Friday, July 2, 2021

நீங்கா நினைவலைகள் - 8

 நீங்கா நினைவலைகள் - 8

- பாலசாண்டில்யன் 

பப்ளிக் எக்ஸாம் என்று எல்லோரும் பயப்படுத்தினார்கள். அடுத்து என்ன படிக்க வேண்டும்? என்ன ஆக வேண்டும் ? எந்த கல்லூரியில் சீட்டு கிடைக்கும் என்ற கவலை என் வகுப்பில் 50 க்கு 46 பேருக்கு இல்லை. திருப்பித் திருப்பி நரசிம்மன், வெங்கடேசன் அதைப் பற்றி பேசுவர். என் மாமா சில சமயம் கேட்பார். சில சமயம் ஜாலியாக இருடா. நல்லா படி. உங்க அப்பா சென்னையில் உனக்கு எப்படியும் காலேஜில் சீட்டு வாங்கித் தருவார் என்று ஊக்குவிப்பார்.

நானும் கண் விழித்துப் படித்தேன். புரியாத விஷயங்ளை டியூஷன் வகுப்பில் மற்றும் நரசிம்மன் மற்றும் வெங்கடேசனிடம் கேட்டுத் தெளிவேன்.

பரீட்சை தொடங்கியது. ஒவ்வொரு நாள் முடிந்ததும் முன்பு போல அம்மா மற்றும் அப்பா இருவரும் எப்படி எழுதி இருக்கிறாய் ? என்ன மார்க் வரும் என்று கேள்வி கேட்பார்கள். நானும் நன்றாக எழுதி இருக்கிறேன். நல்ல மார்க் வரும் என்பேன். சந்தேகத்துடன் பார்த்து அப்பா 'உன் வண்டவாளம் எப்படியும் தெரிந்து விடும்' என்றார்.

அதே போல எல்லா பரிட்சையும் முடிந்தது. "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்" என்று மகிழ்ந்தேன். நிச்சயம் சென்னை தான் என்ற முடிவு அப்பா அறிவித்து விட்டார். நான் அவ்வப்போது 'ஆடிட்டர்' ஆக வேண்டும் என்று உளறுவேன். அப்பா ஏதும் பதில் சொல்ல மாட்டார். அம்மாவுக்கு அது பற்றிய பெரிய அபிப்ராயம் கிடையாது. இப்போது மதிப்பெண் சான்று பெற்றிட பள்ளியில் அறிவிப்பு வெளியானது. வரிசையில் நின்று எனது சான்றிதழைப் பெற்றேன். 

திரும்பத் திரும்ப மதிப்பெண் சான்றை பார்த்தேன். கண்ணில் கண்ணீர் முட்டியது. கைகள் நடுங்கின. வயிற்றில் ஏதோ செய்தது. நான் நன்றாகத் தான் எழுதினேன். வெளியூரில் யார் திருத்தியதோ ! ஏன் இப்படி வந்திருக்கிறது எனது மதிப்பெண் ? எனக்கு கொஞ்சமும் புரியவில்லை. நிச்சயம் அப்பா முதுகை உப்புக்கண்டம் போட்டு டின் கட்டுவார் என்று நினைக்கும் போதே ஈரக்குலை நடுங்கியது. 

ஆங்கிலம், வரலாறு, பூகோளம் இவற்றில் நல்ல மதிப்பெண். அறிவியல், கணிதம், தமிழ் எல்லாமே ரொம்ப சுமார். என்னால் நம்ப முடியவில்லை. எனது சொந்தக்கார ஆசிரியர் பாலு சாரிடம் காட்டினேன். "பரவாயில்லை விடு, திருத்தும் போது இப்படி நடக்க வாய்ப்பு உள்ளது. வேணும்னா நாம டோட்டலிங் அல்லது மறு திருத்தம் என்று அப்பளை பண்ணலாம். உங்க அப்பா கிட்ட பேசிட்டு சொல்லு" என்று சொல்லி அனுப்பி விட்டார்.

அதற்குள் சில வகுப்புத் தோழர்கள் "என்ன பாலு சூப்பர் மார்க் போல நீ தான் பள்ளிக்கூடத்தில் செகண்ட் அல்லது தேர்ட் என்று சொல்லுறாங்க, வாழ்த்துக்கள் பா". முட்டாள்கள் சாம்ராஜ்யத்தில் முடிசூடா மன்னன் போல என்னை நினைத்துக் கொண்டு அருகில் உள்ள மாமா வீட்டுக்கு போனேன். மாமாவும் மாமியும் மிகவும் ஆவலாக மார்க் ஷீட்டை வாங்கிப் பார்த்தனர். மாமா "டேய் என்ன விட நல்லா தாண்டா வாங்கி இருக்கே,,உங்க அப்பா எப்படியும் நல்லா திட்டுவார் பயப்படாதே, ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்து விடலாம்" னு தைரியம் சொல்ல நான் அடக்கி வைத்த அழுகையை சத்தமாக வெளிக் கொணர்ந்தேன். "எல இப்படி ஒப்பாரி வைக்கிற...இது ஒன்னும் உன் வாழ்க்கையோட முடிவில்லடா, புரியுதா" என்றார். அழுகையை நிறுத்தினேன்.

