Thursday, July 22, 2021

நீங்கா நினைவலைகள் - 28

 நீங்கா நினைவலைகள் - 28

- பாலசாண்டில்யன் 

ஐந்து சொந்த பேக்டரி, ஜாப் ஒர்க் பேக்டரி என்றெல்லாம் எடுத்துச் செய்ய காரணங்கள் இருந்தன எங்கள் எம் டி க்கு.

ஒரு நாள் அவர் திருப்பதி செல்ல முடிவெடுத்து விட்டு, மைக்கேல் கோல்ட்மேன் என்று ஒரு அமெரிக்கர் வருவார், ஒரு பெரிய ஆர்டர் பற்றிப் பேச. நீங்கள் எல்லாம் பேசி முடிவெடுத்து விடுங்கள் என்று சொல்லி விட்டு போய் விட்டார். சொன்னது போல அவரும் வந்தார். என் கேபினில் நுழைந்த அவருக்கு வயது 55 அல்லது 58 இருக்கும்.கையில் ஒரு லெதர் ஜாக்கெட் வைத்து இருந்தார். ஹாய் என்று ஆங்கிலப் படத்தில் வருவது போல இருந்தது அவர் குரல். கையில் சிகரெட் இருந்தது. ஆஷ் ட்ரே கேட்டார். நான் 'கோக் ஆர் காபி' என்று கேட்டேன். கோக் என்றார்.

பிறகு இந்த ஜாக்கெட் என்ன விலைக்கு செய்து தருவீர்கள் என்று கேட்டார். நான் ஒரு கார்மெண்ட் பார்த்த மாத்திரத்தில் அதன் நீள அகலம் மற்றும் அது எவ்வளவு லெதர் எடுக்கும்? தற்போது இருக்கும் லெதர் விலையில் என்ன விலைக்கு விற்கலாம் என்று சொல்லுவதில் நல்ல அனுபவம் பெற்று இருந்தேன். (பல நேரம் எங்கள் பிரிட்டிஷ் பையர் அனுப்பும் ஒரு படம் அல்லது ஸ்கெட்ச் மற்றும் அதன் விவரங்களை வைத்து நான் கொட்டேஷன் அனுப்பி விடுவது வழக்கம். அது எனது முக்கிய வேலையாக இருந்தது.) மைக்கேல் காட்டிய ஜாக்கெட் 38 சதுர அடி லெதர் ஆகும். குறைந்தது 52 டாலர் விலை வேண்டும் என்றேன். அவரோ முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு 'இது போன்ற விஷயம் தெரியாத குழந்தைகளோடு நான் வியாபாரம் பேசுவதில்லை' என்று சொல்லி கிளம்ப எத்தனித்தார்.

நான் 'ஜஸ்ட் எ மினிட்' என்று சொல்லி எனது ஆர் அண்ட் டி டிவிஷன் டிஜிஎம் (மறைந்த) திரு தீனதயாளன் அவர்களை இன்டர்காமில் கூப்பிட்டேன். அவர் வந்ததும், எனது அறையில் இருந்த இன்னொரு மேசை மீது மைக்கேல் கொண்டு வந்த ஜாக்கெட்டை கொடுத்து அளக்க சொன்னேன். நான் அவர் அளப்பதற்கு முன்பே அதன் பாக் லென்த், ஸ்லீவ் லென்த், செஸ்ட் விட்த் என்று எல்லாமே சொன்னேன். அவை அப்படியே இருக்க மைக்கேல் எதுவும் பேசாமல் என் டேபிளுக்கு திரும்பி அங்கே வைத்திருந்த கோக் எடுத்து குடித்தார். பிறகு என்னைப் பார்த்து புன்னகைத்து 'இன்று மாலை ஹோட்டல் கன்னிமாரா பாரில் சந்திக்கவும்' என்று சொல்லிக் கிளம்பி விட்டார். 

