Monday, July 26, 2021

நீங்கா நினைவலைகள் - 32

 நீங்கா நினைவலைகள் - 32

- பாலசாண்டில்யன் 

பட்டப்படிப்பு, 9 டிப்ளோமாக்கள், இரண்டு முதுகலை பட்டம் பிறகு  சைக்காலஜி துறையில்  P. hD பட்டம் கிடைக்கப் பெற  இறையருள், மூத்தோர் ஆசி, அதிக நேரம், பணம், விடாமுயற்சி, வேட்கை, போராடும் குணம், சக்தி எல்லாமே தேவைப்பட்டது இவற்றை அடைய. இருப்பினும் சிலர் என்ன இப்படி சம்பந்தம் இல்லாமல் நிறைய படித்து இருக்கிறீர்கள் என்றும் கேட்டனர். கற்ற கல்வி எதுவுமே வீணாவதில்லை என்பதை ஒவ்வொரு தருணத்திலும் உணர்ந்திருக்கிறேன். 

பயன்படுத்தாத இயந்திரம் துருப்பிடித்து போகும். பயன்படுத்தாத நேரம் விரயம் ஆகும். பயன்படுத்தாத திறமை மழுங்கிப் போகும். பயன்படுத்தாத அறிவு பாரமாகிப் போகும். இந்த தெளிவு கிடைத்தது மனதில். 'பொருள்' அல்லது 'ஸ்வதர்மா' அல்லது அண்மையில் சொல்லப்படுகிற 'இக்கிகாய்' என்கிற 'பர்பஸ் ஆப் லைப்' என்ன என்று யோசித்தது மனம். அதற்கு நான் பெற்ற விடை "இயன்ற அளவு மற்றவர் வாழ்வில் ஒரு சிறிய மாற்றம் ஏற்படுத்த வேண்டும்" -(To make a small difference in someone's life). அதனால் தான் நான் இதுவரை பார்த்த பல வேலைகளில் (1979 - 1997) இந்த பயிற்சி தொடர்பான வேலை எனக்கு பணம், அங்கீகாரம், புகழ் தாண்டிய ஓர் ஆத்ம திருப்தி கிடைத்ததை உணர முடிந்தது. அன்று முடிவு செய்தேன், இனி நான் பயிற்சி, மனநலம், கல்வித் துறையில் ஆலோசனை, இவற்றில் அதிக கவனம் செலுத்துவது என்று. 

வெகு நாட்கள் நானும் எனது மனைவியும் (இரண்டாவது மகள் கைக்குழந்தை, அவளை வீட்டில் விட்டு விட்டு) அலைந்து திரிந்து வீட்டில்  எல்லோரும் ஆவலுடன் காத்திருந்த எனது இரண்டாவது தங்கையின் திருமணம் நடைபெற ஆவன செய்தோம். 'ஆயா ராம் கயா ராம்' என்பது போல எவ்வளவு பணம் வந்தாலும் போதவில்லை. எனது பிள்ளைகளின் படிப்பு,  எதிர்காலம் பற்றிய பயம் கவலை எப்போதும் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருந்தது.  வீட்டில் எப்போதும் விருந்தினர் கூட்டம்,  வீட்டில் அடிக்கடி பஜனை நடந்ததால் பஜனை குழுவினருக்கு சாப்பாடு, காபி என்று எனது அம்மாவும் மனைவியும் பெரும்பாலும் சமையற்கட்டுக்குள்.  பணம்  தண்ணீர் போலத் தான் செலவு ஆனது. நான் (பழைய கம்பெனியின் எம் டி தருவதாக சொன்ன பணம் வராத போதும் கடன் பெற்று) பிளாட் வாங்கி அந்த கடனில் சிக்கித் தவித்ததும் இங்கே சொல்ல இடமில்லை. இயலவில்லை. 

எனக்கு மூன்று நான்கு முறைக்கும் மேலாக நான் கேட்பதற்கு முன்பே கடனாக  பண உதவி  செய்தது எனது மனைவியின் அண்ணன் திரு ஹரிஹரசுதன் அவர்கள் தான். அந்த கடன்களை திரும்பித் தர அல்லது அதில் இருந்து மீள நான் ஓடிக் கொண்டே இருந்தேன் சிறு முயல் போல. அவர் எனது தொழில் ரீதியான பல விஷயங்களுக்கு நல்ல ஆலோசகராகவும் இருந்தார். எனது வாழ்வில் மறக்க இயலாத நபர் அவர்.  

பயிற்சி எனும் போது மறக்கவொண்ணா ஒரு நிகழ்வு CLRI இயக்குனர் டாக்டர் ராமசாமி அவர்களின் தலைமையில் அஸ்ஸாம் -கௌஹாத்தி சென்றது. விமானத்தில் அவர் அருகில் அமரும் வாய்ப்பு. அவருக்கு இணையாக பேசிட என்னிடம் பெரிய விஷயங்கள் இல்லை. என் தந்தைக்கு அருகில் அமர்வது போல மிகுந்த பயபக்தியுடன் இருந்தேன். அவர் எனக்கு உலகளாவிய பல தகவல்கள் சொன்னார். பிறகு அங்கே எனது ஓரிரண்டு செஷன் இருந்தது. 