மாமி என்னை அப்படியே கட்டித் தழுவி "ஒன்றும் குடி முழுகி விடவில்லை, இன்னும் எவ்வளவோ இருக்கு, மேல நீ நல்லா படி, நல்ல வேளை நீ திரும்பி மெட்ராஸ் போகப்போறே...அழாதே, ஆம்பிளைப் பசங்க அழக்கூடாது, இது ஒன்னும் மோசமான மார்க் இல்லை, இந்தா டீயை குடி, மாமாவை கொண்டு போய் விடச் சொல்றேன். நீ ரொம்ப டயர்ட் ஆ இருக்கே" என்று சொன்ன ஆறுதல் வார்த்தைகள் எனக்கு டானிக் போல இருந்தது. 

வீட்டில் நல்ல மண்டகப்புடி. ஆனால் அப்பா அடிக்கவில்லை. முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு " நீ வாங்கி இருக்கிற மார்க் லட்சணத்திற்கு எந்த காலேஜ் சீட் கொடுக்கறானோ அங்கே படி. உன் தலை எழுத்தை யாரு மாத்த முடியும். படி படினு சொன்ன போது இந்த பாழாப்போன பசங்களோட லூட்டி அடிச்சே. இப்போ அனுபவி. நான் என்ன பண்ணறது. உன் வாழ்க்கை நீ வாழப் போறே" அந்த உயர் தத்துவ வார்த்தைகள் எனக்கு கொஞ்சம் புரிந்தது, கொஞ்சம் புரியவில்லை. 

அந்த சமயம் தான் எனது இரண்டாவது தம்பி வேறு பிறந்து இருந்தான். நான், அம்மா, அப்பா, பாட்டி, இரண்டு தம்பி, இரண்டு தங்கைகள் என்று எல்லோரும் மெட்ராஸ் புறப்பட்டு வந்தோம். நாங்கள் ஏற்கனவே குடியிருந்த போஸ்டல் காலனியில் வீடு கிடைக்கவில்லை. முன்பு இருந்தது எங்கள் பெரிய தாத்தா வீட்டில். ஸ்ரீனிவாஸ அய்யர் தெருவில் ஒரு ஐந்து போர்ஷன் இருக்கும் வீட்டில் மூன்று ரூம் இருக்கும் ஒரு வீடு கிடைத்தது. மச்சு வீட்டில் இருந்து மீண்டும் குச்சு வீடு. பாத்ரூம் வெளியே. கக்கூஸ் மூன்று போர்ஷனுக்கு காமன். மற்றபடி தெரு முக்கில் பஸ் ஸ்டாப். பத்து நிமிடம் நடந்தால் ரயில்வே ஸ்டேஷன். பின் தெருவில் போனால் அசோக் நகர் புதூர் ஹை ஸ்கூல் பஸ் ஸ்டாப். 

நான் பல கல்லூரிகளுக்கு ஒன்றும் அப்ளை பண்ணவில்லை. அப்பா சொன்னபடி ரயில்வே பாஸ் இலவசம் என்பதால், ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே இருந்த ஓரிரு கல்லூரிகளுக்கு மட்டும் தான் அப்ளை செய்தேன். மேற்கொண்டு பி யூ சி க்கு பிறகு பி காம் படிக்க வேண்டும் என்பது எனது எண்ணம். அதற்கேற்ற குரூப்புக்கு கேட்டு இருந்தேன். பெரிய மனசு பண்ணி கோடம்பாக்கம் மேம்பாலத்திற்கு கீழே இருந்த (பழைய போஸ்ட் ஆபீஸ் அருகே,  நடிகை ஜெயசித்ரா வீட்டுக்கு அருகே) டி பி ஜெயின் காலேஜ் எனக்கு சீட் தர சம்மதம் என்று கார்டு அனுப்பியது. நேரே போனால் காமெர்ஸ், எகனாமிக்ஸ், லாஜிக் கேட்டேன். அதெல்லாம் என்ன எப்படி என்றே எனக்கும் தெரியாது. அப்பாவிற்கும் தெரியாது. அவர்கள் உங்கள் மதிப்பெண்ணுக்கு காமெர்ஸ், எகனாமிக்ஸ், ஜாகிரபி குருப் தான் கிடைக்கும் என்றனர். நான் "இந்த குரூப் எடுத்தா பி காம் படிக்க முடியுமா?" என்று கேட்டு உறுதி செய்தேன். 

அப்பா "டேய் நீ வாங்கியிருக்கிற மார்க்குக்கு இதான் கிடைக்கும். இனிமை நல்லா படி" னு சேர்த்து விட்டார். 

பிறகு அந்தப் படிப்பு எப்படி மடை மாற்றியது என்பது பற்றி அறிய ஆவலா? நாளை தான், ஒரேடியா சொல்லி விட்டா எப்படி ?
 
நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும். 

No comments:

Post a Comment