நான் சரியாக 5.55 க்கே அங்கு இருந்தேன். அவர் பாரில் அமர்ந்து தனது ட்ரிங்க்  ஒன்றை சுவைத்துக் கொண்டு இருந்தார். 'கேர் போர் எ ட்ரிங்க்'  என்று கேட்டார். நான் 'நோ' என்றேன். அவர் குனிந்து தனது பையில் இருந்து ஒரு கவரை எடுத்து என்னிடம் நீட்டி 'கங்கிராட்ஸ் அண்ட் ஆல் தி பெஸ்ட்' என்றார். பிரித்துப் பார்த்த எனக்கு மிகுந்த ஆச்சரியம். 16000 கார்மெண்ட் ஆர்டர் அதே 52 டாலர் விலையில். ஆனால் 9 வாரங்களில் டெலிவரி என்று இருந்தது. எம் டி மூக்கில் வேர்த்தது போல போன் செய்தார். விஷயம் சொன்னேன். அவருக்கு ஏற்கனவே தெரிந்து இருந்தது என்று அவர் குரலில் தெரிந்தது. இருந்தாலும் உற்சாகம் மாறாது எனக்கு வாழ்த்து தெரிவித்தார். மறுநாள் காலை எல்லா பாக்டரி மேனேஜர்களையும் அழைத்து கான்பிரென்ஸ் ஹாலில் உட்காரச் சொல்லி என்னை பேச அழைத்தார். இந்த நல்ல செய்தியை சொல்லி 'எந்த பேக்டரி எவ்வளவு செய்ய வேண்டும் மற்றும் வெளி நிறுவனங்களுக்கு எத்தனை ஜாப் ஒர்க் கொடுத்து எப்படி 9 வாரங்களுக்கு முன்பே ஆர்டரை முடிக்க வேண்டும் என்று பேசினேன்.

அவ்வளவு தான். பரபரப்பு தொற்றிக் கொண்டது. யாருமே சரியாக சாப்பிடவில்லை. தூங்கவில்லை. நேரத்திற்கு வீடு போகவில்லை. மிக கச்சிதமாக சொன்ன தேதிக்கு முன்பே செய்து முடித்து மைக்கேல் மட்டும் அல்ல. மார்க்கெட்டே எங்கள் நிறுவனத்தைப் பேசும் படி செய்தோம். அப்படி ஒரு டீம் ஒர்க். மைக்கேல் அப்போது நான் எழுதிய 'பெட்வீன் யு அண்ட் லெதர் பேஷன்' என்ற ஆங்கில நூலுக்கு மிக அழகிய அணிந்துரை கொடுத்து எனது திட்டமிடல், தன்னம்பிக்கை பற்றி எல்லாம் எழுதி இருந்தார். எம் டி யும் இதனை கொண்டாடும் வண்ணம் முக்கிய உறுப்பினர்களுக்கு நல்ல பரிசு வழங்கினார்.

இப்போது நாங்கள் லீசுக்கு எடுத்த டானரி, அதிக சம்பளத்திற்கு எடுத்த சில உயர் அதிகாரிகள், எம் டி யின் சில நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் செய்த சில தவறுகள் என்று எல்லாமாக சேர்ந்து கொண்டு சுனாமியாக வந்தது நஷ்டங்கள் பல ரூபங்களில். சிலரை வேலையை விட்டு தூக்க வேண்டும். ஜாப் ஒர்க் நிறுவனங்களை நிறுத்த வேண்டும். எங்களின் சிறு பாக்டரிகளை மூட வேண்டும் என்று ஒருமித்த முடிவுகள் எடுத்தோம். அதற்குள் பாக்டரியில் யூனியன் ஆனது. நோட்டீஸ் வந்தது. தலைவலி பிடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

இப்போது நண்பர் எதிராஜன் இந்த விஷயங்களில் மிகவும் கெட்டிக்காரர். நான் அவருடன் சேர்ந்து எழும்பூர் ஹோட்டலில் ஒரு யூனியன் மீட்டிங், டி நகர் ஹோட்டலில் ஒரு யூனியன் மீட்டிங் என்று தொடர் கதையாக செய்ய ஆரம்பித்தோம். அவர்கள் 'யானை' கேட்டார்கள் பாக்டரியை மூடி மக்களை வீட்டுக்கு அனுப்ப. நாங்கள் 'எலி' ஒன்றை காட்டினோம். இப்படி பல ரவுண்டு மீட்டிங்குக்கு பிறகு 'ஆட்டை' விட சற்று குறைவாக நாங்கள் ஒத்துக்கொண்டோம். இப்போது எம் டி ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கு பணம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்குள் சில பேர் கோர்ட் கேஸ் என்று வேறு போயினர். இவற்றை உயர் மட்டத்தில் எதிராஜன் சார் சமாளிக்க, கோர்ட் அளவில் சமாளிக்க சின்னப்பிள்ளை மற்றும் சிலரை எதிராஜன் ஏற்பாடு செய்தார். 

