தான் காரணம். 

நிற்க, ராமதுரை சார் என்னிடம் ஒரு நாள் நீ இங்கே இருந்து சிறப்பாக வேலை செய்தாய். போதும், நான் பட் சாரிடம் சொல்லி உன்னை ரிலீவ் செய்கிறேன். உனக்கு வேறு சிறப்பான வேலை ஏற்பாடு செய்து விட்டேன் என்ற நல்ல செய்தியை சொன்னார். அது மட்டுமா? அவர் சொன்னது இன்று FDC என்று இருக்கும் Fairdeal Corporation என்கிற பார்மசூட்டிக்கல் கம்பெனி, அங்கே சீப் அக்கௌன்டன்ட் சாரின் நெருங்கிய நண்பர் நாயக் சார். அவரும் சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட். அங்கே எனக்கு ஆஃபீசர் கேடரில் வேலை. சம்பளம் ஏற்கனவே இருப்பதை விட இரு மடங்கு. ஆனால் என்ட்ரன்ஸ் டெஸ்ட், இன்டெர்வியூ எல்லாம் நீ பாஸ் ஆக வேண்டும் என்று பீடிகை போட்டார். அங்கே எனக்கான ஏற்பாடுகள் எல்லாமே அவர் செய்து இருந்தார். அந்த பேக்டரி மற்றும் ஆபீஸ் ஜோகேஷ்வரி (கோரேகாவ் முந்திய ஸ்டேஷன்). அதே வெஸ்டர்ன் ரயில்வே தான்.

 என்ட்ரன்ஸ் டெஸ்ட், முடிந்து அதில் சிறப்பான மதிப்பெண் (நாயக் தான் ஏற்கனவே சில விஷயங்களை சொல்லிக் கொடுத்து விட்டாரே), அதற்கு பிறகு பெர்சோனல் மேனேஜர் கேல்கர், அதற்கு பிறகு டைகர் ஜி எம் பிரபு சார் எல்லோரும் சேர்ந்து. பிரபு சார் என்னைப் பார்த்து, "உன்னுடைய லட்சியம் என்ன" என்று கேட்டார். யாரும் சொல்லித் தரவில்லை. ஆனால் நான் ஏதோ சாமி வந்தது போல 'உங்கள் சீட்டு' என்றேன். அவர் நாற்காலி நுனிக்கு வந்து 'என்னப்பா பாலா வந்ததுமே என் சீட்டுல கை வெப்பியா' என்று ஒரு வில்லன் சிரிப்பு சிரித்தார். பிறகு 'என்ன டெஸ்டில் இவ்வளவு மார்க் வாங்கி இருக்கே, முன்னாலேயே கேள்வியெல்லாம் தெரியுமா' என்று கேட்டார். நான் இல்லை என்று புன்னகைத்தேன். அது என்னை அறியாமல் இயல்பாக இருந்தது போலும். 'யு ஆர் அப்பாயின்டெட்' என்றார். சிறிது நேரம் காத்திருக்க சொல்லி ஆர்டர் கொடுத்தார். அந்த சம்பளம் பார்த்து ஒரு முறை என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

ஏற்கனவே நான் வீட்டுக்கு மாதா மாதம் பணம் அனுப்புவேன். தவிர வருடா வருடம் சென்னை வரும் போது தங்கை தம்பிக்கு ட்ரெஸ் வாங்கி வருவேன். அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு மட்டும் அங்கேயே லோக்கலில் அவருக்கு பிடித்த மாதிரி சட்டை வாங்குவேன். தவிர, உறவினர்கள் பலருக்கு சின்ன மிக்ஸி அட்டாச்மெண்ட், சாரி ப்ரோச்சர் என்று வாங்கி வந்து அசத்துவேன். 

இப்போது இந்த புதிய வேலையால் அம்மா அப்பாவை லேக் வியூ ரோடு வீட்டை காலி செய்து இன்னும் பெரிய வீட்டுக்கு போகச் சொன்னேன். ஜெய்சங்கர் தெருவில் நல்லதொரு வீடு கிடைத்தது. குளித்தலை பாட்டிகளும் சென்னை வந்து சேர்ந்து கொண்டனர். அந்த வீட்டை வாடகைக்கு விட்டனர்.  

என் அத்தை பையன் எங்கள் பெரியப்பா பெண்ணை விரும்பினான். அவனுக்கும் முறைப்பெண். அந்த கல்யாணப் பேச்சு அடிக்கடி நடக்க ஆரம்பித்தது. சரி எப்படி இந்த சின்ன இடம் போதும் என்ற எண்ணம் எனக்குள் எழ ஆரம்பித்தது.  யோசிப்பதற்குள் சேகருக்கு திருமணம் ஆகிவிட்டது. இடம் போதவில்லை. என்னுடைய சம்பளம் வேறு ஏறி விட்டது. நான் அத்தை வீட்டை விட்டு பேச்சிலர் ரூமுக்கு போக முடிவெடுத்தேன் அத்தை அத்திம்பேர் ஆசியுடன். 

பாம்பே கதை இன்னும் இருக்கு. இனிமே தான் சுவாரசியம்.

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும். 

No comments:

Post a Comment