பிறகு அவரோடு அங்கே பெருமாள் கோவில், நவகிரக கோவில் (எல்லாமே சிவலிங்க வடிவத்தில்),  1565 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட காமாக்யா கோவில்  (காமாட்சி அம்மன் - 51 பழம்பெரும் சக்தி பீடங்களில் ஒன்று - 1930 களில் காஞ்சி மஹாஸ்வாமி அங்கே, மற்றும் பாலாஜி கோவில், ஆதி சங்கரர் கோவில் எல்லாம்  போய் இருந்ததாக சொல்லப்படுகிறது) சென்றது என்றும் கண்ணுக்குள் இருக்கும். என்னோடு திரு ராமகிருஷ்ணன் அவர்கள் உட்பட பல அதிகாரிகள் வந்திருந்தனர்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பாக நான் நடத்திய TOT (Training of the Trainer) - சுமார் நான்கைந்து பாட்ச்கள் செய்தேன். அப்போது (முதலில் பிளாக் போர்ட் சாக் பீஸ், பிறகு வைட் போர்ட் மார்க்கர், பின்னர் OHP என்று சொல்லக்கூடிய ஓவெர்ஹேட் ஸ்லைடு ப்ரொஜெக்டர் மூலம் தான் பெரும்பாலான பயிற்சிகள் நடந்தன) என்னோடு அரசு நியமித்த இதர மாஸ்டர் ட்ரெய்னர்கள் மிகவும் அனுபவசாலிகள். இருப்பினும், நான் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு பாட்ச்சும் (5 நாட்கள் தொடர் பயிற்சி) சிறப்பாக செய்து முடித்த போது திருமதி குத்சியா காந்தி IAS மேடம் மற்றும் திரு சந்தோஷ் பாபு IAS (செயல் இயக்குனர்) எனக்கு 'ஸ்டாண்டிங் ஓவேஷன்' கொடுத்து என்னைப் பாராட்டியது இன்றும் கண் முன் தெரிகிறது. எனக்கு அவ்வமயம் உதவியவர்கள் டாக்டர் ஆறுமுகம், நண்பர் திரு சந்திரமோகன், திரு கிரிஷ்ணப்ரசாத் மற்றும் டாக்டர் ஸ்டக்கி தேவபாதம் போன்றவர்கள் (பிரதிபலன் பாராத நண்பர்களின் உதவி அது). பிறகு அந்நிறுவனம் எனக்கு பஞ்சாயத்து லெவல் பெடெரேஷன் லீடர்ஸ் பலருக்கு எல்லா மாவட்டங்களில் இருந்தும் பயிற்சி தர அழைத்தனர். அதே போல DSMS மேனேஜர்களுக்கு மார்க்கெட்டிங் பயிற்சி தரவும் தான். 

பிறகு CLRI - CLE ஆண்டு தோறும் வழங்கக்கூடிய 'டிசைனர் விருது' க்கான ஜூரி தேர்வில் தொடர்ந்து மூன்று வருடங்கள் என்னை அழைத்தனர். அதே போல NIFT நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களின் ப்ராஜெக்ட் ஆய்வு செய்து மதிப்பெண் வழங்க என்னை தொடர்ந்து அழைத்தனர் இயக்குனர் தேவதாஸ் மற்றும் ப்ரொபசர் திரு அறவேந்தன். அதே போல MOP கல்லூரியின் 'MOP Bazaar' நடத்தும் போது முதல் பொருள் வாங்கும் சிறப்பு விருந்தினராக நானும் எனது மனைவியும் அழைக்கப்பட்டோம். அதே போல அந்தக் கல்லூரி மாணவிகளின் ப்ராஜெக்ட் (சுய தொழில் சார்ந்த) ப்ரெசென்ட்டேஷன் நிகழ்வுக்கு பல முறை ஜூரியாக அழைத்து இருந்தனர். அவற்றை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு அண்ணா யூனிவர்சிட்டி நடத்திய 'பிசினஸ் காம்பெடிஷன்' (பரிசுத்தொகை 1 லட்சம் ரூபாய் - கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி வழங்கும் பரிசு) ஒன்றில் மொத்தம் 7 பேர் நடுவர்கள். அதில் டாக்டர் நடராஜன் அவர்களின் பரிந்துரையில் நானும் உண்டு அவருடன். மறக்க முடியாத ஒரு நிகழ்வு அது.