அதற்கு அடுத்தபடி, குழந்தைகள் கடற்கரை மணலில் விளையாட்டாக வீடு கட்டி அதனை அங்கே யாரோ விளையாடிய ஒரு பந்து வந்து விழுந்து வீடு இடிபட்டு பிள்ளைகள் அழும். அல்லது அங்கே ஓடிகிற ஒரு வடிவேலுவின் முட்டாள் குதிரை வீட்டை இடிக்கும். அது போல நானே உருவாக்கி பெரிதாக வளர்த்த அயனாவரம், மற்றும் கந்தன்சாவடி பாக்டரிகளை இப்போது மூட வேண்டும். அங்கே இருந்த மிஷின் மற்றும் ஆணி கோணி வரை நஷ்டம் அதிகம் இல்லாமல் விற்க வேண்டும். விஷயம் சென்னையில் காட்டுத்தீ போல பரவ, இந்த பொருட்களை வாங்க தினம் தினம் மக்கள் வந்து அலைமோதி அடிமாட்டு விலைக்கு கேட்க என்னுடைய சகாக்கள் சேத்தியா, தினேஷ் மற்றும் அர்ஷத் போன்றோர் உதவியுடன் கண்ணில் ரத்தம் வரும் அளவிற்கு பொருட்களை பணம் ஆக்கி தினம் தினம் ஸ்டேட்மென்ட் போட்டு அனுப்பி வைத்தோம். 

ஒரு பக்கம் என்னையும், எதிராஜனையும் ஒரு வழி பண்ண சிலர் திட்டம் போட்டு இருந்தனர். அவற்றை எல்லாம் சமாளிக்க எங்களுக்கு இறையருள் தான் உதவியது. எல்லாமே முடிந்து போனது. எல்லாம் கைவிட்டுப் போனது. எங்கள் அருமையான ஹெட் ஆபீஸ் பொருட்கள் கூட விலைக்கு வந்தது. பிறகு எங்கள் கூட்டம் விரல் விட்டு எண்ணும் கூட்டமாக மாறி எல்லோரும் குருவிக்கூடு போல மீண்டும் பாரிஸ் சுங்குராமா தெரு ஆபிசுக்கு மாறினோம். சின்ன டீ போடும் மேடை. ஒரே ஒரு டாய்லெட். அவரவர் மேசை மீது அவரவர் வீட்டு சாப்பாடு. டானெரியை கூட லீஸ் ரிலீஸ் செய்து கொடுத்தோம். தினம் தினம் செட்டில்மென்ட். கோர்ட் கேஸ் என்று எதிராஜன் அணிக்கு வேலை மாறியது. எனக்கு இன்னும் பேக்டரி செட்டில் செய்ய வேண்டிய வேலைகள்.

இப்போது சம்பளம் தாமதம் ஆனது. சில நேரம் இரண்டு மாத சம்பளம் வராமல் போனது. பாவம் எம் டி தான் என்ன செய்வார். மெதுவாக ஒரு புள்ளி போல தொடங்கி பத்தே ஆண்டுகளில் முதல் பத்து நிறுவனங்களில் ஒருவராக இருந்து விருதுகள் கூட பெற்றோம். ஆனால் நிலைமை தலைகீழ் ஆகும் என்று யார் எதிர்பார்த்தார்கள். எனக்கு கவலை பற்றிக் கொண்டது. திருமணம் ஆகி கையில் குழந்தை. வீட்டுக் கடமைகள் இன்னும் முடியவில்லை. இன்னொரு குழந்தை பிறக்கப் போகிற சமயம் வேறு. யாருக்கும் வரக்கூடாது இந்த போராட்டம்.

எனக்கு நிறைய நட்பு வட்டம். ஹெட் ஆபீஸில் இருந்த சமயம் அடிக்கடி என்னைப் பார்க்க நண்பர் திரு சாலமன் சம்பத்குமார் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் லெதர் ப்ரொடக்ட்ஸ் பயிற்சி நிறுவனத்தின் செயல் இயக்குனர்) தமது மாணவர்களுக்கு எங்கள் பாக்டரியில் வேலை கேட்டு வருவார். அவருக்கு 9.30 முதல் 5.30 வரை ஆபீஸ். சனி, ஞாயிறு விடுமுறை. "உங்கள் கம்பெனியில் எனக்கு ஒரு வேலை தாருங்கள்" என்று தமாஷாக கேட்டேன் ஒருமுறை. அவரோ 'சார் நீங்கள் இங்கே ஒரு ராஜா போல இருக்கிறீர்கள்'. எனக்கு இங்கே வேலை தாருங்கள் என்றார் பதிலுக்கு.

அவரை அழைத்து பேசலாம் என்று நினைத்த பொழுது தான் இறைவன் விளையாட்டு. அவரே எனக்கு அழைத்தார். 'பாலா நாம் இன்று மாலை 6 மணி அளவில் காந்தி சிலை அருகே பீச்சில் ஒரு 5 நிமிடம் சந்திக்கலாமா ?' என்று கேட்டார். 'சார் என்ன விஷயம்?" என்று கேட்டேன். 'எல்லாம் நல்ல விஷயம் தான்' வாருங்கள் என்று போனைத் துண்டித்தார். பீச் கிளம்பினேன் அவரை சந்திக்க.


நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

No comments:

Post a Comment