ஒவ்வொரு முறை நாங்கள் மகளிர் தொழில் முனைவோர் பயிற்சி செய்த பொழுதும் மறுக்காமல் கலந்து கொண்டு அந்த நிகழ்வை வெற்றிகரமாக மாற்றியது மூன்று பேர் அவர்கள் திரு விஜயராகவன் (கனரா வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, இஃபாய், சக்தி குரூப் என்று பல இன்னிங்ஸ் விளையாடி ஓய்வு பெற்று இப்போது கோவையில் இருப்பவர்) - "எப்படி பாங்க் லோன் பெறுவது?" என்று பேசிட இவரை விட்டால் யாரும் கிடையாது. அதே போல வெற்றி பெற்ற (சிறந்த தொழில் முனைவோர் விருதுகள் பெற்றவர்கள்) இரண்டு தொழில் அதிபர்கள் திருமதி சாரதா ரமணி மற்றும் திருமதி ஹேமலதா - தமது வெற்றிக்கதைகளை பகிர்ந்து கொண்டு ஊக்கம் அளிக்க. இவர்களை எப்படி மறக்க இயலும்?

தொடர்ந்து ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி, ஜெயின் கல்லூரி வேப்பேரி, மீனா முத்தையா கல்லூரி அடையாறு போன்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் தொழில் முனைவோர் பயிற்சி அளித்தது எங்கள் டீம். 

இப்படிப்பட்ட பல நிகழ்வுகளில் எல்லாம் எங்கள் பயிற்சி நிறுவனத்தையே நான் முன்வைத்தேன். 'IILP பாலா' என்கிற அடையாளம் அது. அதன் விளைவாக மகளிர் மேம்பாட்டு கழகத்தின் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களின் திட்ட அதிகாரிகள் (திருமதி சஜீவனா, திருமதி மாதவி (பின்னாளில் அவர் எனக்கு பல்வேறு வாய்ப்புகள் அளித்தார்), மற்றும் திரு மோகன்) மூலம் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் பல பெண்கள் திறன் பயிற்சி பெறத் தொடங்கினர். அதே போல சென்னை கலெக்டர் மூலம் சென்னையில் ஆங்காங்கே பங்க் கடைகளில் அமர்ந்து வேலை பார்க்கும் செருப்பு தைக்கும் தொழிலார்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி, இலவச 'வேலைக்கான கிட்' எல்லாம் வழங்கினோம். இந்த வேலைகளில் தான் எவ்வளவு திருப்தி. 

பிறகு நானும் திரு சுகுமாரும் சேலம் நகரின் 'குகை' என்கிற இடம் சென்று அங்கே இருந்த ஆதி திராவிட இனத்து மக்களுக்கு இலவச காலணி பயிற்சி மற்றும் பண உதவி செய்தோம் - அது NLDP நிகழ்வாக இருந்தது. 

பிறகு திருமதி சபீதா IAS அவர்களின் தொடர்பு (திரு கிறிஸ்டோதாஸ் காந்தி IAS - குத்சியா மேடம் அவர்களின் கணவர்) கிடைத்தது. அதனால் சென்னை ரேஷன் கடைகளில்  பணி புரியும் 1800 பேர்களுக்கு சிறப்பு 'வாடிக்கையாளர் உறவு' தொடர்பான ஒரு நாள் பயிற்சி வழங்கினேன். பின்னர் CMDA பொறியாளர்களுக்கு, காவல் துறை அதிகாரிகளுக்கு 'ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட்' பயிற்சி வழங்கினேன். தொடர்ந்து பதிவுத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் வாய்ப்பினை சபிதா மேடம் வழங்கினார். அவற்றை எல்லாம் கடந்து அடுத்த நிலையாக தமிழகத்தின் எல்லா மாவட்டங்களின் CEO/DEO/AEO எனும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுமார் மூன்று நான்கு முறை பயிற்சி தருகிற வாய்ப்பு அளித்தார். 

எல்லாமே ஒவ்வொரு வகையான சவால் தான். இந்த சவால்கள் எல்லாமே 'இன்னும் இன்னும்' என்று மனதைத் தூண்டியது. அதற்காக என்னை மேலும் மேலும் தயார் செய்து கொள்ள வைத்தது. அதனால் நானும் பற்பல பயிற்சி வகுப்புகளில் ஒரு மாணவனாக கலந்து கொண்டேன். பல நூல்கள் வாசித்தேன். பல வீடீயோக்கள் ரெடி செய்தேன். பல ப்ரெசென்ட்டேஷன் ரெடி செய்தேன். (இது போதாது என்ற குரல் மனதில் இருந்து சொல்லி என்னை விரட்டிக் கொண்டு இருந்தது). அதனால் NLP Basic and Masters ( மறைந்த குருஜி அரவாமுதன் மூலம்) மற்றும் TA 101 Certificate (Both US certified) - திரு ராதாகிருஷ்ணன் மற்றும் மேடம் சூசன் ஜார்ஜ் இவர்களிடம் பயிற்சி பெற்றேன். பிறகு மேஜிக் செய்வதில் (மும்பையில் இருந்து திரு பூபேஷ் தவே அவர்களை வரவழைத்து) பயிற்சி பெற்றேன். 

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

No comments:

Post a Comment